செஞ்சி, ஏப். 25: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அப்பம்பட்டு கிராமத்தில் இருந்து காஷ்மீர் பகுதிக்கு சுற்றுலா சென்று நண்பர்களுடன் உயிர்தப்பித்து வந்த அப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சையத் உஸ்மான் (40) கூறியதாவது: நாங்கள் நண்பர்கள் 5 பேரும் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா பயணமாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இருதினங்கள் சுற்றிப் பார்க்க சென்றோம். அப்போது காஷ்மீரில் பஹல்காம் என்ற பள்ளத்தாக்கு உள்ள மலைப்பகுதிக்கு சென்றோம். அங்கு குதிரையில் 3 கிமீ மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தோம். அப்போது வெடிக்கும் சத்தம்கேட்டது, பட்டாசு தான் வெடிக்கிறது என்று இருந்தோம்.
ஆனால் குதிரை வைத்திருந்தவர் உடனே நீங்கள் மலையில் இருந்து கீழே ஓடிவிடுங்கள் துப்பாக்கி சுடுகின்ற சத்தம் கேட்கிறது என கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் மலையில் இருந்து 3 கி.மீ. தூரம் ஓடிவந்து இறங்கினோம். அப்போது ஒருவர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பின்னர் படிப்படியாக மேலும் சிலர் துப்பாக்கியால் அங்கு இருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி சுடத் தொடங்கினர். அதிர்ச்சியடைந்த நாங்கள் வேகமாக ஓடி ஓட்டலுக்குள் புகுந்து தப்பித்து வந்தோம். பின்னர் நகர் விமான நிலையத்திலிருந்து எங்களை உதவி மைய அதிகாரிகள் தொடர்பு கொண்டு வழிகாட்டினர். அவர்களால் நகர் விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு வந்தோம். பின்னர் டெல்லியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எங்களை சந்தித்து உதவிசெய்து சென்னை செல்ல விமானத்திற்கு அனுப்பி வைத்தார். நாங்கள் பத்திரமாக உயிர் பிழைத்தோம். காஷ்மீரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று கூறினார்.
The post காஷ்மீரில் சுற்றுலா சென்று உயிர்தப்பியவர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் ஓட்டலுக்குள் புகுந்து தப்பித்தோம் appeared first on Dinakaran.