புதுச்சேரி, மே 5: பங்கு சந்தையில் முதலீடு செய்து லட்சம், லட்சமாக சம்பாதிப்பது எப்படி என வாட்ஸ் அப்பில் வந்த தகவலை தொடர்ந்து புதுவையை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் ரூ.14 லட்சம் இழந்தார். புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த 43 வயதுள்ள அரசு ஊழியர் ஒருவருக்கு, வாட்ஸ் அப்பில் மர்ம நபரிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எப்படி, திறமையாக பங்குச்சந்தையில் சம்பாதிப்பது எப்படி, மிக அதிக லாபத்தை தருகின்ற பங்குகள் எது?.
நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மாதம் பல கோடி ரூபாயை இதில் முதலீடு செய்து சம்பாதித்துள்ளனர். பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது எப்படி. இது போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த வாட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிடபட்டிருந்தது. இந்த தகவலை நம்பி அந்த அரசு ஊழியர், வாட்ஸ்அப் குழுவில் இணைந்துள்ளார். பிறகு அவருக்கு பங்குச்சந்தை பற்றிய பல்வேறு தகவல்கள் கடந்த 15 நாட்களாக தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அவர் பங்கு சந்தை பற்றி தமக்கு அதிகம் தெரிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு அவர்கள் அனுப்பிய பங்குச் சந்தை லிங்க்கில் பல்வேறு தவணைகளாக ரூ.14 லட்சம் முதலீடு செய்துள்ளார். அவருக்கு ரூ.35 லட்ச வருமானம் வந்துள்ளதாக அவருடைய வாட்ஸ்அப் கணக்கில் காண்பிக்கவே, தனக்கு வந்த வருமானத்தை எடுக்க முயற்சி செய்தபோது வரி கட்ட வேண்டும், வருமான வரி கட்ட வேண்டும் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர் நேற்று முன்தினம் இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post போலி பங்கு சந்தையில் ரூ.14 லட்சம் இழந்த அரசு ஊழியர் appeared first on Dinakaran.