புதுச்சேரி, மே 5: புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்ணாசாலையில் ரவுடி ஒருவர் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, அந்த ரவுடி போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். உடனே போலீசார் அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், கண் டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த ரவுடி முகேஷ் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதைடுத்து அவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதே போன்று புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அன்சார் பாஷா, ஏட்டு சுந்தரம், கிரைம் போலீஸ் ஜெயபிரகாஷ் ஆகியோர் ரோந்து சென்றனர்.
அப்போது லாஸ்பேட்டை புதுசத்திரம், இடையஞ்சாவடி, முத்துமாரியம்மன் கோயில் அருகே ஆசாமி ஒருவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இடைஞ்சாவடி பகுதியை சேர்ந்த லெனின்குமார் (எ) சஞ்சய் (எ) லட்டு சஞ்சய் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
The post பொதுமக்களை மிரட்டிய ரவுடி உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.