திருவெண்ணெய்நல்லூர், மே 6: திருவெண்ணெய்நல்லூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு, சென்னை- திருச்சி சாலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், முத்தையாபுரத்தை சேர்ந்த ஜெயராம் மனைவி மாசா பேச்சு (50), அவரது மகன் ராஜாராமன், இன்னாபுரம் கிராமத்தை சேர்ந்த முனியராஜா மனைவி வீரஜோதி (25), மகள் முவினா (2 ½), குரும்பூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த அல்போன்ஸ் மனைவி வேலம்மாள் (60), சேசய்யா (63), சேசையா மகள் தமிழரசி (33), திருச்செந்தூரை சேர்ந்த சிவக்குமார் மகள் இயல்மதி (7), சீனிவாசகோபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சாய்ராம் (7), விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, வெள்ளகோட்டை கிராமத்தை சேர்ந்த தில்லை நடராஜன் மகன் வேல்முருகன் (51), சென்னை பெருங்களத்தூர், அலெக்ஸ் ராஜா மனைவி ஜெயலட்சுமி (24), சென்னை விருகம்பாக்கம் நந்தகோபால் மகன் பொன்னுராஜ் (33) பொன்னுராஜ் மகள் ஆரியா (2) என 4 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 8 பேர் அருகில் உள்ள இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். இவ்விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post திருவெண்ணெய்நல்லூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் காயம் appeared first on Dinakaran.