புதுச்சேரி, மே 13: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட நிர்வாக விஷயங்கள் குறித்து ஒன்றிய அமைச்சரிடம் பேசியதாக முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் பாஜ தேர்தல் பொறுப்பாளரான, ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 10ம்தேதி முதன்முறையாக புதுச்சேரி வந்தார். தனியார் ஓட்டலில் நடந்த பாஜகவின் மையக்குழு கூட்டம் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டாவியா, சட்டசபையில் உள்ள கேபினட் அறையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.
அப்போது எப்படி இருக்கிறீர்கள்? என அமைச்சர் கேட்டபோது, சிரித்துக் கொண்டே நான் மகிழ்ச்சியாக இல்லை, நடப்பது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை போன்று இல்லை. நான் ஒரு இடமாற்றம் போட்டால்கூட அதில் தலையீடுகள் உள்ளது. ஒரு அதிகாரியை தண்டனை கொடுக்கும் வகையில் இடமாற்றம் செய்தால், அவர் அதனை ரத்து செய்துவிட்டு, தன் பக்கத்திலே வைத்துக் கொண்டால் எப்படி? நிலைமை இப்படியே போனால் தேர்தலில் மக்களை எப்படி சந்திப்பது. மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. இதே நிலைமை நீடித்தால் கடந்த காங்கிரஸ் ஆட்சியை போன்றுதான் ஆகிவிடும் என முதல்வர் ஒன்றிய அமைச்சரிடம் ஆதங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஒவ்வொரு பிரச்னையும் அமர்ந்து பேசி சரி செய்வோம் என கூறிவிட்டு சென்றார்.
இதற்கிடையே நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கான தகவல் சிற்றேட்டினை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: புதுச்சேரியில் அறிவித்த திட்டங்கள் அத்தனையும் செயல்படுத்துகின்ற அரசாக தேஜ கூட்டணி அரசு உள்ளது. ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறோம். ரேஷன் கடைகளில் இலவச அரிசி கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் கோதுமையும் கொடுக்கப்படும். புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய தொழிலாளர், வேலை வாய்ப்பு மற்றும் இளைஞர் நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவரிடம், மத்திய அரசு தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என வலியுறுத்தியதோடு புதுச்சேரி நிர்வாகம் தொடர்பாகவும் பேசினேன். என்ஆர்காங்கிரஸ் கட்சியின் கொள்கையே மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதுதான்.
என்.ஆர்.காங்கிரஸ் துவங்கிய நாளில் இருந்து கேட்கப்படும் முக்கிய கோரிக்கை மாநில அந்தஸ்துதான். அதனை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். எதுவுமே கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் வாழ்க்கை, அதே நம்பிக்கையில்தான் மாநில அந்தஸ்தினை கேட்டு மத்திய அரசை வலியுறுத்துகிறோம். மாநில அந்தஸ்து கிடைக்காவிட்டால் பாஜக கூட்டணியில் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, மாநில அந்தஸ்து கிடைப்பதற்கு மத்திய அரசை எங்களுடைய அரசு நிச்சயமாக வலியுறுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
The post விரைவில் ரேஷன் கடைகளில் கோதுமை புதுச்சேரி அரசு நிர்வாகம் குறித்து மத்திய அமைச்சரிடம் பேசினேன் முதல்வர் ரங்கசாமி பேட்டி appeared first on Dinakaran.