சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சக்தி கரக ஊர்வலம்

மேல்மலையனூர், ஏப். 29: சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சக்தி கரக ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலாகும். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை தின ஊஞ்சல் உற்சவம் இம்மாதம் நடைபெறாமல் மாசி மாதம் மயான கொள்ளை தினத்தில் அம்மன் சிவனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷத்தை ஆக்ரோஷ உருவெடுத்து நீக்கிய நிகழ்வு நடைபெற்றது.

இதையடுத்து நேற்று சித்திரை மாத அமாவாசை தினத்தில் அம்மன் கோபம் தணிந்து சாந்தமாகி சிவனுடன் அக்னி குளத்தில் நீராடி பூ கரகமாக மேல்மலையனூர் முழுவதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேல்மலையனூர் வந்ததால் பக்தர்களின் கூட்டமாக நிரம்பி காணப்பட்டது. இதற்காக தமிழக அரசின் சார்பாக சிறப்பு பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டது. மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 450க்கும் மேற்பட்ட போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோயில் உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் சுரேஷ், சேட்டு (எ) ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் கோயில் மேலாளர் மணி, மணியம் குமார், கணக்காளர் சதீஷ் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சக்தி கரக ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: