காஞ்சியில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட ரவுடி வசூல் ராஜா யார்?: கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பிடித்து விசாரணை பரபரப்பு தகவல்கள் அம்பலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல் ராஜா நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. வசூல் ராஜா தேசிய கட்சி கூட்டங்களுக்காக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புரங்களில் தொழிலதிபர்கள் முதல் வியாபாரிகள் வரை பலரையும் மிரட்டி பல லட்சம் வசூலித்து வந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ெகாலை தொடர்பாக 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாமல்லன் நகர், கே.டி.எஸ். மணி தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மகன் ராஜா(எ) வசூல் ராஜா(38). தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியாக வலம் வந்தார். பிரபல தாதா ஸ்ரீதர் நண்பரான தியாகு என்பவருக்கு ராஜா வலது கரமாக செயல்பட்டு வந்துள்ளார். தியாகு சொல்லும் பணியை மறுப்பு பேசாமல் ராஜா முடித்து வந்துள்ளார். பிற்காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் கழிவு பொருட்களை ஏலம் எடுப்பதில் தியாகுவுக்கும் ராஜாவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இதனால் தியாகுவிடம் இருந்து பிரிந்து எதிர் குழுவான நிவாஸ்கான் என்ற ரவுடியுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் ரவுடி நிவாஸ்கானை பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரத்தில் கம்போடியாவில் உயிரிழந்த தாதா ஸ்ரீதர் போன்ற உருவாக வேண்டும் என்ற நோக்கில் தனியாக ரவுடி ராஜா செயல்பட்டார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் ரவுடி நிவாஸ்கானை கடந்த 2018ம் ஆண்டு ராஜா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை ெசய்தார். இதுபோல் ரவுடி ராஜா 4 கொலை உட்பட 28 வழக்குகள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. பின்னர் தனியாக காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த ராஜா ஒரு கட்டத்தில், காஞ்சிபுரம் பகுதியில் தொழிலதிபர்கள் முதல் வியாபாரிகள் வரை அனைவரையும் மிரட்டி பல லட்சம் ரூபாய் வசூலில் ஈடுபட்டு வந்தார். இதனால் தான் இவருக்கு வசூல் ராஜா என காஞ்சிபுரம் மாவட்ட ரவுடிகள் ராஜாவுக்கு பட்டப்பெயர் சூட்டி, வசூல் ராஜா என்று அழைத்து வந்தனர். வசூல் ராஜாவுக்கு 38 வயது என்றாலும், அவன் சொல்படி தான் காஞ்சிபுரம் மாவட்ட ரவுடிகள் கேட்பார்கள்.

பணப்புழக்கம் அதிகமானதால், படப்பை குணா, சீர்காழி சத்தியா உள்ளிட்ட ரவுடிகள் உதவியுடன் பாஜகவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாஜக கூட்டம் என்றால் அனைத்து செலவுகளையும் வசூல் ராஜா தான் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக கூட்டம் நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்பே காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி பல லட்சம் பணம் வசூலித்து கட்சிக்காக செலவு செய்து வந்துள்ளார். இதற்கிடையே ரவுடி வசூல் ராஜா பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலி சொல்படி சிறிது காலமாக எந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் ஆன்மிகத்தில் முழு ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார். அதேநேரம் தனது வசூல் வேட்டையை அவர் கைவிடவில்லை. பாஜகவில் மாநில நிர்வாகிகளுடன் மிகவும் நெருக்கமாக ரவுடி வசூல் ராஜா இருந்து வந்துள்ளார். கட்சிக்காக பல லட்சம் பணத்தை வாரி செலவு செய்வதால் பாஜக சார்பில் அவருக்கு மாவட்ட விளையாட்டு அணியில் முக்கிய பதவி வழங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தான் காஞ்சிபுரம் திருக்காளிமேடு ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள ரேஷன் கடை அருகே தனது நண்பர்களுடன் நேற்று மதியம் பேசி கொண்டிருந்த போது, பைக்கில் வந்த கும்பல் ஒன்று, ரவுடி வசூல் ராஜா முகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி அவரை கொடூரமாக அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரவுடி வசூல் ராஜா கொலை தொடர்பாக 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் வசூல் ராஜா கொலைக்கு பின்னால் அரசியல் செல்வாக்கு உள்ள நபர் ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட வசூல் ராஜா நாட்டு வெடிகுண்டுகளை கையாள்வதில் திறமையான நபர். பல குற்றச்சம்பவங்களில் அவர் நேரடியாக நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் இந்த கொலைக்கு பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காஞ்சியில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட ரவுடி வசூல் ராஜா யார்?: கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பிடித்து விசாரணை பரபரப்பு தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: