பெரம்பலூரில் பட்டப்பகலில் துணிகரம் பழவியாபாரி வீட்டில் 17.5 பவுன் நகை கொள்ளை

*மர்ம நபர்களுக்கு வலை

பெரம்பலூர் : பெரம்பலூரில் பட்டபகலில் பழவியாபாரி வீட்டில் 17 1/2 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறனர்.பெரம்பலூர் ரோஸ்நகர், 3வது தெருவை சேர்ந்தவர் கதலீஷ்வரன்(43). இவரது மனைவி தேன்மொழி(35). இவர்களுக்கு தமிழரசி(16), தீபா(13) ஆகிய 2 மகள்கள், மணிகண்டன்(11) என்ற ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 11ம்தேதி இரவு தேன்மொழி தனது மகள்கள், மகனுடன் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக சென்று இருந்தார். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கதலீஷ்வரன் பழக்கடை வைத்து நடத்தி வருவதால் மறுநாள் 12ம்தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுவிட்டார்.

புதுக்கோட்டைக்கு சென்றவர்கள் 12ம்தேதி இரவு வீட்டிற்கு வந்து போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதில் இருந்த 6 பவுன் நெக்லஸ் 2, 4 வளையல், 5 பவுன் டாலர் செயின் ஒன்று, இரண்டரை பவுன் ஒரு பிரேஸ்லெட் என மொத்தம் 17 1/2 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

ஆசிரியை வீட்டிலும் கொள்ளை:
இதேபோல், பெரம்பலூர் பிரம்மா நகரை சேர்ந்தவர் மணி(58). சிறுவாச்சூரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதா (56). இலுப்பைக்குடி அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களது மகன்கள் திவாகர் (34), கவாஸ்கர் (29) ஆகியோர் சென்னையில் தங்கி பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 12ம் தேதி அதிகாலை கணவன்- மனைவி இருவரும் நாமக்கல் சென்றுவிட்டு இரவு வீடுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்ப்பட்ட நிலையில் துணிமணிகள் சிதறி கிடந்தது. அதில் இருந்த 1 ஜோடி வெள்ளி வளையல், 1 வெள்ளி குத்துவிளக்கு, 1 ஜோடி வெள்ளிக் காப்பு, 1 ஜோடி வெள்ளி கொலுசு என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 2 பேர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றார்.பெரம்பலூர் நகரில் பட்டப்பகலில் 2 வீடுகளில் ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்கம்- வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பெரம்பலூரில் பட்டப்பகலில் துணிகரம் பழவியாபாரி வீட்டில் 17.5 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: