கோதமங்கலம் அருகே வீட்டிற்குள் ஆதிவாசி பெண் கொலை; கள்ளக்காதலன் கைது

*போலீசார் விசாரணை

பாலக்காடு : கோதமங்கலம் அருகே வீட்டிற்குள் ஆதிவாசி பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் மாமலைக்கண்டம் அருகே எளம்பளாசேரியை சேர்ந்த ஆதிவாசி பெண் மாயா (37). இவர், ஏற்கனவே திருமணம் முடித்து குடும்ப பிரச்னை காரணமாக கணவர், குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக எளம்பளாசேரியில் வாடகை வீட்டில் வசிந்து வந்தார். கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில் இவருக்கு மலயாற்றூரை சேர்ந்த ஜிஜோ ஜோண்சன் (33) என்கிற ஆட்டோ டிரைவரிடம் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு இருந்தது. இவரும் ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தை, மனைவியை விட்டு பிரிந்து வாழ்பவர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் குடி போதையில் இருந்துள்ளனர்.

இதற்கிடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் ஆத்திரமடைந்த ஜிஜோ ஜோண்சன், மாயாவை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர், ஆட்டோவை அழைத்து வந்து மனைவியை கோதமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஆட்டோ டிரைவரிடம் கூறியுள்ளார்.

மாயாவின் உடல் கிடப்பதில் சந்தேகமடைந்த டிரைவர் உடனடியாக பஞ்சாயத்து உறுப்பினர் ஸ்ரீஜா பிஜூவிற்கும், ஆஷா வர்க்கருக்கும் தகவல் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

கோதமங்கலம் போலீசார் உடனடியாக விரைந்து வந்து வீட்டை ஆய்வு செய்தனர். இதில் ஆதிவாசி பெண் மாயா கொலை செய்யப்பட்டதற்கு அறிகுறிகள் தெரிய வந்தன. தொடர்ந்து, மாயாவை கொலை செய்த ஜிஜோ ஜோண்சனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post கோதமங்கலம் அருகே வீட்டிற்குள் ஆதிவாசி பெண் கொலை; கள்ளக்காதலன் கைது appeared first on Dinakaran.

Related Stories: