*பெண் உள்பட 2 பேர் கைது : 7 பேருக்கு போலீஸ் வலை
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் பாலக்காடு அருகே தோஷத்தை நிவர்த்தி செய்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி ஜோதிடரை வீட்டுக்கு வரவழைத்து இளம்பெண்ணுடன் நிர்வாணமாக நிற்க வைத்து போட்டோ எடுத்து மிரட்டி நகை, பணம், செல்போனை பறித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மைமூனா (44). கடந்த சில வருடமாக கூடலூரில் வசித்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு இவரும், வாலிபர் ஒருவரும் பாலக்காடு கொல்லங்கோட்டில் உள்ள ஒரு பிரபல ஜோதிடரின் வீட்டுக்கு சென்றனர்.
தமிழக எல்லையில் உள்ள கொழிஞ்சாம்பாறையில் வசிக்கும் தான், கணவரை பிரிந்து வாழ்வதாகவும், வீட்டில் சில பிரச்னைகள் இருப்பதால் தோஷத்தை நிவர்த்தி செய்ய வீட்டுக்கு வந்து பூஜை செய்ய வேண்டும் என்றும் ஜோதிடரிடம் மைமூனா கூறி இருக்கிறார்.இதை நம்பிய ஜோதிடரும் வீட்டுக்கு வருவதாக கூறி இருக்கிறார்.
அதன்படி நேற்று முன்தினம் காலை ஜோதிடர் கொழிஞ்சாம் பாறைக்கு சென்றார். அவரை 2 பேர் அருகில் கல்லாண்டிச்சுள்ளாவில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அது பல்வேறு கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பிரதீஷ் (36) என்ற ஒரு ரவுடியின் வீடாகும்.
வீட்டுக்கு சென்ற பின்னர் ஜோதிடர் பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை தொடங்கினார். இந்த சமயத்தில் அந்த வீட்டில் 2 பெண்கள் உள்பட 9 பேர் இருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த பிரதீஷ், ஜோதிடரை மிரட்டி வீட்டிலுள்ள வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். இந்த சமயத்தில் மைமூனாவும் அறைக்கு வந்தார்.
பின்னர் ஜோதிடரை 2 பேரும் சேர்ந்து மிரட்டி அவரது ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தினர். தொடர்ந்து அவரை மைமூனாவுடன் சேர்த்து நிற்க வைத்து பிரதீஷ் ஆபாச புகைப்படங்களை எடுத்துள்ளார்.
பின்னர் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாகவும், உறவினர்களுக்கும் அனுப்பி வைப்போம் என்றும் கூறி மிரட்டி 2 பேரும் ஜோதிடர் அணிந்திருந்த நான்கரை பவுன் நகை, செல்போன், ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்து உள்ளனர்.
மேலும் ரூ.20 லட்சம் பணமும் கேட்டு அவர்கள் மிரட்டினர். இந்த சமயத்தில் தற்செயலாக ஒரு குற்ற வழக்கு தொடர்பாக பிரதீஷை தேடி பாலக்காடு சிற்றூர் போலீசார் வீட்டுக்கு வந்தனர். போலீசை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தனது உடைகளை எடுத்துக் கொண்டு ஜோதிடரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.போலீசார் விரட்டிச் சென்ற போதிலும் யாரையும் பிடிக்க முடியவில்லை. இதனால் சிற்றூர் போலீசார் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். அப்போது வீட்டில் நடந்தது குறித்து எதுவும் போலீசாருக்குத் தெரியாது. இதற்கிடையே போலீசை கண்டு பயந்து ஓடிய மைமூனா வழியில் கீழே விழுந்தார். அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதைப் பார்த்த அந்த பகுதியினர் மைமூனாவிடம் விவரத்தை கேட்டனர். ஆனால் அவர்களை மைமூனா போதையில் திட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பகுதியினர் கொழிஞ்சாம்பாறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் தான் ஜோதிடரை மிரட்டி நகை, பணத்தை பறித்த சம்பவம் குறித்து தெரியவந்தது.அதைத்தொடர்ந்து மைமூனாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசில் ஜோதிடர் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜோதிடரை மிரட்டிய கும்பலில் இருந்த நல்லேப்பிள்ளி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ் (26) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரதீஷ் உள்பட 7 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
The post ஜோதிடரை வீட்டுக்கு வரவழைத்து நிர்வாணமாக பெண்ணுடன் நிற்க வைத்து போட்டோ எடுத்து மிரட்டி நகை பறிப்பு appeared first on Dinakaran.