அவிநாசி அருகே தம்பதி வெட்டிக்கொலை

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (87). இவரது 2வது மனைவி பர்வதம் (75). தம்பதி இருவரும் அங்குள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று வீட்டில் பழனிச்சாமி, பர்வதம் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பழனிச்சாமியின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த அவரது உறவினரான சின்னப் பெரியசாமியின் (80) மூத்த மகன் ரமேஷ் (43)தான் இருவரையும் கொலை செய்தது என தெரியவந்தது.

பழனிச்சாமி குடும்பத்திற்கும், சின்னப்பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே ஆடு, மாடு, மற்றும் கோழிகள் வேலி தாண்டி மேய்ச்சலுக்காக வருவது குறித்து முன் விரோதம் இருந்துள்ளது. இதுதொடர்பாக ரமேஷ் அவர்களிடம் நேற்று முன்தினம் நீண்ட நேரம் சண்டை போட்டுவிட்டு சென்றுள்ளார். நள்ளிரவில் மது போதையில் பழனிச்சாமியின் வீடு புகுந்து தம்பதியை அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு யாரோ கொலை செய்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். பின்னர் மொபட்டில் தப்பிச்சென்றபோது கீழே விழுந்து படுகாயத்துடன் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

The post அவிநாசி அருகே தம்பதி வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: