போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலமோசடி: மாஜி அமைச்சர் உதவியாளரின் அண்ணன் உள்பட இருவர் கைது

ஆவடி: போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலமோசடி செய்த வழக்கில் மாஜி அமைச்சர் உதவியாளரின் அண்ணன் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில், அண்ணாநகர் மெட்ரோ ஜோன் அப்பார்ட்மென்ட் பகுதியைச் சேர்ந்த ஜெயசந்திரன் (33) என்பவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் வேர்அவுஸ் தொழில் செய்து வருகிறேன். எனது வீட்டின் அருகே குடியிருந்து வரும் பராக்சூடா என்பவர் மூலம் சுரேந்தர் என்பவர் அறிமுகமானார்.

சுரேந்தர் என்பவர் பொது அதிகாரம் பெற்ற திருமுல்லைவாயல் பாலாஜி நகரில் 7,200 சதுர அடி இடம் உள்ளது. அவரிடம் விலைபேசி மேற்படி இடம் ரூ.3.66 கோடிக்கு பேசி அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் எனது தந்தை அருணாச்சலம் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதில் 3,600 சதுரடி இடத்தை உண்மையான உரிமையாளரான உமையாள் போல் ஆள்மாறாட்டம் செய்து உமையாள் (எ) ராணி என்பவர் கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம், மீனாம்பாறை பகுதியைச் சேர்ந்த பவானி (எ) பூங்கொடி (45) என்பவருக்கு போலியான தான செட்டில்மென்ட் கொடுத்துள்ளார்.

போலியான தான செட்டில்மென்ட்டை வைத்து பவானி (எ) பூங்கொடி சுரேந்தர் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளார். சுந்தரேசன் எனது தந்தை அருணாச்சலத்திற்கு விற்பனை செய்து மோசடி செய்துள்ளார். மேற்படி போலியான செட்டில்மென்ட் ஆவணம் மற்றும் போலியான பொது அதிகார பத்திரம் ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜனின் உதவியாளர் முத்து பாண்டியனின் அண்ணனான விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து (52) போலி பத்திரம் தயார் செய்து கொடுத்து, அதை விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

மேற்படி இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டச் செல்லும்போது அடையாளம் தெரியாத ஒருநபர், மேற்படி இடம் நாராயணன் என்பவருக்குச் சொந்தமானது என்றும், அந்த இடத்தை தரை வாடகைக்குதான் வாங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். வேறு ஒருவருக்குச் சொந்தமான சொத்தை முன்னாள் அமைச்சரின் உதவியாளரின் அண்ணன் கூட்டு சேர்ந்து போலியான ஆவணங்கள் தயாரித்து மற்றும் போலியான நபர்களை வைத்து எனக்கு விற்பனை செய்து சட்ட விரோத லாபம் அடைந்துள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பெருமாள் தலைமையில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் போலீசார் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்தநிலையில் கோயம்புத்தூர் பல்லடம் பகுதியைச் சேர்ந்த பவானி (எ) பூங்கொடி (45) மற்றும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து (52) ஆகிய இருவரையும் கைது செய்து நேற்று முன்தினம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலமோசடி: மாஜி அமைச்சர் உதவியாளரின் அண்ணன் உள்பட இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: