மும்பையில் இருந்து கடத்தி வந்து போதை மாத்திரை விற்ற 5 வாலிபர்கள் சிக்கினர்: 570 மாத்திரைகள் பறிமுதல்

பெரம்பூர்: சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகளை விற்பவர்கள் மற்றும் அதனை வாங்குபவர்கள் என அனைவரையும் கண்காணித்து தொடர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வட சென்னையில் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவதாகவும், அதனை சிலர் விற்பனை செய்வதாகவும் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று காலை 7 மணி அளவில் கவியரசு கண்ணதாசன் பேருந்து நிறுத்தம் அருகே சிலர் போதை மாத்திரைகளை கை மாற்றுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்கிரண் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சந்தேகத்தின் பேரில், 5 பேரை மடக்கி பிடித்து சோதனை செய்தன்ர. அவர்களிடம் 570 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 5 சிரஞ்சி உள்ளிட்டவை இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், செம்மஞ்சேரி 6வது தெருவை சேர்ந்த தனுஷ் (21), அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (24), கண்ணகி நகரை சேர்ந்த மணிகண்டன் (30), கோட்டூர்புரத்தை சேர்ந்த விக்னேஷ் (20), பெரும்பாக்கத்தை சேர்ந்த சசிராம் (27) என்பதும், இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பைக்கு சென்று அங்குள்ள மருந்து கடையில் ஒரு அட்டை வலி நிவாரண மாத்திரை 415 ரூபாய்க்கு வாங்கி அதனை சென்னைக்கு கொண்டு வந்து ஒரு மாத்திரை 300 ரூபாய் வரை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதில் கார்த்திக் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், இவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.

The post மும்பையில் இருந்து கடத்தி வந்து போதை மாத்திரை விற்ற 5 வாலிபர்கள் சிக்கினர்: 570 மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: