திருவாரூர்: ஆந்திராவிலிருந்து திருவாரூருக்கு 2 சொகுசு கார்களில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தி வந்த 5 பேர் ஓட்டலில் தங்கியிருந்த போது சிக்கினர். இதில் சுவர் ஏறி குதித்து தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவிலிருந்து திருவாரூருக்கு 2 சொகுசு கார்களில், மர்ம நபர்கள் பல லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தி வந்ததாகவும், அவர்கள் நாகப்பட்டினம் செல்லும் பைபாஸ் சாலையில் ஒரு தனியார் ஓட்டலில் தங்கியிருப்பதாகவும் தேசிய போதைபொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) போலீசாருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் வந்தது. போலீசார் அதிரடியாக அந்த ஓட்டலுக்குள் புகுந்து, மர்ம நபர்கள் தங்கியிருந்த இரண்டு அறைகளையும் சுற்றிவளைத்தனர். பின்னர் அங்கு தங்கியிருந்த 5 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியிலிருந்து திருவாரூருக்கு கஞ்சா கடத்தி வந்ததாகவும், இதனை வேறு ஒரு நபருக்கு கைமாற்றி இங்கிருந்து திருவாரூர் முத்துப்பேட்டை மற்றும் கோடியக்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பெற அன்று ஓட்டலுக்கு காரில் வந்த மர்மநபர், போலீசார் ஓட்டலின் கதவை இழுத்து மூடியதும் காரை நிறுத்தி விட்டு சுவர் ஏறி குதித்து தப்பினார். கார் பதிவு எண்ணை கொண்டு தப்பியோடிய நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கஞ்சாவை கடத்தி வந்தவர்களில் ஒருவர், ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த பாலபோலானு விஷ்ணுவர்த்த ரெட்டி என்பவரது ஆதார் அட்டையினை கொண்டு ஓட்டலில் 2 அறைகள் எடுத்துள்ளனர். ஓட்டல் அறை மற்றும் அவர்கள் வந்த கார் டிக்கியில் அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை உயர்ரக கஞ்சா என்றும், ரூ.1 கோடி மதிப்பு என்றும் கூறப்படுகிறது. 400 கிலோ கஞ்சா, 2 சொகுசு கார், 5 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
The post ஆந்திராவில் இருந்து திருவாரூருக்கு 2 சொகுசு கார்களில் கடத்திய ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: ஓட்டலில் 5 பேர் சிக்கினர் ; சுவர் ஏறி குதித்து ஒருவர் ஓட்டம் appeared first on Dinakaran.