ஜோலார்பேட்டை : நாட்றம்பள்ளி அருகே டிப்ளமோ சித்த மருத்துவம் படித்துவிட்டு நோயாளிகளுக்கு ஆங்கில முறை சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தில் ஒருவர் முறையான மருத்துவம் படிக்காமல் கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் ஞானமீனாட்சிக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சம்பந்தப்பட்ட கிளினிக்குக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, கவுண்டப்பனூரை சேர்ந்த ராமச்சந்திரன்(55) என்பவர் டிப்ளமோ சித்தா மருத்துவம் படித்துவிட்டு நோயாளிகளுக்கு ஆங்கில முறை சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், போலி டாக்டர் ராமச்சந்திரனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அங்கிருந்த மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து கிளினிக்குக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.
இதுகுறித்து தலைமை மருத்துவர் சிவக்குமார் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ராமச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post நாட்றம்பள்ளி அருகே டிப்ளமோ படித்துவிட்டு ஆங்கில முறை சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது appeared first on Dinakaran.