பார்க்கிங் பிரச்னையில் தாக்குதல் இளம் விஞ்ஞானி அடித்துக்கொலை: சிசிடிவி காட்சிகள் வைரல்

மொகாலி: பார்க்கிங் பிரச்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள ஐஐஎஸ்இஆர் அமைப்பில் ஆராய்ச்சியாளராக இருந்தவர் அபிஷேக் ஸ்வர்ன்கர் (39). இவர் ஜார்க்கண்டின் தன்பாத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆவார். சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்த அவர் சமீபத்தில் தான் இந்தியா திரும்பினார். இங்கு திட்ட விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். அவருக்கு சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது சகோதரி தனது சிறுநீரகங்களில் ஒன்றை அவருக்கு தானம் செய்துள்ளார்.

அபிஷேக்கின் பக்கத்து வீட்டுக்காரர் மாண்டி. இவருக்கும், விஞ்ஞானி அபிஷேக்கிற்கும் பைக் பார்க்கிங் தொடர்பாக மோதல் இருந்தது. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வந்த அபிஷேக் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது மாண்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்பு மோதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இருதரப்பிலும் வாக்குவாதம் நடந்த பிறகு, மாண்டி திடீரென அபிஷேக்கை தாக்கி கீழே தள்ளி விட்டார். இதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார். இதையடுத்து மாண்டி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து போலீசில் விசாரித்து வருகின்றனர்.

The post பார்க்கிங் பிரச்னையில் தாக்குதல் இளம் விஞ்ஞானி அடித்துக்கொலை: சிசிடிவி காட்சிகள் வைரல் appeared first on Dinakaran.

Related Stories: