ஒடுகத்தூர், மார்ச் 21: ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லைமேடு அருகே உள்ள கொண்டத்தூர் கிராமத்து சேர்ந்தவர் நடேசன். இவரது மகன்கள் வெங்கடேசன், சுவாமிநாதன், ஜெலேந்திரன் ஆவர். நடேசன் இறந்து விட்டார். இதனால், தான் இறப்பதற்கு முன்பு தனக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தை 3 மகன்களுக்கும் சரிசமமாக பாகப்பிவினை செய்து கொடுத்துள்ளார். இந்த நிலத்தில் 3 பேரும் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், நிலத்தில் பொது வழி இல்லாததால் அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் மகன் தியாகராஜனுக்கும், ஜெலேந்திரன் மகன் இளவரனுக்கும் நிலம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், ஆத்திரமடைந்த தியாகராஜன் மற்றும் அவரது மனைவி தீபா ஆகியோர் இளவரசனை கோடாரி, கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளவரசனின் தாய் இந்திரா(60) அவர்களை தடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, இளவரசன் நேற்று வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post ஒடுகத்தூர் அருகே நிலப்பிரச்னையில் மோதல்: தாய், மகனுக்கு சரமாரி கத்தி வெட்டு appeared first on Dinakaran.