சிரசு திருவிழாவில் 1,000 போலீசார் பாதுகாப்பு எஸ்பி தகவல் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில்

குடியாத்தம், மே 14: குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா நாளை(15ம் தேதி) விமரிசையாக நடக்கிறது. இன்று கெங்கையம்மன் தேரோட்டம் நடக்கிறது. சிரசு திருவிழாவில் தமிழக மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி மதிவாணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கெங்கையம்மன் கோயில், சிரசு மற்றும் திருத்தேர் செல்லும் சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், எஸ்பி கூறுகையில், சிரசு திருவிழாவை முன்னிட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றச்சம்பவங்களை தடுக்க சிரசு செல்லும் சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக 3 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். பழைய குற்றவாளிகளை கணக்கெடுத்து அவர்களை கண்காணிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். விழாவில் பக்தர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி கலந்து கொள்ளும் வகையில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது, டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

The post சிரசு திருவிழாவில் 1,000 போலீசார் பாதுகாப்பு எஸ்பி தகவல் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் appeared first on Dinakaran.

Related Stories: