கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கில் 200 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), இவர்களது உறவினர் குணா என்கிற தவசி (20) ஆகிய 3 பேர் போலீசாரால் காலில் சுட்டு பிடிக்கப்பட்டு தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை கூடுதல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நீதிபதி சிந்து முன்னிலையில் கடந்த மாதம் 2ம் தேதி முதற்கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை, மகிளா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, நீதிபதி சுந்தர்ராஜ் விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். அதன்படி, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதலாக 200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் விசாரணையை நீதிபதி சுந்தர்ராஜ் வருகிற 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதை ரத்து செய்யக்கோரி குண்டர் தடுப்பு சட்ட அறிவுரைக்கழகத்தில் (அட்வைசரி போர்டு) மனு தாக்கல் செய்தனர். அதன் மீதான விசாரணை நேற்று நடந்ததால் 3 பேரும் மதுரை அழைத்து செல்லப்பட்டனர்.
