நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு விஜய் பிரசார பஸ்சில் ஏறி சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு: கரூர் கொண்டு வரச்செய்து டிரைவரிடம் விசாரணை

கரூர்: தவெக தலைவர் விஜய் பயன்படுத்திய பிரசார பஸ்சை சிபிஐ அதிகாரிகள் கரூருக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனர். பஸ்சின் மேலே ஏறி அளவீடு செய்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 16ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொது செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். தவெக தலைவர் விஜய், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 12ம் தேதி (நாளை) ஆஜராகும்படி கடந்த 6ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி விசாரணைக்கு ஆஜராக விஜய் இன்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தடயவியல் துறை அதிகாரிகள் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள், சம்பவ இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில் உயர்தர தொழில்நுட்ப கேமராக்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்திய பஸ்சை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்னையில் இருந்து கரூருக்கு கொண்டு வந்தனர். கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் விஜய் பிரசார பஸ் நிறுத்தப்பட்டது. நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் பஸ்சின் உள்ளேயும், வெளியேயும் ஆய்வு செய்தனர்.

பஸ்சின் மேல் விஜய் ஏறி நின்று பேசிய இடத்தில், அதிகாரிகளும் ஏறி நின்று அளவீடு செய்யும் டேப் உதவியுடன் நீளம், அகலத்தை துல்லியமாக அளவீடு செய்தனர். இந்த முழு ஆய்வும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்த பஸ்சை ஓட்டிய ஓட்டுநர் சென்னையை சேர்ந்த பரணிதரன் என்பவரிடம் சிபிஐ அதிகாரிகள் நாமக்கல்லில் இருந்து எத்தனை மணிக்கு பிரசார பஸ் புறப்பட்டது, எவ்வளவு நேரத்தில் கரூர் எல்லைக்கு வந்தீர்கள், கரூர் எல்லையில் இருந்து கூட்டம் நடந்த வேலுச்சாமிபுரத்திற்கு எவ்வளவு நேரத்தில் வந்தீர்கள்.

எத்தனை கி.மீ. வேகத்தில் ஓட்டினீர்கள், கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் வந்தார்களா? போன்ற கேள்விகளை கேட்டனர். மேலும் பிரசார பஸ் எந்த இடத்தில் வந்தபோது, விஜய் அதன் மேல் ஏறினார், எந்த பகுதியில் நின்று பேசினார் என்று சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். பின்னர் டிரைவரை விஜய் அமைர்ந்திருந்த இருக்கையில் உட்கார செய்து, விஜய் எப்படி உட்கார்ந்து மக்களை பார்த்தார்,

கையசைத்தார் என சிபிஐ அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்தி வீடியோ பதிவு செய்து கொண்டனர். பின்னர் மாலை 5.30 மணியளவில் விஜய் பிரசார பஸ் டிரைவரை அழைத்து, வாகனத்தை எடுத்து செல்லும்படி கூறினர். இதை தொடர்ந்து ஓட்டுநர் பரணிதரன், விஜய் பிரசார பஸ்சை அங்கிருந்து சென்னைக்கு ஓட்டி சென்றார்.

Related Stories: