நர்ஸ் உதவியாளர் பணியிடம் நிரப்ப விரைவில் அறிவிப்பு: ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை: செவிலியர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என ஐகோர்ட் கிளையில் எம்ஆர்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சுமதி, ராஜபாளையம் வேல்மணி உட்பட 5 பேர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: செவிலியர் உதவியாளர் சான்றிதழ் படிப்பை முடித்துள்ளோம். நாங்கள் செவிலியர் உதவியாளர் பணிக்கு தகுதியுடையவர்கள்.

பல ஆண்டுகளாக பணி வாய்ப்பிற்காக காத்திருக்கிறோம். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் விதிகள், இட ஒதுக்கீடு, வயது வரம்பை பின்பற்றி செவிலியர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வௌியிட வேண்டுமென சுகாதாரத்துறை சார்பில் கடந்த 14.3.2024ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அரசாணையை இன்னும் முறையாக செயல்படுத்தவில்லை. தற்போது 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன.

எனவே, இந்த காலியிடத்தை நிரப்பும்போது எங்களுக்கு முன்னுரிமை அளித்து ஆட்சேர்ப்பு நடத்தி பணியிடங்களை நிரப்ப அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நிரந்தர பணியிடங்களில், தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களை ‘அவுட்சோர்சிங்’ மூலம் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை பின்பற்றி முறையாக நியமனம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யாஸ்மின் பேகம், ‘‘அரசாணையை பின்பற்றி தேர்வு நடைமுறைகள் நடைபெறும். அதற்கான அறிவிப்பு இம்மாதத்திற்குள் வெளியிட வாய்ப்புள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘ஆட்சேர்ப்பு நடவடிக்கை துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அரசாணையை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்’’ எனக்கூறி மனுவை முடித்து வைத்தார்.

Related Stories: