ஓமலூர்: பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை ‘ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கான அறிமுக விழா, சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடந்தது. கட்சிகொடியை அறிமுகம் செய்தபின், விருதாம்பிகை அளித்த பேட்டி:
பாமகவில் பிரிவினை வந்ததற்கு பணமே காரணம். இடஒதுக்கீட்டு போராட்டத்தில் 21 வன்னியர்களை சுட்டு கொன்றது அதிமுக தான். மாவீரன் வீரப்பனை கொன்றது அதிமுக அரசு தான். வன்னியர்களை ஒட்டுமொத்தமாக அடமானம் வைக்க அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி அமைத்துள்ளார்.
இப்போது பாஜவுடன் கூட்டணி வைத்து ஆர்.எஸ்.எஸ் கைக்கூலியாக மாறியுள்ளார். ராமதாஸ் தற்போது கஷ்டமான நிலையில் உள்ளதால், அவரை எதிர்க்க மாட்டோம். அன்புமணி ஊழல்கள் குறித்து மக்களிடம் பேசுவோம். அரசியலில் இருந்து விரட்டும் வரை போராடுவோம். சவுமியா நிற்கும் தொகுதியில் நான் போட்டியிடுவேன். இவ்வாறு விருதாம்பிகை கூறினார்.
* திமுக ஆட்சியில் நல்லது நடக்குது
‘‘திமுக ஆட்சியில் மட்டும் தான் வன்னியர்களுக்கு நல்லது நடக்கிறது. கலைஞர் 20 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தார். முதல்வர் ஸ்டாலின் இறந்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டி கொடுத்தார். நடிகர் விஜய் மக்களுக்கு எதுவும் நல்லது செய்யவில்லை. அஞ்சலை அம்மாவை கொள்கை தலைவராக கொண்ட விஜய், வன்னியர்களுக்காக, ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை’’ என்றும் விருதாம்பிகை கூறினார்.
