கோவை: கோவையில் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகியோர் நேற்று வழிபாடு நடத்தினர். பின்னர் நயினார் நகேந்திரன் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டி வழிபாடு செய்திருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து ‘‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா?’’ என்ற கேள்விக்கு, ‘‘எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் யார் என்பபதை பின்னர் பார்க்கலாம். அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்ற எந்த அழுத்தமும் இதுவரை கொடுக்கவில்லை. இரட்டை எண்ணிக்கையில் பாஜ சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு செல்வார்கள். கூட்டணி குறித்து தேமுதிகவுடன் இதுவரை பேசவில்லை.
தற்போது, ஒவ்வொருவராக கூட்டணிக்கு வர ஆரம்பித்து வந்திருக்கின்றனர். முதல் கட்டமாக அன்புமணி வந்திருக்கிறார். பொங்கல் முடியட்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்’’ என்றார். ‘‘பாமகவில் இருந்து அன்புமணி வந்து இருப்பது, 50 சதவீதம் மட்டும்தானே’’ என்ற கேள்விக்கு, ‘‘அப்படி சொல்ல முடியாது’’ என்றார். ‘‘பராசக்தி படத்தில் அண்ணாவின் வசனங்களை சென்சார் போர்டு கட் செய்துள்ளதே.
அண்ணாவை பார்த்து பயமா?’’ என்ற கேள்விக்கு, ‘‘அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை. அண்ணாவை போற்றி புகழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்’’ என்றார். கொங்கு மண்டலத்தை பாஜ டார்கெட் செய்கின்றதா? என்ற கேள்விக்கு, ‘‘கொங்கு மண்டலம் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் டார்கெட் செய்கிறோம்’’ என்றார்.
