விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் அளித்த பேட்டி: பாஜவை பொறுத்தவரை தங்களது எதிரிகளை பழிவாங்குவதற்கும், தனக்கு எதிரானவர்களை தங்கள் அணிக்கு வளைத்து கொள்வதற்கும் எல்லா வழிமுறைகளையும் கடைபிடித்து வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தை தவறாக பயன்படுத்தி பல மாநிலங்களில் மோசடியாக ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்து வருகிறார்கள்.
கடைசியாக மிச்சம் இருந்த தணிக்கை வாரியத்தையும் தங்களின் செயல்பாடுகளுக்கு ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. அதுதான் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இருப்பது. பராசக்தி படத்திற்கு இழுத்தடித்து 25க்கும் மேற்பட்ட வசனங்கள், காட்சிகள் ரத்து செய்து சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
தணிக்கை வாரியத்தை அரசியல் சுயநலத்திற்காக பயன்படுத்தும் பாஜ அரசை நாங்கள் கண்டிக்கிறோம். இதுபோன்று நடந்துகொண்டால் சினிமா தொழிலே அழிந்து போய்விடும். இவ்வாறு கூறினார்.
* விஜய் மவுனம் ஏன்?
சண்முகம் கூறுகையில், ஜனநாயகன் திரைப்படத்தில் இவ்வளவு பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் கதாநாயகன் வாய்திறக்கவில்லை. மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் விஜய் வந்து நிற்பான் என்று பஞ்ச் டயலாக் பேசும் விஜய், அவருடைய படத்துக்கே வாய் திறக்கவில்லை. அவரை நம்பிதான் தயாரிப்பாளர் பலகோடி முதலீடு செய்திருக்கிறார்.
இத்தகைய பிரச்னையில் விஜய் மவுனம் என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தனக்கு ஒரு அநீதி ஏற்படும்போது எதிர்த்து குரல் கொடுக்க முடியாதவர் மக்களுக்கு எந்த குரலை கொடுக்கப்போகிறார். ஒன்றிய பாஜ அரசை பகைத்துகொள்ளகூடாது என்கிற நோக்கத்தோடு மவுனமாக இருக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
