மலைவாழ் மக்கள் வசிக்கும் தொகுதிக்கு அதிமுக தலைகள் மல்லுக்கட்டு: குரு ‘பாக்கியம்’ யாருக்கு?

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்ற சங்கராபுரம் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த மோகன் 2001 மற்றும் 2011ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று 2 முறை அமைச்சராக இருந்துள்ளார். திமுகவில் 1989ல் முதன்முறையாக போட்டியிட்ட உதயசூரியன் தமிழக அளவில் இளம் வயது எம்எல்ஏ ஆனதுடன், 1989, 1996, 2006, 2016, 2021 ஆகிய 5 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.

நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவில் இத்தொகுதியில் களமிறங்க சீட் கேட்டு முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்பி காமராஜ், டாக்டர் பொன்னரசு, ஒன்றிய செயலாளர் ராஜசேகர், ராஜாராம், பேரவை செயலாளர் ஞானவேல், சின்னசேலம் ராகேஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்த மோகனுக்கு சீட் கொடுத்தால் எதிர்வேட்பாளருக்கு டப் கொடுக்கலாம் என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும், சீனியர்களை அதிமுக தலைமை கவுரவமாக வைத்துக்கொள்ளும் என்றும் சில மாதங்களுக்கு முன்பு சின்னசேலத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசி சென்றதால் தனக்கு சீட் கிடைக்குமா?

என்ற கலக்கத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் இருக்கிறாராம். மற்றொரு தரப்போ குமரகுரு கைகாட்டும் நபருக்குதான் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரப்பி வருகிறதாம். கடந்த 2016ல் சங்கராபுரம் தொகுதிக்கு புதுமுகமாக ராஜசேகர் பெயரை வேட்பாளராக அக்கட்சி தலைமை முதலில் அறிவித்தது. அவரும் பம்பரமாக சுழன்று 10 நாட்களுக்கு மேலாக வாக்கு சேகரித்த நிலையில் திடீரென அவர் மாற்றப்பட்டு மோகன் நிறுத்தப்பட்டார்.

ஏற்கனவே ஏமாற்றமடைந்த ராஜசேகருக்கு இந்தமுறை வாய்ப்பு கொடுக்கலாம் என அதிமுகவினர் பேசி வருகிறார்களாம். அவரும் தலைமையிடம் சீட் கேட்டு மோதி வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் மாவட்ட செயலாளர் குமரகுரு ஆதரவாளர்களான ஞானவேல், ராகேஷ் மற்றும் சங்கராபுரத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ராஜாராம் உள்ளிட்டோரும் சீட்டிற்கான போட்டியில் உள்ளார்களாம்.

அத்தோடு அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும், பாரிவேந்தர் கட்சியும், அன்புமணியின் பாமக பிரிவும் சங்கராபுரம் தொகுதியை குறி வைத்து இப்போதே மல்லு கட்டத் தொடங்கி உள்ளதாம். மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் சங்கராபுரம் தொகுதியில் போட்டியிட அதிமுக அணியில் மல்லுக்கட்டு தொடங்கி விட்டதால் அதிமுக தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.

Related Stories: