திருப்பூர்: திருப்பூரில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது: இன்றைய இளைஞர்கள் திரைப்படத்தை பார்த்து ஒரு மாய உலகில் இருக்கின்றனர். அரசியலும், ஆட்சி அதிகாரமும் திரைப்படத்தில் வருவது போன்றது அல்ல. திரைப்படத்தில் ஒரு சீன் சரியில்லை என்றால் மீண்டும் ரீடேக் எடுத்துக்கொள்ளலாம்.
அரசியல் மற்றும் ஆட்சி அமைப்பதற்கு பக்குவம் மற்றும் அனுபவம் தேவை. அதனால் இளைஞர்கள் இங்கி பிங்கி போட்டு பார்த்து புதிதாக வருபவர்களை தேர்ந்தெடுக்கலாம் என்ற முடிவெடுக்க வேண்டிய தேர்தல் இது இல்லை. இவ்வாறு அவர் பேசினார். விஜய்க்கு அரசியல் பக்குவம் இல்லை எனவும், இளைஞர்கள் அவர் பக்கம் செல்ல வேண்டாம் என்றும் அண்ணாமலை மறைமுகமாக சாடினார்.
* அண்ணாமலைக்கு முக்கியத்துவம் நயினார் அப்செட்
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ சார்பில் பொதுக்கூட்டம், திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்காக திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
பெரும்பாலான பேனர்களில் நயினார் நாகேந்திரன் படம் தவிர்க்கப்பட்டு அண்ணாமலையின் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. மேலும் சில பேனர்களில் நயினார் நாகேந்திரன் படம் சிறிதாகவும் அண்ணாமலையின் படம் பெரியதாகவும் போடப்பட்டிருந்தது.
இதை கண்ட நயினார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். நயினார் நாகேந்திரனை தவிர்த்துவிட்டு மேற்கு மண்டலத்தில் அண்ணாமலைக்கு தான் செல்வாக்கு உள்ளது என்பது போன்ற மாய தோற்றத்தை அவரது ஆதரவாளர்கள் உருவாக்கி வருவது கட்சி கோஷ்டி பூசலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக கட்சியினர் புலம்பினர்.
