அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ளது அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி. இந்த பேரூராட்சியை சுற்றி பள்ளிப்பேட்டை, மலைநகர், காந்தி நகர், வெங்கடேசபுரம், உத்தமநல்லூர், திருமுக்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் வன காடுகள் மற்றும் மலைகுன்றுகள் உள்ளது. இங்கு ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில், பெரும்பாலும் குரங்குகள் ஆகும்.

இவைகள் தினமும் உணவுக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமப்பகுதிகளில் சென்று வருவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் குடிநீர் மற்றும் போதிய உணவுகள் கிடைக்காமல் அதிகளவிலான குரங்குகள் பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புகளில் உணவு தண்ணீருக்காக புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால், கிராம மக்கள் பெரும் பீதி அடைந்து வருகின்றனர்.

மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் குரங்குகள் வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்று எந்நேரமும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வீட்டினுள் அடைந்து கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாதசாரிகள் குரங்குகளை துரத்த முயன்றால் குரங்குகள் அவர்களை மீண்டும் துரத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்து வருகின்றனர்.
வனப்பகுதியில் விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வனத்துறையினர் ஏற்படுத்தாததே இதற்கு காரணம் என பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், வனத்துறையினரிடம் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி வனவிலங்குகள் காப்பது மட்டுமின்றி வனவிலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: