காஞ்சிபுரம், மே 13: காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சித்ரா பவுர்ணமி விழா சிறப்பு பூஜைகளில், எம்எல்ஏக்கள், மேயர் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படுபவர் சித்ரகுப்த சுவாமி. சித்ரகுப்த சுவாமிக்கென தென் இந்தியாவிலேயே வேறு எங்கும் கோயில்கள் இல்லாத நிலையில் புண்ணிய நகரம், முக்தி தரும் நகரம், நகரேஷூ காஞ்சி என விளங்கும் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் சித்ரகுப்தர் சுவாமி தனி சன்னதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம், நிவர்த்தியாகும் திருத்தலமாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில் சித்திரகுப்தரின் பிறந்தநாளான சித்ரா பவுர்ணமியையொட்டி, இக்கோயிலில் அதிகாலையே சித்திரகுப்தருக்கும், கர்ணகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.விழாவில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சி எம்எல்ஏ எழிலரசன், காஞ்சி மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யாசுகுமார், ஒன்றிய செயலாளர் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார் மற்றும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சோமசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சி பன்னீர்செல்வம், சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது, கோயில் நிர்வாகம் மற்றும் திமுக, அதிமுக சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகைபுரிந்து, காஞ்சி சந்திரகுப்தரை வணங்கி சென்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர், விழா குழுவினர் மற்றும் காஞ்சிபுரம் பகுதி மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். சித்ரா பவுர்ணமியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிவகாஞ்சி காஞ்சிபுரம் போலீசார் செய்திருந்தனர்.
The post காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம்: எம்பி, எம்எல்ஏக்கள், பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.