வைகாசி பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் விழாவில் அம்ச வாகனத்தில் வீதியுலா வந்து காட்சியளித்த வரதராஜபெருமாள்

காஞ்சிபுரம், மே 13: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான நேற்று, அம்ச வாகனத்தில் சூரியபிரபை பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவின் 3 நாளான இன்று கருடசேவை உற்சவம் நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அத்திவரதர் புகழ் வரதராஜபெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 11ம்தேதி அதிகாலை 4.20 மணி முதல் 6 மணிக்குள் கோயில் பட்டாச்சாரியார்கள் மூலம், கருடாழ்வார் பொறித்த சின்னத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, வரதராஜபெருமாள் – அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவின் காரணமாக, காஞ்சிபுரம் நகர கோயில் கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வழிநெடுகிலும் தோரணங்கள், மாவிலை கட்டி, பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரதராஜபெருமாள், தேவி – பூதேவியுடன் தங்க சப்பரத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, மாலை சிம்ம வாகனத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்தார். இதனைத்தொடர்ந்து, வைகாசி பிரம்மோற்சவ விழாவின் 2ம் நாளான நேற்று (12ம்தேதி) அம்ச வாகனத்தில் சூரிய பிரபை பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின், 3ம் நாளான (13ம்தேதி) இன்று அதிகாலை 5 மணிக்கு கருடசேவை உற்சவத்தையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பின்னர், அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் அமர்ந்து டி.கே.நம்பி தெரு, காந்தி சாலை, காமராஜர் வீதி என முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வருகிறார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். கருடசேவை உற்சாகத்தை முன்னிட்டு ஆன்மீக அன்பர்கள், பக்தர்கள் சார்பில் அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்படும். இந்த, கருடசேவை உற்சவத்திற்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் சென்னை, வேலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள், பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி இயக்குநர் கார்த்திகேயன், செயல் அலுவலர் ராஜலட்சுமி, கோயில் பட்டாச்சியார்கள், உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் விழா குழுவினர் ஆகியோர் செய்துள்ளனர். விழாவில் போலீஸ் எஸ்பி சண்முகம் தலைமையிலான போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post வைகாசி பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் விழாவில் அம்ச வாகனத்தில் வீதியுலா வந்து காட்சியளித்த வரதராஜபெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: