காஞ்சிபுரம், மே 14: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மேற்சவத்தின் 3ம் நாளான நேற்று, வரதராஜபெருமாள் கருடசேவை உற்சவத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அத்திவரதர் புகழ் வரதராஜபெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 11ம்தேதி அதிகாலை 4.20 மணி முதல் 6 மணிக்குள் கோயில் பட்டாச்சாரியார்கள் மூலம், கருடாழ்வார் பொறித்த சின்னத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி, வரதராஜபெருமாள் – அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவின் காரணமாக, காஞ்சிபுரம் நகர கோயில் கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வழிநெடுகிலும் தோரணங்கள், மாவிலை கட்டி, பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரதராஜபெருமாள், தேவி – பூதேவியுடன் தங்க சப்பரத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, மாலை சிம்ம வாகனத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்தார். இதனைத்தொடர்ந்து, வைகாசி பிரம்மோற்சவ விழாவின் 2ம் நாளான நேற்று முன்தினம் (12ம்தேதி) அம்ச வாகனத்தில் சூரிய பிரபை பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின், 3ம் நாளான (13ம்தேதி) நேற்று அதிகாலை 5 மணிக்கு கருடசேவை உற்சவத்தையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், வரதராஜபெருமாள், தேவி – மூதேவியுடன் நீலப்பட்டுடுத்தி வைரம், வைடூரியம் அணிகலன்கள் அணிந்து அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் அமர்ந்து டி.கே.நம்பி தெரு, காந்தி சாலை, காமராஜர் வீதி, பிள்ளையார்பாளையம், நான்கு ராஜ வீதிகள், பூக்கடை சத்திரம், நெல்லுக்காரை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா வந்து காட்சியளித்தார். இதில், வழிநெடுக்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, கற்பூரம் ஏற்றி தீபாராதனை காண்பித்தும், தேங்காய் உடைத்தும் “கோவிந்தா… கோவிந்தா…’’ என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருடசேவை உற்சாகத்தை முன்னிட்டு ஆன்மீக அமைப்புகள், ஆன்மீக அன்பர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் அனைத்து பொதுமக்களுக்கும் பொங்கல், புளியோதரை, லெமன் சாதம், நீர், மோர், குளிர்பானங்கள் உள்ளிட்ட அன்னதானங்கள் வழங்கப்பட்டன. இந்த, கருடசேவை உற்சவத்திற்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் சென்னை, வேலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள், பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை இணை இயக்குநர் குமரதுரை, உதவி இயக்குநர் கார்த்திகேயன், செயல் அலுவலர் ராஜலட்சுமி, கோயில் பட்டாச்சியார்கள், உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் போலீஸ் எஸ்பி சண்முகம் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post வைகாசி பிரம்மேற்சவத்தின் 3ம் நாள் விழாவில் கருடசேவை உற்சவத்தில் எழுந்தருளிய வரதராஜபெருமாள்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.