மதுராந்தகம், மே 13: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரைச் சுற்றிலும் பல்வேறு கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. மதுராந்தகம், செய்யூர், தச்சூர், சித்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் பல கல்குவாரிகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி இரவு பகலாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து கற்கள் மற்றும் ஜல்லி போன்றவற்றை ஏற்றிக்கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கனரக லாரிகள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன. இதில், மதுராந்தகம் நகருக்குள் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியவாறு இந்த லாரிகள் சென்று வருகின்றன.
அதாவது, சாலையில் புழுதியை கிளப்பியவாறு அதிவேகமாக செல்வது, அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றி செல்வதால் லாரியில் இருந்து கற்கள் உருண்டு கீழே விழுகிறது. மேலும், சாலையை அடைத்துக் கொண்டு வரும் இந்த பெரிய கனரக லாரிகளால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டன. இதன் காரணமாக சில மாதங்கள் முன்பு முதல் காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 9 மணி வரை மதுராந்தகம் நகருக்குள் இந்த கனரக வாகனங்கள் வரக்கூடாது என போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.
இதனால் ஓரளவுக்கு இந்த லாரிகளின் பகல் நேர போக்குவரத்து மதுராந்தகம் நகரில் குறைந்து காணப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பழைய நிலையிலே காலை முதல் அனைத்து நேரங்களிலும் இந்த லாரிகள் மதுராந்தகம் நகருக்குள் இயக்கப்படுகின்றன. சட்ட விதிமுறைகளை மீறி செல்லும் பல லாரிகளின் பின்புறங்களில் நம்பர் பிளேட் இருப்பதில்லை. ஏனென்றால், அதனை போட்டோ வீடியோ எடுத்து பொதுமக்கள் புகார் அளித்து விடுவார்கள் என்ற காரணம். இதன் காரணமாக மதுராந்தகம் பொதுமக்கள் அச்சத்துடனே சாலைகளில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, அரசு அதிகாரிகள் பகல் நேரங்களில் இந்த கனரக லாரிகள் மதுராந்தகம் நகருக்குள் வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மதுராந்தகம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராமமூர்த்தியிடம் கேட்டபோது, ‘விதிமுறைகளை மீறி இயக்கப்படும் லாரிகள் மீது மாதத்திற்கு குறைந்தது 50 வழக்குகள் பதிவு செய்கிறோம். அபராதமும் விதிக்கிறோம். தொடர்ந்து நகருக்குள் அனுமதிக்க படாத நேரங்களில் கனரக லாரிகளை இயக்கினால் லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது கண்டிப்பாக அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
The post மதுராந்தகம் நகருக்குள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் விதிகளை மீறி செல்லும் கல்குவாரி லாரிகள்: பொதுமக்கள் அச்சம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.