புதுச்சேரி, ஏப். 26: அரசு அதிகாரியிடம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.4.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி மின்துறையில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வரும் பன்னீர்செல்வத்தை செல்போன் மூலம் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு உல்லாசமாக இருக்கலாம் என அழைத்துள்ளார். இதனை நம்பி, ரெட்டியார்பாளையத்துக்கு பன்னீர்செல்வம் சென்றபோது அங்கிருந்த ஒரு கும்பல் படம் எடுத்து பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் பயந்துபோன பன்னீர்செல்வம் அந்த கும்பலுக்கு பணம் கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் அந்த கும்பல் பணம் கேட்டு பன்னீர்செல்வத்தை மிரட்டியுள்ளனர். இதில் பயந்து போன அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் நடந்த இடம் ரெட்டியார்பாளையம் பகுதி என்பதால் போலீசார் ஜீரோ எப்.ஐ.ஆர். பதிந்து வழக்கை ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றினர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து வாணரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி தீனா (எ) தீனதாயளன், ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த ஷாருகான் மற்றும் விபசார அழகிகளான அரியாங்குப்பம் மணிமேகலை, பெரம்பை சுகந்தி, ரெட்டியார்பாளையம் சுலோச்சனா ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே அவர்களிடம் போலீஸ் விசாரணையில், பன்னீர்செல்வம் சம்பவ இடத்துக்கு சென்றபோது, அங்கிருந்த கும்பல் அவரை ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். பின்னர் அதனை வைத்து பன்னீர் செல்வத்திடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் பயந்து போன பன்னீர்செல்வம் அவர்களுக்கு ரூ.4.5 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் மறுநாள் 3 பெண்கள், மீண்டும் பன்னீர்செல்வத்தை தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். அப்போது பன்னீர்செல்வத்திடம் அதிக பணம் இருப்பதாக நினைத்து மீண்டும் பணம் கேட்டு மிரட்டியபோது, பன்னீர் செல்வம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்த ரூ.4.5 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post அரசு அதிகாரியிடம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.4.5 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.