புதுச்சேரியில் அடகு கடை நடத்தி பொதுமக்களிடம் 250 பவுன் நகைகளை ஏமாற்றிய உரிமையாளர் கைது

புதுச்சேரி, ஏப். 26:புதுச்சேரி முத்தியால்பேட்டை தளவாய் வீராசாமி வீதியில் குடியா (எ) ஜூகன் கிஷோர் மற்றும் திப்புடா (எ) பகிரத் கிஷோர் ஆகியோர் அடகு கடை நடத்தி வந்தனர். இந்த கடையில் சோலை நகரை சேர்ந்த லதா (52) என்பவர், கடந்த 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 102.4 கிராம் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றார். பின்னர் அடகு வைத்த நகைக்காக வட்டி மற்றும் அசல் சேர்ந்து ₹1.14 லட்சத்தை கடையில் கட்டியுள்ளார். அப்போது நகைகள் வங்கி லாக்கரில் இருப்பதாகவும், எடுத்து வந்து விட்டு தகவல் தெரிவிப்பதாகவும் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். சில நாட்கள் கழித்து லதா வட்டிக்கடைக்கு சென்று கேட்டபோது, நாளை தருவதாக கூறி அலைக்கழித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் லதா கடைக்கு சென்று பார்த்தபோது, கடை பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். இதேபோல் அதே வட்டிக்கடையில் நகையை அடகு வைத்திருந்த மற்ற நபர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து லதா முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அடகு கடை உரிமையாளர்கள் குடியா (எ) ஜூகன் கிஷோர் மற்றும் திப்புடா (எ) பகிரத் கிஷோர் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இவ்வழக்கின் முக்கிய நபரான ஜூகன் கிஷோர் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் உத்தரவின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் பெரியசாமி, அருள், தேவா, முரளி உள்ளிட்டோர் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்று குடியா (எ) ஜூகன் கிஷோரை கைது செய்தனர். பின்னர் அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஜூகன் கிஷோர் பொதுமக்களிடம் சுமார் 250 பவுன் நகைகளை ஏமாற்றி இருப்பதும், அதில் சில நகைகளை விற்று விட்டதாகவும், சில நகைகளை வங்கியில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தொடர்ந்து முத்தியால்பேட்டை போலீசார் மீண்டும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள திப்புடா (எ) பகிரத் கிஷோரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post புதுச்சேரியில் அடகு கடை நடத்தி பொதுமக்களிடம் 250 பவுன் நகைகளை ஏமாற்றிய உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: