தில்லைக்குச் சென்றால் எல்லையில்லாத இன்பம்

எது இன்பம் என்பதற்கு திருஞானசம்பந்தர் ஒரு விளக்கம் அளிக்கின்றார். நீண்ட மாடங்கள் உடைய தில்லைத் திருத்தலம். அங்கே இறைவன் பிறைமதி முடிசூடி ஆடும் பேரம்பலமாகிய சிற்றம்பல மேடை.அங்கு ஆனந்த நடனம்புரியும் பொற்கழல்களான திருவடிகளை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பதுதான் இன்பத்துள் இன்பம் என்கிறார்.

நிறை வெண் கொடி மாட நெற்றிநேர்
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பல தில்லை
சிறை வண்டறை யோவாச் சிற்றம்பல மேய
இறைவன் கழல்ஏத்தும் இன்பம் இன்பமே

பொதுவாக மனிதப்பிறவியில் இருந்து விடுபட வேண்டும் என்பதையே ஒவ்வொருவரும் தங்கள் பிரார்த்தனையாக வைப்பார்கள். ஆனால் தில்லைக்கூத்தனைப் பார்த்தபிறகு, ‘‘எனக்கு மனிதப்பிறவி அவசியம் வேண்டும்’’ என்ற பிரார்த்தனையை திருநாவுக்கரசு சுவாமிகள்
வைக்கிறார்.அழகான வளைந்த புருவம். சிவந்த இதழ்கள். அதிலே சிந்தும் புன்னகை. கங்கையால் ஈரமான சடைமுடி. பவளம் போன்ற சிவந்த திருமேனி. பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சு. பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடி. இத்தனை அழகையும் காணும் இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றால் மனிதனாக பிறப்பதுகூட ஒரு பாக்கியம்தான்.குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
பஞ்சபூதங்களில் ஆகாய ஷேத்திரம். பஞ்ச சபைகளில் பொற்சபை. அங்கே படைத்தல் காதல் அழித்தல் மறைத்தல் அருளல் எனும் ஐந்தொழில்களையும் ஆனந்த தாண்டவமாகக் காட்டியருளும்  சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜ மூர்த்தி.கோயில் என்றால் சைவத்தில் சிதம்பரம்தான் கோயில்.இறைவன் அருள் எல்லைக்கு ஓர் இருப்பிடம்தான் தில்லைத் திருத்தலம்.

தீர்த்தம் என்பது சிவகங்கையே
ஏத் தரும் தலம் எழில் புலியூரே
மூர்த்தி அம்பலனது
திருவுருவே

என மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்பு மிக்கது தில்லைத் திருக்கோயில். உலகத்தின் இதயமாக விளங்கும் திருத் தலம் என்பார்கள்.இத்தலத்திற்குத்தான் எதனை பெயர்கள்.?
மன்று, அமலம், சத்து, உம்பர், இரண்மயகோசம், மகத், தனி, புண்டரிகம், குகை, வண்கனம், சுத்தம், பரம், அற்புதம், மெய்ப்பதம், கழுனாவழி, ஞானசுகோதயம், சிதம்பரம், முத்தி, பரப்பிரம்மம், சபை, சத்தி, சிவாலயம், பொது, சிற்றம்பலம், புலியூர், பெரும்பற்றப்புலியூர் முதலிய பல பெயர்கள் உள்ளன.
அந்த நடராஜ மூர்த்திக்குத்தான் எத்தனை விழாக்கள்? அதில் முக்கியமான விழா ஆனித் திருமஞ்சனம்.மஞ்சனம் என்றால் நீராட்டம்.“மங்கல மஞ்சன மரபி னாடியே” என்பது
கம்பராமாயணம்.சிவன் அபிஷேகப் பிரியனல்லவா….அவனுக்குக் குளிரக்குளிர, நீராட்டம் நடப்பதை நம் கண்களால் காணும் பொழுது, நம்முடைய உள்ளம் குளிர்கிறது. எண்ணங்கள் நிறைகிறது. அதன்பிறகு நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கிறது.அதனால்தானே உலகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், தில்லைத் திருத்தலத்தில் ஆனித்திருமஞ்சன நன்னாளிலே கூடுகிறார்கள்.
கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு பருவங்கள் ஓர் ஆண்டில் உண்டு.ஓர் நாளை வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று ஆறு பொழுதுகளாகப் பிரித்தனர். இந்த ஒவ்வொரு பொழுதும் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் வேறு வேறு கால அளவாக இருக்கும். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியல் நேரம்; மாசி மாதம் – காலைப் பொழுது; சித்திரை மாதம் – உச்சிக் காலம்; ஆனிமாதம் – மாலை நேரம்; ஆவணி மாதம் – இரவு நேரம்; புரட்டாசி மாதம் அர்த்த ஜாமம்;இதை அடிப்படையாக கொண்டுதான் ஆலயங்களில் தினமும் ஆறுகால பூஜை நடத்துகிறார்கள்.இந்த ஆறு காலங்களில் நடக்கும் பூஜைகளும், வழிபாடுகளும் ஆகம விதிகளின்படி முக்கியமானவை.ஆறு காலத்தைக் குறிக்கும் வகையில் சிவாலயங்களில் நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு தடவை அபிஷேகம் செய்வார்கள்.இதில் மூன்று அபிஷேகங்கள் திதியை அனுசரித்தும், மூன்று அபிஷேகங்கள் நட்சத்திரத்தை அனுசரித்தும் நடத்துகிறார்கள்.மாசி சதுர்த்தசி, ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி ஆகிய நாள்களில் திதியை வைத்து அபிஷேகம் நடத்துகிறார்கள்.சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய நாள்களில் நட்சத்திரத்தை வைத்து அபிஷேகம் நடத்துகிறார்கள். இந்த ஆறு அபிஷேகங்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேக பூஜைகள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.அதிலும் ஆனிமாத உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மிகமிகச் சிறப்பு வாய்ந்தது.ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு “ஆனி உத்திரம்” என்றும் ஒரு பெயர் உண்டு.இவ்வாண்டு ஆனித் திருமஞ்சன மகா உற்சவம் ஜூன் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ஆம் தேதி வெள்ளி சந்திர பிரபையில் சுவாமி வீதிவலம் நடைபெற்றது. அடுத்து சூரியப் பிரபை. வெள்ளிபூதவாகனம். வெள்ளி ரிஷப வாகனம். வெள்ளை யானை வாகனம். கைலாச வாகனம். தங்க ரதத்தில் பிட்சாடனர் வீதிவலம்.ஜூலை மாதம் 5ஆம் தேதி ரத உற்சவம்.நான்கு திருவீதிகளிலும் ஸ்ரீ நடராஜப் பெருமான் ரதமும், அம்பாள் ரதமும் வீதிவலம் வரும். அந்த தேர் திருவீதியில் அசைந்து வருகின்ற காட்சியை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் முத்து தாண்டவர். தமிழ் இசை பாடிய மூவரில் ஒருவர். ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ?என்ன அற்புதமான அனுபவம்?நடராஜமூர்த்தி மட்டுமா ஆடினார்.?அவரோடு நர்த்தனம் ஆடியவர்கள் எத்தனை பேர்?இதோ வரிசைப்படுத்தி சொல்லுகின்றார் முத்துத்தாண்டவர்.

பங்கயச் சிலம்பைந்தாடப்
பாதச் சலங்கைகள் கிண் கிணென்றாடப்
பொங்குமுடனே உரித்து சரித்த
புலித்தோல் அசைந்தாட
செங்கையில் ஏந்திய மான் மழுவாட
செம்பொற்குழை கண் முயலகனாட
கங்கை இளம்பிறை செஞ்சடையாடக்
கனக சபைதனிலே
ஆர நவமணி மாலைகளாட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாடச்
சிதம்பரத்தேர் ஆட
பேரணி வேதியர் தில்லைமூவாயிரம் பேர்களும்
பூசித்துக்கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனகசபை தனிலே
நிர்த்த கணபதி வேலார் நின்றாட
நின்று அயன் மாலுடன் இந்திரன் ஆட
முப்பத்து முக்கோடி தேவருடனே
முனிவரும் நின்றாட
மெய்ப்பதி மேவும் பதஞ்சலியாட
வியாக்கிர பாதரும் நந்தியும் ஆட
ஒப்பற்ற சிவகாமியம்மையும் கூடவே நின்றாட

சிதம்பரத்தேர் அசைந்து வருவதைக் காணும்போது, மனக்கண்ணில் இத்தனை காட்சிகளும் படம் போல்
விரியும்.இந்த ரதம் புறப்படுவதற்கு முன் ரதயாத்திரா தானம் உண்டு. அதைக் காண்பதற்கு விடியலிலே ஆயிரக்கணக்கான மக்கள் தில்லை மன்றிலிலே கூடுவார்கள். தேவார திருவாசகங்கள் பாடுவார்கள்.ஆனி உத்திரத்திருவிழா சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறும். எட்டாம் நாள் வரை உற்சவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். கீழவீதி தேர் நிலையிலிருந்து புறப்படும் ரதங்கள் நான்கு வீதிகளிலும் பல்வேறு உபசாரங்களையும், மண்டகப்படிகளையும் கண்டு, அசைந்து செல்லும். தேர் நிலைக்கு வருவதற்கு இரவு ஏழு மணி ஆகிவிடும். அதற்குப் பிறகு பூஜைகள் செய்து, தேரிலிருந்து நடராஜரையும் சிவகாமி அம்மையும் இறக்கி, கீழ சந்நதி ராஜகோபுரம் வழியாக ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருளச் செய்வார்கள். ஜூலை மாதம் 6ஆம் தேதி அதிகாலை, சப்தமிதிதி, உத்தர நட்ஷத்திரம், புதன்கிழமை, நான்கு மணியிலிருந்து ஆரம்பித்து,  சிவகாமி சமேத நடராஜர் மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெறும். இதுவே ஆனி திருமஞ்சனம்.பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என இன்னும் பலவகை குளிர்ந்த பொருட்களைக்கொண்டு ஆனித் திருமஞ்சனம் நடைபெறும். இதைக் காண்பதற்கு கண்கள் இரண்டும் போதாது.
திருஞானசம்பந்தர் திருமஞ்சனத்தைப் பற்றி அழகான ஒரு தேவாரத்தில் பாடுகின்றார்.

ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்
அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங்
கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும்
பல் சடை பனிக்கால்
கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே

7 மணியிலிருந்து 11 மணி வரை திருவாபரண அலங்காரங்கள் செய்யப்படும். அதற்குப் பிறகு பஞ்சமூர்த்திகள் நான்கு தேர் வீதிகளிலும் வலம் வருவார்கள்.சித்சபையில் ரகசியபூஜை நடக்கும்.பிற்பகல் 12 மணிக்கு மேல், பஞ்ச வாத்தியங்கள் முழங்க, மேளதாளங்களோடு, நடனமாடியபடி, லட்சக்கணக்கான மக்களுக்கு தரிசனம் தந்தபடி, ஆனித் திருமஞ்சன மகா தரிசன காட்சி நடைபெறும்.
தேரில் ஏறுவதற்காக முதல்நாள் வெளியே வந்த பெருமான், ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து ஞான சித்சபை பிரவேசம் செய்வார். இரவு அற்புதமான முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறும்.ஆனித் திருமஞ்சனம், மனஅமைதியும், உடல்வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்தது.
இந்தப் புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்குச் சென்று இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும். ஆச்சரியங்கள் நிறைந்த திருவண்ணாமலையிலும் ஆனி திருமஞ்சனம் மிக விமரிசையாக நடைபெறும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள்.சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்துகொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் அவர்களுக்கு உரிய இடத்தில் திருமணம் நடைபெறும்.சிதம்பரம், உத்தர கோசமங்கை உள்பட சில தினங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் புகழ் வாய்ந்தது.இந்த தலங்களில் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நடராஜரை வழிபடுவார்கள்.சிதம்பர இரகசியம் என்றால் என்ன!சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள்தான்.

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப்பகுதி என்று கூறப்படுகின்றது. (Centre Point of World’s Magnetic Equator).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர் கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்கக் ரேகையில் (LONGITUTE) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (156024 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியைக் கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில்
‘‘திருமூலர்’’
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது ‘‘மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்’’. என்ற பொருளைக் குறிகின்றது.

(7) ‘‘பொன்னம்பலம்’’ சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை ‘‘பஞ்சாட்சர படி’’ என்று அழைக்கப்படுகின்றது, அதாவது ‘‘சி, வா, ய, ந, ம’’ என்ற ஐந்து எழுத்தே அது. ‘‘கனகசபை’’ பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனகசபை தாங்க 4 தூண்கள் உள்ளன, இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS), மனிதஉடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.
(9) பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் ‘‘cosmic dance’’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்தாலும், ஆனி கோடைத் தாக்கத்திலிருந்து நடராஜப் பெருமானைக் குளிர்விப்பிதற்காக, ஆனித் திருமஞ்சனம் விழா முதன் முதலில் பஞ்ச பூதத்தலங்களில் வானத்தைக் குறிக்கும் சிதம்பரம் தலத்தில்தான் தோன்றியது.
பதஞ்சலி மகரிஷி இந்த திருவிழாவைத் தொடங்கி வைத்ததாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. திருமஞ்சனம் என்றால் “புனித நீராட்டல்” என்று அர்த்தமாகும். அதாவது ஈசனைப் பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள்.

 

The post தில்லைக்குச் சென்றால் எல்லையில்லாத இன்பம் appeared first on Dinakaran.

Related Stories: