ராஜகோபுர மனசு

பகுதி 18

(வல்லாள கோபுரக் கதை)

கோட்டைக்குள்ளிருந்த படியே, ஏதோ பேருக்கு அம்பும், ஈட்டியும் எய்துவிட்டு, ஒளிந்துகொண்ட சுல்தானின் படைத்தளபதிகள், வெளியே பரந்தகடலாய் திரண்டிருந்த ஹொய்சாலத்தின் படை களைக் கண்டு, குறிப்பாக, வயதானாலும், சிங்கமாய் கம்பீரமாக குதிரையிலமர்ந்திருந்த மன்னர் வீரவல்லாளனைக் கண்டு, சற்று கலங்கித்தான் போயிருந்தார்கள். “வெறும் மூவாயிரம் வீரர்களை வைத்துக் கொண்டு, இப்படியொரு பிரம்மாண்ட படையை வெல்வதென்பது, இறைவனே இறங்கி வந்து நமக்காக போரிட்டால்தான் ஆகும்” என வானம் பார்த்து சலாம் வைத்தபடி, கவலையுடன் பேசினார்கள்.

இடையிடையே தூவான மழைபோல, மீண்டும் அம்பும், ஈட்டியும் எய்தபோது, சர்வசாதாரணமாக அவற்றை தடுத்த ஹொய்சாலப் படைகளை கண்டு, “இதில் ஒருபயனுமில்லையென” தலையில் கை வைத்துக் கொண்டார்கள்.

“இவர்களைத் தாண்டி மதுரைக்கு தகவலெப்படி அனுப்புவதென தீவிரமாய் விவாதித்தபோது, யாரோவொரு முட்டாள்தளபதி, “அதற்கு அவசியமில்லை. இவர்கள் நம்மோடு போரிட வந்தவர்களில்லை. எங்கோ போரிடப் போகிற வழியில், நம்மை முற்றுகையிட்டிருக்கிறார்கள். காத்திருந்து பார்த்துவிட்டு, அவர்களே போய் விடுவார்கள்.” என நக்கலாய் கூற, ஒரு கிழத் தளபதி,
எழுந்துபோய் அவன் முகத்தில், வாளின் கைப்பிடியால் குத்தினார். வாய்கிழிந்து, வழிந்த ரத்தத்தை துடைத்தபடியே அவன், கிழவரைப்பார்த்து கத்தினான்.

“அப்போது இதற்கென்னதான் வழி? இப்படி உள்ளிருந்தபடியே அம்பெறிவதா?”
கிழவர் நிதானமாக பதில் சொன்னார்.“நீ முன் சொன்னதில், பாதி உண்மை. உள்ளிருந்தபடி நாம் காத்திருக்க வேண்டும், ஆனால், எதிர்ப்பெதுவும் தெரிவிக்காது”
“எதிர்ப்புத் தெரிவிக்காமல் காத்திருக்க வேண்டுமா? எதுவரை?”“ஒன்று, நாம் அவர்களோடு பேச முயற்சிக்கும்வரை. அல்லது அவர்கள் நம்மை அழைத்து பேசும்வரை. ஏனெனில், காலம், எதிரிக்கு சாதகமாகயிருக்கிறது.”எல்லோரும் கிழவர்சொல் நிதர்சனம் புரிந்து, காத்திருந்தார்கள். காத்திருப்பில், நாட்கள் கழிந்து, வாரம் முடிந்து, மாதங்கள் தொடர்ந்தன. ஒருநாள் திடீரென வீரவல்லாளப் படைகள் வேகமாகத்தாக்கின. தாக்குதலின் உக்கிரம் தாளாமல், என்ன செய்வதென தவித்த சுல்தானின் தளபதிகள், வேறுவழியின்றி சமாதானக்கொடி அசைத்து தூதனுப்பினார்கள்.

எதிர்பக்கத்திலிருந்து அனுமதிவர, சுல்தானின் பிரதிநிதிகள் மதம் சார்ந்த சில பெரியவர்களோடு கோட்டையைவிட்டு வெளியே வந்தார்கள். உடன் அந்த கிழத் தளபதியும் இருந்தார். தளபதிகள் சூழ அமர்ந்திருந்த மன்னருக்கெதிரே, எல்லோரும் போய் நின்றார்கள். உபதளபதிகள் வீரசாந்த தண்டநாயகனும், பீமராயனும் எழுந்து அவர்களை மறித்தார்கள். மன்னர், உடனமர்ந்திருந்த தளபதி மாதப்ப தண்ட நாயகரைப்பார்த்து கண்காட்ட, மாதப்பர், “ம்ம்ம்” என ஒற்றை வார்த்தையில் உபதளபதிகளுக்கு கட்டளையிட, புரிந்துகொண்ட அவர்கள், வந்தவர்களை சோதனையிட்டு, பின் அனுமதித்தார்கள்.

தூது வந்தவர்கள், தலை சாய்த்து மன்னரை வணங்கி, ஒரேகுரலில் “வாழ்க மன்னர்” என்றார்கள். ரோஜாப் பூக்களும், வாசனைத் திரவியங்களும், சீனத்துப் பட்டுகளும், பழ வகைகளும் நிரம்பிய சில வெள்ளித் தாம்பாளங்களை மன்னர்முன் வைத்தார்கள். தனித் தட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டுத் துணிக் கடிதத்தை, தட்டுடன் நீட்டினார்கள்.

வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு, அற்புதமான மனநிலையிலிருந்த மன்னர், தளபதியிடம் மீண்டும் கண்ணைக் காட்டினார். புரிந்து கொண்ட மாதப்ப தண்டநாயகர், பட்டுத் துணிக் கடிதமெடுக்க முற்பட்டபோது, திடீரென மன்னர், தளபதியை கையமர்த்தினார்.

ஆசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு தூது பேச வந்தவர்களைப் பார்த்து, பேசத் துவங்கினார். “அந்தக் கடிதத்தில் உள்ளதையறிவதில் எனக்கு ஆர்வமில்லை. அறிகின்ற அவசியமுமில்லை. என் எண்ணம் எதுவென்பதை நானே தெரிவித்து விடுகிறேன். இது என் கட்டளையும்கூட. இந்த கண்ணூர்குப்பம் என் பூர்வீகம்.

என் பாட்டன் சொத்து. இதெனக்கு வேண்டும். கோட்டையைத் தகர்த்து உள்ளே நுழைவதும், போரில் உயிர்களைக் கொன்று, இதை மீட்பதும் எனது படைகளுக்கு பெரிய காரியமில்லை. என் படைகளின் உக்கிரத் தாக்குதல், அதை நிமிடப் பொழுதில் நடத்தி விடும். ஒரு சிற்றுண்டி அருந்தி, கைகழுவிவிட்டு, நான் துண்டெடுத்து துடைப்பதற்குள் இந்தப் போர் முடிந்து விடும். ஆனால், அப்படியொரு அழிவில், எனக்கு விருப்பமில்லை. அதனால்தான், கோட்டையைத் தகர்த்து உள்ளேயே நுழையாமல், வெட்ட வெளியில் கூடாரமிட்டு காத்திருக்கிறேன்.”

“உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். மொத்த ஆட்களும், இங்கிருந்து நகர்ந்து விடுங்கள். இது எனது அரசின் உத்தரவு. நகர்ந்து, வடக்குப் பக்கம் போவதோ அல்லது மதுரை நோக்கி நகர்வதோ உங்கள் விருப்பம். எங்கள் வழிபாட்டைச் சார்ந்த மக்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் இங்கேயே இருக்கலாம். உங்களுக்கு தரப்பட்ட அவகாச காலத்திற்குள் நகரவில்லையெனில், போர் நிச்சயம்.

முடிவு உங்கள் கையில்” என முடித்த மன்னர் வீரவல்லாளன், ஒய்யாரமாக ஆசனத்தில் சாய்ந்து கொண்டார். அத்தனையையும் கேட்டுக் கொண்ட தூதுப் பிரதிநிதிகள், பணிவுடன் “ஹொய்சாலப் பேரரசின் உத்தரவை, சுல்தானின் பொறுப்பு அமைச்சர்களிடமும், படைத் தளபதிகளிடமும், அப்படியே சொல் மாறாமல் தெரிவிக்கிறோம். மன்னர் விடைதர வேண்டும்” என்றார்கள். மன்னர் வாசல்காட்டி அனுமதிக்க, மீண்டும் வணங்கி விடைபெற்றுக் கொண்டார்கள். எல்லோரும் கிளம்ப எத்தனிக்கும்போது, அந்தக் கிழத் தளபதி மட்டும், “மேன்மை பொருந்திய மன்னருக்கு ஒரு விண்ணப்பம்.. அதற்கு மன்னர் சற்று மனம் வைக்க வேண்டும்” என்றார்.

மன்னருக்கு கிழத் தளபதி விண்ணப்பித்த விதம் பிடித்திருந்தது. புன்னகையுடன், “கூறுங்கள்” என்றார். “இந்த அவகாச காலம் மிகவும் குறைவானது. இவ்வளவு பெரிய முடிவை மூன்று நாட்களுக்குள் எப்படி எடுக்க முடியும்? மொத்தக்கூட்டமும் மூன்று நாட்களில் எப்படி நகரமுடியும்? இன்னொரு விஷயம், இங்கிருப்போர் எத்தனை கலந்தாலோசித்தாலும், முடிவெடுக்கும் உரிமை மொத்தமும், எங்கள் சுல்தானின் கையில். காரணம், இவர்கள் வெறும் பொறுப்பு அமைச்சர்கள்தான்.”“ம்ம்ம் சரி”

“அதுமட்டுமில்லாமல், தங்கள் முற்றுகையை மீறி, எங்கள் சுல்தானுக்கு, இதுவரை எங்களால் தகவலனுப்ப முடியவில்லை. முதலில் அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும். அப்படி நீங்கள் அனுமதித்தால், எங்கள் பிரதிநிதிகள் மதுரை சென்று, பேசி முடிவெடுத்துத் திரும்ப, மூன்று நாட்கள் எங்கே போதும்?. அதற்கு சற்று கூடுதல் அவகாசம் வேண்டும். ஒரு மாதமாவது அல்லது குறைந்த பட்சம் இரண்டு வாரங்களாவது.”“ம்ம்ம். அடுத்து” “தங்களின் தொடர்ச்சியான முற்றுகையால், எங்களின் உணவுப் பொருட்களின் கையிருப்பு பற்றாக்குறை ஆகிவிட்டது. அவற்றை தயார் செய்து கொள்ளும்வரை, இப்போது நடந்ததுபோல, திடீர் தாக்குதலை நிகழ்த்தாதிருக்க வேண்டும்” மன்னர் சிரித்தார். “ஒரு விண்ணப்பமென கூறிவிட்டு, இத்தனை விண்ணப்பங் களா? என்றவர், தன் தளபதியின் பக்கம் திரும்பி, முற்றுகையை சற்று தளர்த்தக் கூறினார். தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார். படைவீரர்களை தளர்வாய் இருக்கச் சொன்னார்.

அதே வேகத்துடன் கிழவர் பக்கம் திரும்பி, ‘‘பதினைந்து நாட்கள் வரை தங்கள் சுல்தானுக்கு அவகாசம். அது கடிதமாய் தங்களுக்கு வரும்” என்று புன்னகையுடன் விடை கொடுத்தார்.
கிழத் தளபதி நன்றியுடன் தலை வணங்கி, தூது பேச வந்தவர்களுடன் கோட்டைக்கு திரும்பிப் போனார். ஒரேநாளில் அரசு முத்திரையுடன் வந்த, மன்னர் வீரவல்லாளனின் கடிதத்தை எடுத்துக்கொண்டு, கண்ணூர் குப்பத்து வீரனொருவன் மதுரையை நோக்கிப் பறந்தான். ஒன்றரை நாள் பயணத்தில், மதுரையை அடைந்து, சுல்தான் கியாஸ் உதீன் தம்கானியிடம், மன்னர் வீரவல்லாளனின் கட்டளையை நீட்டினான்.

கடிதத்தை வாசிக்கச் சொல்லி, கேட்டறிந்த தம்கானி வெறியானான். “நமக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த அடிமைநாய், நமக்கே கட்டளையிடுகிறதா?” என கடிதம் பறித்து, கிழித்தெறிந்தான். உடனே தர்பார் கூட்டி விவாதித்தான். சிலர், “கண்ணூர் குப்பம் அப்படியொன்றும் பெரிய நகரமில்லை. பேசாமல் விட்டு விட்டு நகர்ந்து விடலாம்” என்றனர். ஆனால் தளபதிகளோ, “இதை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். ஏற்கனவே, இந்தக் கிழவன் ஆதரவுடன், நிறையப்பேர் நமக்கெதிராக ஆரம்பித்து விட்டார்கள். இதை இப்படியே விட்டுவிட்டால், தெற்குப் பக்கம் முழுவதும் இப்படி கிளம்பி விடுவார்கள். இதற்கு படையெடுத்து தாக்கும் முடிவே சிறப்பு.

தளபதிகளின் சொல்லையேற்ற தம்கானி, “படையெடுத்துப் போவதே சரி. படைகளுக்கு நானே தலைமையேற்கிறேன். இப்படையெடுப்பில் வென்று, அந்தக் கிழவனை கைது செய்து, அணுஅணுவாக சித்ரவதைசெய்து, என் கையாலேயே கொல்கிறேன்” என தொண்டை கிழிய கத்தினான். மதுரையிலிருந்து சுல்தானின் படைகள் புறப்பட்டன. வலப் பக்கமும், இடப் பக்கமும் இரண்டு தளபதிகள், ஆளுக்கு மூவாயிரம் வீரர்களுடன், சூழ்ந்து வர, நடுவே குதிரையில் ஆறாயிரம் வீரர்களுடன், மொத்தம் பன்னீராயிரம் வீரர்களுடன் கியாஸ் உதீன் தம்கானி கண்ணூர்குப்பம் நோக்கி கிளம்பினான். இரண்டு நாள் பயணத்தில், ஒரு விடியற் காலையில் சத்தமின்றி கண்ணூர்குப்பத்து கோட்டையின் எதிர்பக்க மைதானத்தின் பின்புறத்தை அடைந்தான். மைதானத்தில் குதிரைகளையெல்லாம் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, காலடி சப்தமெழுப்பாமல் ஹொய்சாலத்து படைகளை தாக்குவதற்கு, நெருங்கினான்.

உற்சாகமாக ஆரம்பிக்கிற சில வரலாற்று நிகழ்வுகளை பொசுக்கென்று முடித்து விடுகிற விதியின் நோக்கம், நமக்குப் புரிவதில்லை. வானுக்கும், பூமிக்கும் விஸ்வரூபடுத்து நிற்கிற, வீரன் கவண் எறிகிற சிறுவனிடம் எப்படித் தோற்றான் என்பதற்கான விடை நமக்கு கிடைப்பதில்லை.போர் நிறுத்தத்தினால் ஹொய்சாலத்து வீரர்கள் மைதானத்தில் தளர்வாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். மன்னர் கேட்டுக் கொண்டதற்கினங்க, கோபுரப் பணிகளை மேற்பார்வையிட மாதப்பதண்டநாயகரும் அருணைக்கு சென்றிருந்தார். அநேகர்கள். கிழக்குமூலையில் மன்னர் தனதுபூஜைகளை செய்துகொண்டிருந்தார். காட்சிகள் எல்லாம் மாறின.

பூனைபோல நெருங்கிய சுல்தானின்படை, நாலாபக்கமும் சூழ்ந்து கொண்டது. என்ன நடக்கிறதென எல்லோரும் உணர்ந்து, சுதாரிப்பதற்குள், முன்னறிவிப்பு செய்யாமல் சுற்றி வளைத்து, போர் தர்மமின்றி தாக்கியது. பாதி உறக்கத்திலிருந்தவர்களை வெட்டி வீழ்த்தியது. படைகள் வருவதை முன்பே அறிந்திருந்த கண்ணூர்குப்பம் படைகளும் தாக்குதலில் இணைந்து கொண்டன. எதிர்பாராத துரோகமாய், ஹொய்சாலப் படையிலிருந்த சில வீரர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர்.

(அடுத்தஇதழில் முடியும்…)

குமரன் லோகபிரியா

The post ராஜகோபுர மனசு appeared first on Dinakaran.

Related Stories: