பாகம் 6
14. திருக்கோழி/உறையூர் முக்தீஸ்வரம்
திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியான உறையூர், தாயுமானவர் கோயிலில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள திவ்யதேசம், திருக்கோழி (குலசேகர ஆழ்வார் 1, திருமங்கை ஆழ்வார் 1). இந்த தலம், அரங்கனே அழகிய மணவாளனாய் வந்து கமலவல்லி நாச்சியாரை மணந்ததால் நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
“கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழிஅம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில் மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய,
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா!’’
(திருமங்கை ஆழ்வார் 1762)
‘‘பெருமாள் திருக்கோழியில் இருப்பவர்; திருக்கூடலில் இருப்பவர்; மலை போல் மேனி உடையவர்; நான்கு அகலமான தோள்களை உடையவர்; மாகடல் போன்ற கருநீல நிறமுடையவர்; ஒரு கையில் சங்கும் மறு கையில் சக்கரமும் உடையவர்; இவரைவிட அழகானவர் உண்டோ?’’ இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் உறையூர், நாகை, மதுரை மூன்றிலும் இருப்பவர் ஒருவரே என்றுகூறி அந்த அழகிய பெருமாளை வந்து தரிசித்து அருள் பெருமாறு அழைக்கிறார்.
திருக்கோழியில் இருந்து 350 மீ தூரத்தில் உள்ளது, பாடல் பெற்ற தலமான உறையூர் (முக்தீஸ்வரம், சம்பந்தர் 11).
“சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.’’
(சம்பந்தர் 2. 120.1)
‘‘இறைவன் திருநீற்றைச் சந்தனம் போல் உடல் முழுவதும் பூசி இருக்கிறார். கங்கையைத் தலையில் வைத்து இருக்கிறார். கோச்செங்கோட்சோழன் கட்டிய முக்தீஸ்வரத்தில் அழகிய உமாதேவியோடு அமர்ந்து இருப்பதன் காரணத்தை யார் அறிவார்?’’ சோழ அரசனின் புகழைச் சொல்வதன் மூலம் உறையூர் சோழர்களின் தலைநகராக இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். உமாதேவி சமேத முக்தீஸ்வரரை தரிசித்து அருள் பெற பக்தர்களை அழைக்கிறார்.
15. திருத்தலைச்சங்கம் / நாண்மதியம்
தலைச்சங்காடு என்ற புராதனமான கிராமம், நாகை மாவட்டத்தில் உள்ளது. இது சீர்காழியில் இருந்து 16 கி.மீ; திருக்கடையூரில் இருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள திவ்ய தேசம் தலைச்சங்க நாண்மதியப் பெருமாள் கோயில் (திருமங்கை ஆழ்வார் 2). சந்திரனுக்கு அருளியதால் பெருமாளுக்கு நாண்மதியப் பெருமாள் என்றும், வெஞ்சுடர்ப் பெருமாள் என்றும் பெயர்
“கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடி கமழும்
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல்திசையுள்
விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெம் சுடரை
கண் ஆரக் கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்றுகொலோ?’’
(திருமங்கை ஆழ்வார், 1738)
‘‘கண்ணபுரத்திலும் கடிகையிலும் இறையும் அழகானப் பெருமாள், குளிர்ந்த தாமரைகள் சூழ்ந்த தலைச் சங்கத்தில் உள்ளார். அவர் சந்திரனைத் தன் தலைமேல் வைத்து இருக்கிறார். அந்த ஒளியையும் குளிர்ச்சியையும் என்னால் காண முடிகிறது. இந்த அற்புதக் காட்சியையும் மகிழ்ச்சியையும் நான் எவ்வாறு விவரிப்பேன்?’’ ஆழ்வார் இந்தப் பாசுரத்தை திருக்கண்ணபுரத்தில் அருளினார். சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள நாண்மதியப் பெருமாளின் அழகான காட்சி அவர் முன் தெரிந்தது. திருக்கண்ணபுரத்து சௌரிராஜப் பெருமாளின் அழகு போல் நாண்மதியப் பெருமாளின் அழகு ஆழ்வாரைக் கவர்ந்தது. கண்ணபுரமும் கடிகையும் நாண்மதியமும் ஒன்றே என்று ஆழ்வார் கூறுகிறார். இதற்கு அருகே உள்ள பாடல் பெற்ற தலம் சங்காரண்யேஸ்வரர் கோயில் (சம்பந்தர் 11).
``நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதம்
சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.’’
(சம்பந்தர் 2.55.1)
‘‘அழகான சங்கால் செய்யப்பட்ட தோட்டையும் குண்டலத்தையும் அணிந்து இருக்கிறீர்; நாங்கு வேதங்களையும் அருளினீர்; சுடுகாடு அல்லாத இடத்தை நீர் விரும்புவது இல்லை. தலைச்சங்கக் கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டு உள்ளீர்.’’ இந்தப் பதிகம் நமக்கு தலைச்சங்கக் கோயிலை அறிமுகப் படுத்துகிறது. மற்ற பாடல்கள் இறைவனின் பெருமைகளைப் பாடுகின்றன.
16. தேரழுந்தூர்
தேரழுந்தூர் கிராமம் மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த ஊர்த் திவ்ய தேசம் ஆமருவியப்பன் கோயில் (திருமங்கை ஆழ்வார் 45).
“தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ, நள்ளிருட்கண்
வந்த எந்தை பெருமானார் மருவி நின்றவூர்போலும்,
முந்தி வானம் மழைபொழியும் மூவாவுருவில் மறையாளர்
அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே.’’
(திருமங்கை ஆழ்வார் 1588)
‘‘என் தந்தையாகிய நீர் நள்ளிருளில் பிறந்த போது உமது தந்தை காலில் விலங்கு இருந்தது. வானம் மும்மழை பொழியும் இடமும் அந்தணர் வேதம் ஓதும் இடமும் ஆகிய அழுந்தூரில் நீர் எழுந்து அருளியுள்ளீர்.’’ ஆழ்வார் ஆமருவியப்பனை ஸ்ரீகிருஷ்ணராகப் பார்க்கிறார், பெருமாள். அருகே காணப்படும் அழகான கன்றுக்குட்டி பெருமாளை ஸ்ரீகிருஷ்ணராகக் காட்டுகிறது. இங்குள்ள பாடல் பெற்ற தலம், வேதபுரீஸ்வரர் கோயில். (சம்பந்தர் 11) திவ்ய தேசத்தில் இருந்து 1 கி.மீ. இந்தக் கோயிலை பெரிய கோயில் என்றும் மடம் என்றும் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.
“அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
நிலையார் மறியுந் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் மிவையேந் துசெல்வ
நிலையா வதுகொள் கெனநீ நினையே.’’ (சம்பந்தர் 2.20.5)
‘‘கடல் போல் நீர் உள்ள அழுந்தையில் அமர்ந்த பெருமான் கையில் மழுவும் சூலமும் மான் கொம்பும் கொண்டுள்ளார். மனமே, உலகில் நிலையாக உள்ளது அவர் அருளே என்பதைத் தெரிந்து கொள்.’’ சம்பந்தர் நமக்காகச் சொல்வது இறைவனின் அருளைத் தவிர வேறு ஒரு சிறந்த விஷயம் எதுவும் இல்லை என்பதே.
(தொடரும்)
பேராசிரியர் ஜி.ஸ்ரீநிவாசன்
The post பதிகமும் பாசுரமும் appeared first on Dinakaran.