இந்த அடியவன் பார்த்த அற்புதங்கள்!

பாண்டிச்சேரிக்கு அருகில் பஞ்சவடி க்ஷேத்திர நிர்மாண வேலைகள் நடைபெறும் நேரம். 2004-மார்ச் மாதத்தில் ஒரு நாள் மதிய வேளை. உணவருந்திவிட்டு, சற்றுக் கண்ணயர்ந்தேன். ஒரு தெய்வீகக் கனவு. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி என் முன் தோன்றி, “நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். என் பிரபு ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் திவ்யத் திருப்பாதுகைகளைத் தயாரித்து, அவற்றை பாரத தேசத்திலுள்ள புண்ணிய நதிகளுக்கும் ஸ்தலங்களுக்கும் எடுத்துச் சென்று பூஜை செய். முக்கியமாக ஸ்ரீராமன் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தியில் பிரபுவின் ஜனன ஸ்தானத்தில் விசேஷ பூஜை நடத்து. கும்பாபிஷேக நேரத்தில், பஞ்சவடியில் ஸ்ரீராமன் சந்நதியில் அந்தத் திருப்பாதுகைகளை பிரதிஷ்டை செய்! பரம க்ஷேமம் உண்டாகும்!” என்று கட்டளையிட்டு மறைந்தார்.

உடனே ஆலய டிரஸ்டிகளிடம் கலந்து பேசினேன். ஆஞ்சநேய ஸ்வாமி ‘உத்தரவிட்டபடியே செய்வது’ என முடிவாயிற்று. முதலில் பாதுகைகளைத் தேக்கு மரத்தில் செய்யத் தீர்மானித்தோம். ஒரு பெரியவர், “ஸ்ரீராமருடைய பாதுகைகளைச் செய்ய தெய்வீகம் பொருந்திய சந்தனக் கட்டையே சிலாக்கியம்!” என்றார். அப்படியே முடிவாயிற்று. திருப்பாதுகைகளைச் செய்யும் ஆசாமி, “பாதுகையோட நீள, அகலம் எவ்ளவு இருக்கணும்? ஸ்ரீராமசந்திரமூர்த்தியோட உயரம் தெரிஞ்சாத்தான் அதுக்குத் தகுந்த மாதிரி செய்ய முடியும்!” என்றார்.

உடனே எனக்குப் பளிச்சென்று நினைவுக்கு வந்தது… ஒரு முறை பிரபல உபன்யாசகர் பிரம்மஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன், ‘ராமசந்திரமூர்த்தியின் சரீர ஆகிருதி எட்டடி. அப்படிப்பட்ட தேஜஸ்வி அவர்!’ என்று சொல்லக் கேட்டிருந்ததை மகிழ்வுடன் ஆசாரியிடம் தெரிவித்தேன். அதற்குத் தகுந்த மாதிரி ஸ்ரீராம பாதுகைகள் தயாராகி, தங்கக் கவசம் வேயப்பட்டது. பின்னர், பதினைந்து நாட்கள் ‘பிராண பிரதிஷ்டர்’ ஹோம பூஜை நடத்தப்பட்டது.

ஸ்ரீஹனுமனின் சொப்பனக் கட்டளையைச் சிரமேற் கொண்டு 11.8.2004 அன்று, ‘ஸ்ரீராம திவ்யமணி பாதுகா’ யாத்திரை முப்பது பக்தர்கள் புடை சூழ, மூன்று வேன்களில் கிளம்பியது. செங்கல்பட்டு விநாயகர் சந்நதியில் வழிபாட்டை ஆரம்பித்து, காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் ஆச்சார்யர்களை தரிசித்த பின் தொடர்ந்தோம்.கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு ஸ்ரீபிரசன்ன வீராஞ்சநேயர் ஆலயம், தலக்காவிரி, தர்மஸ்தலா, ஸ்ரீசுப்ரமண்யா, உடுப்பி க்ஷேத்திரம், கொல்லூர் மூகாம்பிகை, கபீல ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி ஆகிய தரிசனத்துக்குப் பின் சிருங்கேரி வந்து சேர்ந்தோம். “ஸ்ரீபாரதி தீர்த்த மகா ஸ்வாமிகளிடம், “ஸ்ரீஹனுமன் கனவில் தோன்றி கட்டளையிட்டபடி ஸ்ரீராம திவ்யமணி பாதுகைகளுடன், அயோத்தியாபுரி வரை யாத்திரை போகிறோம் ஸ்வாமி. ஒரு கஷ்டமும் இல்லாமல் போய்ட்டு வர நீங்க அனுக்கிரக்கணும்!” என்று பிரார்த்தித்தேன்.

உடனே ஸ்வாமிகள், “சாரதாம்பாள் கிருபையால் யாத்திரை நல்ல விதமா பூர்த்தியாகும்! ஸ்ரீபாதுகா ராமன் கூட வரச்சே… எல்லாத்தையும் அவனே கவனிச்சுப்பான்” என பிரசாதத்துடன் ஆசீர்வதித்து வழியனுப்பி வைத்தார்! தொடர்ந்து புண்ணிய தலங்களை தரிசித்தவாறு 26.8.2004 அன்று இரவு நாசிக் நகரை அடைந்தோம்.

கும்பமேளா வைபவத்தின் பூர்த்தி தினம் அடுத்த நாள் காலை. ஊர் முழுக்க பக்தர் கூட்டம். கோதாவரி நதியில் சிரமப்பட்டு ஸ்ரீராம பாதுகைகளுடன் இறங்கி ஸ்தானம் பண்ணினோம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் எங்களை சூழ்ந்து நின்று, “ஸீதா ராம்ஜிக்கு… ேஜ” என்று கோஷமிட்டு பாதுகைளைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டனர். என் எண்ணம் ‘எப்படியும், ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கட்டளைப்படி ஸ்ரீராமனது ஜன்ம ஸ்தலத்தில் அவனது திருப்பாதுகைகளைக் கொண்டு போய் வைத்து விசேஷ பூஜைகளைச் செய்ய வேண்டும்’ என்பதிலேயே இருந்தது. அன்று புறப்பட்டு ஷீரடி சாய்பாபாவை தரிசித்த பின், அன்று மாலையில் மத்தியப் பிரதேசத்திலுள்ள ‘ஜலேகாவ்’ என்ற ஊரை அடைந்தோம்.

அங்கு ஒரு சிறிய சத்திரத்தில் தங்கினோம். நான் மனம் உருகி பாதுகா ராமனிடம், ‘ராமா… இந்த ஊரில் தங்குவதற்கு விஸ்தாரமான ஒர் இடத்தை நீ ஏற்பாடு பண்ணியிருக்கக் கூடாதா? இப்படி வசதியில்லாத சின்ன இடத்திலே உங்கள் திவ்யமணி பாதுகை களைத் தங்க வைக்கறாப்ல ஆயிடுத்தே!” என்று வருத்தப்பட்டேன். அன்றிரவு திருப்பாதுகைகளுடன் அங்குள்ள ஸ்ரீ மகாலக்ஷ்மி ஸித்தி வேங்கடேஸ்வரா ஆலயத்துக்குச் சென்றோம். அப்போது அந்த ஆலயத்தைத் தனிப்பட்ட முறையில் நிர்மாணித்த ஸ்ரீகாந்த் என்ற ராஜஸ்தானி பக்தரும் அங்கிருந்தார். தரிசனத்துக்குப் பின் அவர் எங்களிடம், “எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். சொன்னோம்.

அவர் உடனே, “நீங்கள் அனைவரும் நம்ம வீட்டில் வந்து தங்குங்கள். உங்களை அழைத்துப் போக நானே ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.எங்களில் ஒருவர் அவசரப்பட்டு, “நாங்கள் முப்பது பேர் இருக்கோம்… உங்களது வீட்டில் அவ்வளவு பேர் தங்க வசதி இருக்குமா?” என்று கேட்டார். பண்பாளரான ஸ்ரீகாந்த் சிரித்துக் கொண்டே “வந்துதான் பாருங்களேன்!” என்று கூறிவிட்டு நகர்ந்தார். நாங்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஊர் எல்லையில் ‘இந்திரபிரஸ்த’ என்ற பெயர் தாங்கிய பெரிய அரண்மனை அது! அது முப்பத்தையாயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. ஸ்ரீராம பாதுகைகளுடன் எங்களையும் ‘பூர்ண கும்ப’ மரியாதையோடு வரவேற்று உள்ளே அழைத்துப் போனார், ஸ்ரீகாந்த்.

விஸ்தாரமான பூஜா மண்டபம் ஒன்றில் ‘ஸ்ரீராம திவ்யமணி’ பாதுகைகளை எழுந்தருளப் பண்ணினர். அடுத்த நாள் ஆவணி அவிட்டம். அங்கு ஒரு தனி இடத்தில் 50 மாணவர்களைக் கொண்ட ருக்வேத பாடசாலை ஒன்றையும் நடத்தி வந்தார் ஸ்ரீகாந்த். பாதுகா பூஜையின்போது அவர்கள் ஒன்றாக ருக் வேதம் சொன்னது, மனசுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அன்று மதியம் அனைவருக்கும் புத்தம் புதிய வெள்ளித் தட்டில் சாப்பாடு! ஸ்ரீராம பாதுகைகளின் மகிமையை அன்று பூரணமாக உணர்ந்தேன்.

மாலையில் புறப்பட்டு நாக்பூர் மற்றும் ஜபல்பூரில் தங்கி தரிசித்தவாறு 3.9.2004 அன்று பிரயாகை எனப்படும் அலகாபாத்தை அடைந்தோம். திரிவேணி சங்கம ஸ்நானம். பின் அங்கிருந்து 200 கி.மீ. தூரத்திலுள்ள சித்திரக்கூட பர்வதத்துக்குச் சென்றோம். அங்கு குகை ஒன்றில் சீதா பிராட்டி எவர் பார்வையிலும் படாமல் குளிக்க சுனை (நீரோடை) ஒன்றை லட்சுமணன் ஏற்படுத்தித் தந்தாராம். அதற்கு ‘குப்த கோதாவரி’ என்று பெயர் பார்த்தோம்.

5.9.2004 அன்று காலையில் பூஜை புனஸ்காரங்களை முடித்துக் கொண்டு பயணப்பட்டு இரவு எட்டு மணி சுமாருக்கு அயோத்தியை அடைந்தோம். அங்கு ‘ஸ்ரீராமசந்திர மானஸ் பவன்’ விருந்தினர் மாளிகையில் ஸ்ரீராமன் அவதரித்த புனித மண்ணில் தங்கினோம். அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினோம்.காலையில் அனுஷ்டானங்களுக்குப் பிறகு, ஸ்ரீராமன் நீராடிய ‘சரயூ’ நதியில் பாதுகைகளுடன் சேர்ந்து சங்கல்ப ஸ்நானம் பண்ணினோம். அங்கிருந்து அயோத்தியின் நடு நாயகமாக விளங்கும் ஹனுமன் கோயிலுக்குச் சென்றோம். அவர்தான் தற்போது அயோத்தி ராஜாவாம். எல்லாம் நல்ல விதமாக நடக்க ‘ராஜ ஹனுமனை’ வேண்டிக் கொண்டு திரும்பினோம்.

அப்போது எங்களில் சிலர் இரு குழுக்களாகப் பிரிந்து, ராமர் கோயிலுக்குப் பாதுகைகளை எடுத்துச் செல்ல பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வருவதாகக் கூறிச் சென்றனர். அடிக்கடி பலர் வந்து பாதுகைகள் பற்றி விசாரித்ததால், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து விட்டது. எனவே, அனுமதி தர மறுத்து விட்டனர்.

மாலை நான்கு மணி. அனைவரும் ‘ராம ஜன்மபூமி’ நோக்கிப் புறப்பட்டோம். எல்லோர் மனதிலும் இனம்புரியாத ஓர் ஆனந்தம். பாதுகாப்பு அதிகாரிகள் நெடுநேரச் சோதனைக்குப் பின் உள்ளே அனுமதித்தனர். குறுகலான இரு பக்கத் தடுப்புகளைக் கடந்து நெடுந்தூரம் சென்ற பின்னரே, அந்தப் புனிதமான சந்நதி கண்ணில் பட்டது. ஆம்! பாலக தோற்றத்தில் ஸ்ரீராம-லட்சுமண-பரத சத்ருக்னார் எழுந்தருளியுள்ள சந்நிதானம். தரிசிக்கும் இடத்திலிருந்து சுமார் நூறடி தள்ளி மேடான பகுதியில் அமைந்துள்ளது மேடை. விளக்கொளி மங்கலாக இருந்தாலும் திருமூர்த்தங்கள் ஜொலித்தன! சந்நிதியில் பூஜகர் எவரும் தென்படவில்லை.

என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. ‘ராமா! உன் திருப்பாதுகைகளை இங்கு கொண்டுவர முடியவில்லையே’ என தொலைவில் இருந்து வருத்தப்பட்டவன் திடீரென்று, “ஸீதா ராமசந்திரமூர்த்திக்கு…” என்று உச்சஸ்தாயியில் கோஷமிடவும், உடனே வந்தவர்கள் “ஜே… ஜே” என பதில் கோஷமிட்டனர்.இந்த கோஷம் சுமார் இரண்டு நிமிடம் நீடித்தது. சட்டென்று பக்கவாட்டு மறைவில் இருந்து வெளிப்பட்ட 85 வயதுப் பெரியவர் ஒருவர் இரு கரங்களையும் அகல உயர்த்தி எங்களை ஆசீர்வதித்துவிட்டு நகர்ந்தார்.

அவர்தான் பிரதான பூஜகர்! அதற்குள் அங்கு வந்த காவலர்கள், கோஷம் எழுப்பக் கூடாதென சைகையால் எச்சரித்தனர். தரிசனம் முடிந்து குதூகலமாக ஜாகைக்குத் திரும்பினோம்.
இரவு எட்டு மணி. நாங்கள் தங்கியிருந்த ‘ஸ்ரீராமசந்திர மானஸ் பவன்’ மாளிகை வாசலில் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் எங்களுக்குப் பரம ஆச்சரியம்! அவர், மாலையில் ஸ்ரீராம ஜன்மபூமி சந்நதியில் ஆசீர்வதித்த பிரதான பூஜகர். அவரது திருநாமம் சந்த் சத்யேந்திரகுமார்தாஸ். அவருடன் அவரின் குருவும் வந்தார். குருவுக்கு சுமார் 95 வயது இருக்கும். பூரண கும்ப மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றோம்.

ஸ்ரீசந்த் சத்யேந்திர குமார்தாஸ் ஸ்வாமிகள் சொன்னார்: “ஸ்ரீராம் ஜன்ம ஸ்தானத்தில் பக்தி பூர்வமான உங்களது ‘சீதாராம்’ கோஷத்தைக் கேட்டு ஆசீர்வதித்தேன். வெளியில் வந்து விசாரித்தபோது நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து ஸ்ரீராமனின் பாதுகைகளுடன் வந்திருப்பதாகவும், அவற்றை ஜன்மபூமிக்குள் எழுந்தருளப் பண்ண ஆசைப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். அந்தப் பிரபுவின் பாதுகைகளை தரிசித்து, என் கையாலேயே பூஜை செய்வதற்காகவே அந்த பால ராமனுக்குச் சமர்ப்பித்த புஷ்பமாலை மற்றும் பஞ்சாமிர்தத்தோடு இங்கு வந்திருக்கிறேன். இவர் என் குருநாதர். எனக்குத் தெரிந்து இவர் ஐம்பது வருஷங்களாக மௌன விரதம் இருக்கிறார்!”

அந்த மகானின் திருக்கரங்களால் ஸ்ரீராமனின் திவ்யமணி பாதுகைகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தேறின. பால ராம பிரசாதமான புஷ்ப மாலை, பாதுகைகளுக்கு அவர் கையால் அணிவிக்கப்பட்டது. பூஜைகள் முடிந்ததும் திருப் பாதுகைகளைத் தூக்கித் தன் சிரஸின் (தலை) மேல் வைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார் அந்த மகான்!
ஒன்று மிகத் தெளிவாகப் புரிந்தது. ‘நான் இருக்கும் இடத்துக்கு எனது பாதுகைகள் வர முடியாவிட்டால் என்ன! நானே அவை இருக்கும் இடத்துக்கு என அர்ச்சகனை அனுப்பி திருவாராதனம் நடத்தி வைக்கிறேன்’ என்று, அந்த பாலராமனே நடத்தி வைத்தது போலிருந்தது அந்த நிகழ்ச்சி! அதன் பின் பல க்ஷேத்திரங்களைத் தரிசித்தவாறு திருப்பதி திருவேங்கடமுடையான் சந்நதியில் யாத்திரையை முடித்துக் கொண்டு பஞ்சவடி திரும்பினோம்.

தொகுப்பு: ரமணி அண்ணா

The post இந்த அடியவன் பார்த்த அற்புதங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: