நுண்கலை படிப்புகள்
மீன ராசியினர், நுண்கலைகளில் தேர்ச்சி பெறலாம். ஆடல் பாடல் கலைகள், நாடகம் நடித்தல், நாடகம் எழுதுதல், வசனம் எழுதுதல் போன்ற துறைகளிலும் பயிற்சி பெறலாம். கலைகளில் தேர்ச்சி பெற்றால் இவர்கள் ஜாதகங்களில் பத்தாமிடத்தில் சுக்கிரன் அல்லது குரு ஆட்சி, உச்சம் பெற்று நல்ல நிலையில் இருந்தால் இவர்கள் ஆடல் அல்லது பாடல் துறையில் பெரும் புகழ் பெறுவர்.
வசியத்திறன்
மீன ராசியினருக்கு பொறுமையும் நிதானமும் கற்பனைத் திறனும் இனிய பேச்சும் இருப்பதால், இவர்கள் யாரையும் தன் நடத்தையாலும் பேச்சினாலும் வசீகரித்து விடுவார்கள். எனவே இவர்கள் பொது ஜனத் தொடர்பு அதிகாரி ரிசப்ஷனிஸ்ட், ஃப்ரண்ட் ஆபீஸ் மேனேஜ்மெண்ட், சேல்ஸ் கேர்ள்ஸ் விற்பனைப் பிரிவில் நிற்கும் பெண்கள் போன்ற பணிகளில் ஜொலிப்பார்கள்.
என்னென்ன படிக்கலாம்?
மீன ராசியினர் பொறியியல் படித்தால் கட்டிட வடிவமைப்பு துறையில் தேர்ச்சி பெறலாம். நல்ல ஆர்கிடெக்ட் ஆக வந்து அழகுணர்ச்சி மிளிரும் கட்டிடங்களை வடிவமைக்கலாம். கட்டிடத்தின் உள் வடிவமைப்பு (interior decoration) உள் அலங்காரம், வர்ணம் பூசுதல் போன்றவற்றில் இவர்களின் ஆலோசனைகள் மதிக்கப்படும். மருத்துவத்துறையில் இறங்கினால் முக வடிவமைப்பு பிளாஸ்டிக் சர்ஜரி, மூக்கு, உதடு வடிவங்களை மாற்றி அமைத்தல், பற்கள் சீரமைப்பு போன்ற வேலைகளில் சிறப்பாக செயல்படுவார்கள். ஆசிரியர் துறையையும் தேர்வு செய்யலாம். ஆசிரியர் துறையில் நல்லாசிரியர் விருது பெறுவது உறுதி.
ஆடை வடிவமைப்பு (fashion technology course) தலைமுடி அலங்காரம் (hair dresser) போன்ற மேக்கப், மாடலிங் ட்ரெயினர், போன்ற துறைகளிலும் இவர்கள் வெற்றி பெறுவார்கள்.
சினிமா துறையில் film technology படித்து வேலைக்குச் சேர்ந்தால் வசனகர்த்தா, இயக்குனர் போன்ற துறைகளில் நல்ல பெயரும் புகழும் வருமானமும் பெறுவர். மீனராசியினரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், இவர்கள் சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும், பத்திரிகையாளராகவும், ஜோதிடராகவும் வரக்கூடும். இவர்கள் தர்மஸ்தாபனங்கள், கோயில் நிர்வாகம், ஸ்ரீகாரியம், அறநிலையத்துறை போன்றவற்றில் கடமை உணர்ச்சியோடு கண்ணியமாக செயல்படுவார்கள். கோயில்கள் சார்ந்த பள்ளி, கல்லூரி, நூலகம், மியூசியம் மற்றும் தொண்டு நிறுவனங்களில் இவர்களின் பணி சிறப்பாக இருக்கும்.
மீனராசியினர் சிறந்த கல்வியாளராக, ஆராய்ச்சி நிபுணராக விளங்குவார்கள். சமயம், சமூகம், பண்பாடு, இலக்கியம் போன்ற துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவர். சமயம் தத்துவம் (ரிலிஜியன் அண்ட் ஃபிலாசபி) துறைகளில் இவர்கள் முத்திரை பதிப்பது உறுதி.
மாணவப் பருவம்
மீன ராசி குழந்தைகள், மாணவப் பருவத்தில் அமைதியாகவும் ஆர்ப்பாட்டம் இல்லாமலும் கீழ்ப்படிதலோடும் நடந்து கொள்வர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பிரியமான பிள்ளைகளாக இருப்பார்கள். அன்றன்றைக்கு உள்ள பாடங்களை அன்றன்றைக்கே படித்து முடித்து விடுவார்கள். வீட்டுப்பாடம் செய்வதில் கெட்டிக்காரர்கள். இவர்களிடம் சோம்பேறித்தனமோ படபடப்போ இருக்காது. டைம் டேபிள் போட்டு அந்த அட்டவணையின் படி நிதானமாக தங்கள் செயல்களை செய்து முடிப்பார்கள்.
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
மீன ராசி மாணவருக்கு பெரியவர்களின் உதவியோ வழிகாட்டுதலோ தேவையில்லை என்றாலும், பெரியவர்களைக் கேட்டு செய்வதில் இவர்களுக்கு மன அமைதி உண்டு. பெரியவர்களிடம் ஆலோசனை பெற்றுத்தான் இவர்கள் எதையும் செய்வார்கள்.
மதி யூகிகள்
மீன ராசிக்காரர்கள் யூகத்தாலே தெரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். புகை வரும் இடத்தை நோக்கிப் போய் அங்கு எவ்வளவு நெருப்பு எரிகிறது அதை எப்படி அணைக்க வேண்டும் என்று ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். தூரத்தில் இருந்தே புகையின் அடர்த்தி, அகலம், வேகம் ஆகியவற்றைக் கொண்டே அந்த இடத்தில் எவ்வளவு நெருப்பு என்ன வகை நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது என்பதை யூகித்துத் தெரிந்து கொள்வார்கள்.
ஆளை எடை போடுவதில் சூரர்
மீன ராசிக்காரர்களுக்கு ஃபேஸ் ரீடிங், மைண்ட் ரீடிங் திறமை இயல்பாகவே அமைந்திருக்கும். ஒருவரைப் பார்க்கும் போதே அவரைப் பற்றி மனதிற்குள்ளேயே கணித்து விடுவர். அவரிடம் சில வார்த்தைகள் பேசி பார்த்து பின்பு அவருடைய குணாதிசயம், நடவடிக்கைகளை அறிந்துகொள்வர். இவர் நம்முடைய நட்பு வட்டத்தில் இருக்க ஏற்றவரா இல்லையா என்பதை அந்தக் கணமே முடிவு செய்துவிடுவர். ஏற்றவர் என்று முடிவு செய்தால் உடனே ஏற்றுக் கொள்வர். இல்லை இவர் பரபரப்பானவர் துடி துடிப்பானவர் நமக்கு ஒத்து வராது என்று முடிவு செய்தால் அந்த முதல் சந்திப்புடன் முடித்துக் கொள்வார்கள். பழக்கத்தைத் தொடர மாட்டார்கள். அவர்களாக வந்து பேசினால்கூட நாசுக்காக கழற்றிவிட்டு விடுவார்கள்.
அன்புக்கு உருகி வம்புக்கு விலகி
மீன ராசிக்காரர்கள் அன்புக்கு அடிமை. அன்பைக் காட்டிய இவர்களை வீழ்த்திவிட முடியும். அன்புக்கு உருகுவர். ஆனால் மிரட்டியோ உருட்டியோ பணிய வைக்க முயன்றால் ஐஸ் கட்டியைப் போல இறுகி விடுவர். எதிராளி முட்டி மோதி ரத்தம் வர அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட வேண்டும். பொதுவாக இவர்கள் யாரையும் திட்டியோ அடித்தோ சண்டை போட மாட்டார்கள். ஆனால் தங்களின் நுண்ணறிவால் நோகடிப்பர். தேவைப்பட்டால் சூழ்ச்சி தந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி எதிராளியைக் காலி செய்துவிடுவர். நேருக்கு நேர் அடிதடி சண்டை சச்சரவு என்று இவர்கள் இறங்குவது கிடையாது.
கடும்கோபம்
ஆசிரியர் மேலாளர் இவருக்கு பிடிக்காத ஒரு காரியத்தை செய்யச் சொன்னால் மீன ராசி மாணவர்களுக்கோ பணியாளருக்கோ கடும் கோபம் வரும். ஆனால் எதிர்த்துப் பேசாமல் அப்படியே இறுகிப்போய் முடியாது என்று ஒரு சொல்லை மட்டும் உதிர்த்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுவர். ஏன் முடியாது ஏன் இயலாது என்று விலாவாரியாக விளக்க மாட்டார்கள். இவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். ஆனால் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
முறிவு
மீன ராசியினரிடம் பொய் புரட்டு இருக்காது. எதையாவது சொல்லி சமாளிக்க மாட்டார்கள். எதையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசி விடுவது வழக்கம். முடிவை பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. நட்பை முறித்துக் கொள்வார்கள். உறவை முறித்துக் கொள்வார்கள். அது குறித்து பின்னால் கவலைப்படவும் மாட்டார்கள். எப்போதும் கவலைப்படுவதில்லை. இதனால் இவர்களை பார்க்கும்போது ஈரநெஞ்சம் இல்லாத இறுகிய இரும்பு மனதுடையவன் என்பது போல தோன்றும். அது அல்ல உண்மை.
தெய்வாம்சம் உண்டு
மீன ராசியினர் நாமும் வாழ வேண்டும் நம்மைச் சுற்றி இருக்கும் நல்லவர்களும் வாழ வேண்டும் என்று நினைத்து எல்லோருடைய நன்மைக்காகவும் இவர்கள் ஆலோசனைகளை வழங்குவதும் ஆண்டவனிடம் பிரார்த்திப்பதுமாக இருப்பார்கள். கடின உழைப்புக்கு சொந்தக்காரர்கள் கிடையாது. ஆனால், நல்ல ஆலோசனைகளை வழங்குவதில் கெட்டிக்காரர்கள். மீன ராசியினர் அன்பும் இரக்கமும், அறிவும், அருளும் பெற்றவர்கள் இவர்களைக் கிட்டத்தட்ட தெய்வ பிறவிகள் என்றே கூறலாம். பிறருடைய நன்மையை தன் மனதில் நினைத்துப் பார்த்து அவர்களுக்காக இறைவனிடம் வேண்டும் நல்ல மனம் படைத்தவர்கள். சிறந்த ஆன்மிகவாதிகள், சாதுக்கள்,
சித்தர்கள்.
The post மீன ராசியினர் படிப்பும் வேலை வாய்ப்பும் appeared first on Dinakaran.