பலன் சொல்பவர்கள் ஒரு ஜாதகத்தை நீட்டினால், கட்டத்தைப் பார்த்து கடகடவென்று பலன் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதில் சில விஷயங்கள் சரியாக இருக்கும் சில விஷயங்கள் சரியாக இருக்காது என்பது வேறு விஷயம். ஆனாலும், அவர்கள் தயங்க மாட்டார்கள். அவர்கள் வெற்றிகரமான ஜோதிடர்களாகத் திகழ்வார்கள். அவர்கள் தொழில்முறை ஜோதிடர்கள். (professional astrologers) ஆனால் ஆய்வு என்பது வேறு. என்னைப் பொருத்தவரை, ஒரு தனி மனிதருக்கான ஜாதக பலன்களைச் சொல்வதற்கான கலை என்று மட்டும் இதை நினைக்கவில்லை.
நம்முடைய பிரபஞ்சம், மறைமுகமாக சில ஆன்மிக உண்மைகளை ஜோதிடக் கலையின் மூலமாகச் சொல்வதாகவே கருதுகிறேன். காரணம் காரியம், காரியம் காரணம், (Cause and Effect, Effect and Cause) இந்த சுழற்சியில்தான் ஜோதிடம் இயங்குகின்றது. வேதத்தில் கர்மாவைப் பற்றி (karma Theory) புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், ஜோதிடத்தின் மூலம்தான் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். அதனால் ஒரு தனிமனிதருக்கு ஜாதகப் பலன் சொல்வதில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்படுவதில்லை. எனக்கும் நான் ஜாதகப் பலன் பார்த்துக் கொள்வதில்லை.
ஆன்மிகம் புரிந்து கொள்வதற்காகத்தான் ஜோதிடம் என்று ஏன் சொல்லுகிறேன் என்று சொன்னால், மனிதப்பிறப்பின் அடிப்படை கர்மவினை.
“ஏன் எனக்கு இப்படி எல்லாம் நடக்கிறது?’’ என்று ஜாதகத்தைக் காட்டினால், உனக்கு இந்திந்த கிரகங்கள் இப்படி எல்லாம் இருக்கிறது, இன்ன திசா புத்தி நடக்கிறது. அதனால் உனக்கு இப்படி எல்லாம் நடக்கிறது என்று ஜோதிடர் சொல்லிவிடுவார்.
“ஏன் எனக்கு அப்படி கிரகங்கள் நிற்கின்றன?” என்றால் என்ன பதில்?
“நீ செய்த வினைகளின் (action) அடிப்படையில் உனக்கு அதன் பலனை (reaction) தருவதற்காக கிரகங்கள் நிற்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். இங்கே ஆன்மிகம் வந்துவிடுகிறது அல்லவா’’.
“நாம் ஏன் பிறந்தோம்?’’
வினைகளை அனுபவிப்பதற்காகப் பிறந்தோம். அப்படியானால் வினைகளை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டி யதுதானா? அதற்குத்தான் இந்தப் பிறவியா? இல்லை. இந்தப் பிறவி வேறு ஒரு பிறவி இல்லாமல் செய்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது. இந்த வாய்ப்பை இந்தப் பிறவியில் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதைப் பொறுத்ததுதான் வாழ்க்கையில் இனி நடக்கப் போகும் விஷயங்கள். ஒரு ஜாதகனின் ஆன்மிக எதிர்காலத்தை கிரகங்கள் தீர்மானிப்பதில்லை. நேற்றைய வினையின் விளைவு, இன்றைக்கு அனுபவமாக விளைகிறது. அந்த அனுபவத்தை தந்தன ஜாதகத்தில் நிற்கும் கிரகங்கள். ஆனால், இன்றைய வினைகள்தான், நாளைக்கு கிரகங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானம் செய்கின்றன. அதனால்தான் கடந்த காலத்தைப் பற்றி, ஜாதகத்தில் இருந்து துல்லியமாகச் சொல்லிவிடும் ஜோதிடர்களால், எதிர்காலத்தைப் பற்றி அவ்வளவு துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. அவ்வளவு துல்லியமாக (100 percent perfect) என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காரணம் இன்றைய வினைகள் செம்மைப்படுத்தப்பட்டால், விளைவுகள் சற்றே மாறிவிடும்.
ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து ஒரு துணுக்கு சொல்லுகின்றேன். பரிட்சித் மகாராஜா ஒரு பாம்பை எடுத்து முனிவர் கழுத்தில் போட்டார். கோபம் கொண்ட முனி, குமாரன் “நீ பாம்பு கடித்து இறப்பாய்’’ என்று சாபம் விட்டான். ஏழு நாட்களில் பாம்பு கடித்து இறக்க வேண்டும். வினை, (action) வினையின் விளைவு (result or effect) தெரிந்துவிட்டது. அப்படியே சாக வேண்டியது தானே? ஏன் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு, கங்கைக் கரையில் வந்து, சுகப் பிரம்மரிஷியிடம் பாகவதத்தைக் கேட்டு, பிறவி இல்லாத பேரின்ப நிலையை அடைய வேண்டும்?
விளைவைத் தாண்டி பாகவதத்தைக் கேட்டு முக்தி அடைவது நிகழ் காலத்தில் அவன் எடுத்த முடிவு. அந்த இடத்திலே கிரகங்களின் விளையாட்டு இல்லை. இந்த விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்கும் பொழுதுதான், ஒரு முக்கியமான ஆன்மிக உண்மை புதைந்து இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆடு மாடுகளுக்கும் ஜாதகங்கள் உண்டு என்று சொல்கிறார்கள். அதை யாரும் எழுதி வைப்பதில்லை, பார்ப்பதில்லை என்பது வேறு விஷயம். ஆனால், பகுத்தறிவு இல்லாத அந்த ஆடு மாடுகள் விஷயத்தில் கடந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் துல்லியமாகக் கணித்துவிடலாம். ஆனால், மனிதர்கள் விஷயத்தில் அப்படி முடியாது. காரணம், கடந்த காலத்தைத் தீர்மானித்த கிரகங்கள் நிகழ்காலத்தின் நடத்தையைக் கொண்டு எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. நிகழ்காலத்தில் கிரகங்கள் மனிதனுக்கு ஒரு வாய்ப்பைத் தருகின்றன.
“கடந்த கால அனுபவத்தைக் கொண்டு நீ எதையும் சிந்திக்காமல் அப்படியே வாழ்ந்து விடுகிறாயா? அதாவது எங்கள் கட்டுப்பாட்டிலேயே வாழ்ந்து விடுகிறாயா? அல்லது உன் முயற்சியினால் ஏதாவது மாற்றிக் கொள்ள நினைக்கிறாயா?” என்கின்ற வாய்ப்பினை கிரகங்கள் தருகின்றன. அதனால் ஒரு ஜாதகத்தில் எதிர்காலப் பலனை துல்லியமாகச் சொல்வது சற்று சிரமமான காரியமாக இருக்கிறது. கடந்த காலத்தை கிரகங்கள் தீர்மானித்துவிட்டன. அதன் போக்கில் வாழ்ந்துவிட்டீர்கள். இன்பமோ துன்பமோ அனுபவித்து விட்டீர்கள். இன்னும் கொஞ்சம் இன்பமும் துன்பமும் உங்கள் கணக்கில் பாக்கி இருக்கிறது. இதை நீங்கள் எப்படி அனுபவிக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானிக்க நிகழ்காலம் உங்களுக்கு வாய்ப்பை வழங்கி இருக்கிறது.
இதை நீங்கள் புத்திசாலித்தனமாக அணுகினால், கிரகங்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளும். மோசமாக அணுகினால், அதற்குத் தகுந்த விளைவுகள் வரும். வினைக்கு எதிர்வினை தர கிரகங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதன் எதிர்கால நகர்வுகள் உங்களைப் பொறுத்தது.
The post கிரகங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உங்களை எடுக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன appeared first on Dinakaran.