‘நவவித பக்தி’

‘‘முத்திக்கு உழன்று முனிவர்குழாம் நனிவாட
அத்திக்கு அருளி அடியேனை ஆண்டு கொண்டு
பத்திக் கடலுள் பதித்த பரஞ்சோதி
தித்திக்கும் ஆபாடித் தெள்ளேணம் கொட்டாமோ”

‘‘முனிவர் கூட்டம் முக்தி பெறுவதற்கு வருந்தி மிக வாட, என்னை ஆட்கொண்டு பக்திக் கடலில் அழுந்தச் செய்த மேலான இறைவனை இனிக்கும் வகையில் பாடி தெள்ளேனணம் கொட்டுவோம்’’ என்பது திருவாசகத்தில் மணிவாசகர் வாக்கு.தவம், யோகம் முதலியவற்றைக் காட்டிலும் முக்திக்கு உரிய நெறி பக்தியே என்றும் அதனை இறைவன் தனக்கருளினான் என்பதை தித்திக்க – இனிக்கப் பாடுவோம் என்கிறார் மணிவாசகர்.

யஸ்ய தேவே பராபக்திர் – யதா தேவே ததா குரௌ I
தஸ்யைதே கதிதாஹ்யர்த்தா:
ப்ரகாசந்தே மஹாத்மன II

‘‘தெய்வத்திடம் சிறந்த பக்தியும், குருவிடம் சிறந்த பக்தியும் கொண்ட மஹாத்மாவிற்கு உபதேசிக்கப்படும் போது தான், உபதேசிக்கப்பட்ட அனைத்தும் பிரகாசமடையும் ’’ என்று ச்வேதாச்வர உபநிஷதம் ‘பக்தி’யின் பெருமையைப் பேசுகிறது.அதனால்தான், ‘ததேவ ஸாத்த்யதாம், ததேவ ஸாத்த்யதாம், அதாவது, ‘பக்தியே சாதிக்கப்படட்டும், அதுவே சாதிக்கப்படட்டும்’ என்கிறது நாரத பக்தி சூத்ரம் (42)‘கடவுளுடன் ஒன்றிணைவதற்கான சிறந்த பாதை நாரதர் கற்பித்த தெய்வீக அன்பின் வழியைப் பின்பற்றுவதாகும்’ என்பார் பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணர்.

‘நான் யார்?’ என்று விசாரணையைத் தொடங்கிய இரமணர், பக்தியைப் பற்றிச் சொல்லும் போது ‘ஒருவரின் இதயத்தால் தெய்வீகத்தைச் சரணடைதல் தான் பக்தி’ என்கிறார்.
பௌத்த பக்தியின் மையப்பொருள் ‘புத்தரை நினைவுகூர்தல்’ ஆகும். புத்தமதத்தில் ‘திவ்யாவதானம்’ என்ற நூல் தான் பௌத்த பக்தியின் ஆதாரம்.சமணத்தில் பக்தி செய்யும் பக்தருக்கான நெறிமுறைக் கடமைகளை விளக்கிச் சொல்கிறது அவஸ்யக சூத்திரம். பக்தி எதிர்மறை கர்மாவை அழிக்கும் வழிமுறைகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

குரு, நூல், கால்ஸா, தர்மம் ஆகிய நான்கின் மேலும் ஒரு சீக்கியன் பக்தி கொண்டிருக்க வேண்டும் என்பதை அடிப்படையாகச் சொல்கிறது சீக்கியம்.கிறிஸ்துவத்தில் ‘Novena’ (நோவெனா) என்பது பக்தியுடன் தொடர்ந்து ஒன்பது நாள்கள் ஜெபிப்பது. நோவெனாவின் மூலம் கடவுளின் தயவையும் ஆசீர்வாதத்தையும் பெறலாம்.யூதமத பிரார்த்தனைகளில் (jewish prayer) kavanah (கவானா) என்பது நேர்மை மற்றும் பக்தியைக் குறிக்கிறது.

உண்மையான விசுவாசிகள் தொடர்ந்து தெய்வீகத்தின் இருப்பை (presence of the divine – hitbonenut) சிந்திக்கின்றனர். தொடர்ந்து தெய்வீகத்துடன் இணைந்து (Communes with the divine – devenqut) கொள்கின்றனர். இன்னும் பரவசமாக (ecstatically feels the divine – hitlahavut) உணர்கின்றனர். தீவிர அர்ப்பணிப்புடன் (devoted to this divine- kavanah) இருக்கிறார்கள். பக்தியின் நிலைகளை நான்கு வகையாகப் பகுத்துக் கூறுகிறது யூத மதம். இது ஒரு வகையில் சைவம் கூறும் ஞானப் படி நிலைகளுடன் ஒத்துள்ளதை அறியலாம்.

இவ்வாறு எல்லாச் சமயங்களிலும் பக்தியே ‘சிறந்த அன்பின் வடிவமானது’ என்று போற்றப்படுகிறது.‘‘குழந்தாய் பிரகலாதனே! இவ்வளவு காலமாக குருவிடம் நீ கற்றுக்கொண்ட சிறந்த கல்வியைச் சொல்வாயாக’’ என்று ஹிரண்யகசிபு பிரகலாதனிடம் கேட்கிறான்.

‘‘ஸ்ரவணம் கீர்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவனம்
அர்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய மாத்ம நிவேதனம் ”

‘‘விஷ்ணுவினுடைய கதைகளைக் கேட்பது; கதைகளைச் சொல்வது; மனத்தால் த்யானிப்பது; பணிவிடைசெய்வது; பூஜை செய்வது; வணங்குவது; தன் கர்மாக்களை அர்ப்பணம் செய்வது; நம்பிக்கை வைப்பது; ஆத்மாவை நிவேதனம் செய்து கவலை இல்லாமல் இருப்பது. இவ்விதம் மனிதனால் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது விதமான ஸ்வரூபமுள்ள பக்தியானது பகவான் விஷ்ணுவினிடத்தில் செய்யப்படுமானால் அதைத் தான் சிறந்த கல்வியாகக் கருதுகிறேன்’’ என்று பிரகலாதன் மறுமொழி கூறுகிறான்.

இதனை ஸ்ரீமத் பாகவதம் (ஸ்கிந்தம் ஏழு, அத்தியாயம் ஐந்து, இருபத்திரெண்டு முதல் இருபத்து நான்கு வரையுள்ள ஸ்லோகங்கள்) சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.
உயிரின் பொதுக்குணாகிய அன்பு உலகப் (போகப்) பொருட்களின் மீது செலுத்தப்படுமாயின் வினைக்கு ஏதுவாய் அமைந்துவிடும். ஆனால் அதே அன்பு இறைவனிடம் செலுத்தப்பெறுமாயின் வினைகளை கெடுத்து நாம் உய்வதற்குரிய வழியை விளக்கும்.

நவவித பக்தி ‘ஸ்ரவணம்’ கேட்டலில் இருந்து தொடங்குவது போலவே, ஞானமும் ‘ஸ்ரவண’த்திலிருந்து தான் தொடங்குகிறது. ஞானம், ஸ்ரவணம், மனனம், நிதித்யாசனம், சமாதி என்ற படிநிலைகளை உடையது.இவை முறையே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல் என்று சொல்லப்படும். நவவிதபக்தியும், ஞானமும் ஸ்ரவணத் (கேட்டல்)திலிருந்தே தொடங்குகின்றன என்பது நாம் காணும் அதிசயத் தொடர்பாகும். ‘‘பக்தியும் ஞானமும் உன்னைப் போன்றவை தான் சென்னமல்லிகார்ச்சுனனே” என்பார் அக்கமாதேவி.

பூனாவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர் பாபாவைக் காண விரும்பி அவருடைய தரிசனத்தைப் பெற்றார். கண்களில் ஆனந்தமடைந்து பாபாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். ‘‘பாபா, நான் ஏராளமாக படித்திருக்கிறேன். வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் இவ்வளவு படித்தும் எனக்கு மன அமைதி ஏற்படவில்லை. எனது கல்வியறிவு யாவும் பயனற்றவை. மனம் அடங்கினால் அன்றி எந்த நூலறிவும் பயனில்லை பாபா.

ஒன்றும் அறியாத பக்தியுள்ள மக்கள் சிறந்தவர்கள். தங்களின் திருநோக்கினாலும், வேடிக்கையான விளையாட்டான வார்த்தைகளாலும் மக்களுக்கு மனச்சாந்தி கொடுக்கிறீர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். தயவு செய்து என்மேல் இரக்கம் வைத்து, என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்’ என்று வேண்டிக் கொண்டார்.

பாபா அவருக்கு ஓர் உருவகக் கதை சொன்னார். ‘‘ஒருமுறை ஒரு வணிகன் இவ்விடம் வந்தான். அவன் முன்னால் ஒரு குதிரை லத்தி (சாணம்) இட்டது. ஒன்பது உருண்டை லத்தி. வணிகன் மனமார்ந்த அக்கறையுடன் தனது வேட்டியின் முனையை விரித்து அந்த ஒன்பது உருண்டைகளையும் சேகரித்தான். அதன் மூலம் அவன் மன ஒருமைப்பாட்டை (மனஅமைதி)
அடைந்தான்’ என்றார்.

‘‘குருவின் அர்த்தம் இதுதான். ஓர் ஒளிக்கீற்று. அது சாவியை உங்களுக்குத் தந்து விடுகிறது.அப்புறம் அனைத்துப் பூட்டுகளையும் அந்தச் சாவியால் திறக்க முடியும். இன்று இவ்வளவே’ என்பார் ஓஷோ.பாடண்கருக்கு இக்கதையின் உட்பொருள் விளங்கவில்லை. தாதா கேல்கரிடம் பாபா இதன் மூலம் என்ன பொருள் கொள்கிறார் என்று கேட்டார். அதற்கு அவர். ‘‘எனக்கும் பாபா பொருள் கொள்வது, சொல்லுவது அனைத்தும் தெரியாது என்றாலும், அவருடைய தெய்வீக அகத்தூண்டுதலால் நான் தெரிந்து கொண்டதைக் கூறுகிறேன். குதிரையே கடவுளின் அருள். ஒன்பது உருண்டைகள் பக்தியின் ரூபங்களான நவவித பக்தி.

1.ஸ்ரவணம் (கேட்டல்)
2.கீர்த்தனம் (துதி செய்தல்)
3.ஸ்மரணம் (நினைவுறுத்திக் கொள்ளுதல்)
4.பாதசேவனம் (பாதங்களைத் தஞ்சமடைதல்)
5.அர்ச்சனை (பூஜை)
6.நமஸ்காரம் (வணங்குதல்)
7.தாஸ்யா (சேவை)
8ஸக்யம் (நட்பு)
9.ஆத்ம நிவேதனம் (தன்னையே இறைவனுக்கு அர்ப்பணித்தல்)

இவையே பக்தியின் ஒன்பது விதங்கள். இவைகளில் ஏதாகிலும் நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டால் பரமாத்மா மகிழ்வார். எல்லாச் சாதனைகளும் ஜபம், தபம், யோகப் பயிற்சி, வேதபாராயணம் அவைகளின் வியாக்யானம் எதுவும் பக்தியுடன் செய்யப்படாவிட்டால் முற்றிலும் அவை பயனற்றவை. வேதஞானம், சம்பிரதாய பஜனை, அதன்மூலம் வருகின்ற புகழ் எதுவும் பக்தி இல்லாமல் நிலைப்பதில்லை. வணிகனைப் போன்றோ அல்லது உண்மையைத் தேடும் பக்தனைப் போன்றோ உங்களைக் கருதிக் கொள்ளுங்கள். கடவுளைப் பார்ப்பதற்கு ஒரே வழி, பக்தனின் கண்கள் மட்டுமே. ஒன்பது வகை பக்தியை சேகரிக்கும் ஆர்வத்துடன் இருங்கள். அப்போது மனச்சாந்தியையும், நிலையுறுதியையும் பெறுவீர்கள். தாதா கேல்கர் பாபாவின் அருளைக் கொண்டு பாபாவின் வார்த்தைகளாகவே சொல்லி முடித்தார்.

அடுத்த நாள் பாடண்கர் பாபாவை வணங்கச் சென்ற போது பாபா, ‘என்ன ஒன்பது லத்தி உருண்டைகளை சேகரித்துக் கொண்டீர்களா’ (whether he collected the nine balls) என்று கேட்டார். அதற்கு பாடண்கர், நான் ஒரு எளியவனாக இருப்பதால் பாபா அவருக்கு முதலில் அருள் செய்ய வேண்டுமென்றும். பின்னர் அவைகள் எளிதாகக் கிடைக்குமென்றும் சொன்னார். பாபா அவரை ஆசீர்வதித்து மன அமைதியும் நன்மையும் கிடைக்குமென்று கூறினார். இதைக் கேட்டு பாடண்கர் அளவுகடந்த இன்பமும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

இந்த ஒன்பது வகையான பக்தி முறைகள் இறைவனை அடைந்து அவருடன் ஐக்கியமாக உதவும். இதனை ‘‘ஸ்ரீ ஸத்ய ஸாயி சத் சரித்திரம் – தபோவனம்” மிக எளிமையாக விளக்கம் செய்கிறது. சாயிநாதரின் மகிமைகளையும், அவர் தரும் அனுபவங்களையும் கேட்பது முதல் படியாக அமைகிறது. அதுவே, சிரவணம். கேள்விப்பட்ட அந்த நேரம் முதல் அவரின் திருவடிவையும் அவரது நாமங்களையும் தெரிந்து கொண்டு அதனைச் சொல்ல ஆரம்பிக்கிறோம். இது இரண்டாவதுபடி, கீர்த்தனம்.

அதன் மூலமாக ஸாயி நாதரைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது மூன்றாவதுபடி, ஸ்மரணம். அவரைத் தரிசனம் செய்வதற்கு சீரடி செல்கிறோம். வரிசையில் நின்று அவரைத் தரிசித்து அவரது பாதங்களை வணங்கி கண்களில் ஒத்திக் கொள்கிறோம். இதுவே நாலாவதுபடி, பாதஸேவனம். அந்த தரிசனத்தின் மூலமாக நமது அதிர்ஷ்டத்தை நினைத்து நாம் ஆனந்தம் அடைகிறோம். இது ஐந்தாவது படி, வந்தனம். பாபாவின் நாமங்களைச் சொல்லி அவருடைய மலர்ப்பாதங்களில் மலர்கள் சமர்ப்பிக்கிறோம். கூடவே நமது இதயம் என்னும் மலரையும்.

இதுவே, அர்ச்சனம். அந்த ஆனந்தத்தில் பாபா உணர்த்தியபடி மற்ற பக்தர்களுக்கும் உதவி செய்து சேவை செய்கிறோம். இதுவே, தாஸ்யம். பக்தி உணர்வு மேலிட பாபாவின் பக்கத்தில் இருப்பதையே விரும்பி என்னை எப்பொழுதும் காப்பாய் என்று வேண்டுகிறோம். பாபா ‘‘why fear when I am here” என்று சொல்ல, நமக்கு நம்பிக்கையும், தைரியமும் வருகிறது. இதுவே, எட்டாவது படியாகிய ஸக்யம். பாபா எனக்கு நீங்கள் தான் தேவை. என்னை உங்களின் பாதங் களில் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சரணாகதி அடைகிறோம். இதுவே, ஒன்பதாவது படியாகிய ஆத்மநிவேதனம்.

‘‘முதலில் நீ எது கேட்டாலும், அதை நான் தருவேன். பிறகு உனக்கு நான் என்ன கொடுக்க வந்திருக்கிறேனோ, நீ அதையே கேட்கும்படி செய்வேன்’ என்று பகவான் ஸ்ரீ ஸத்ய சாயி கூறுகிறார். பக்தியினால்தான் பரமாத்மாவின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். பக்தியென்பது, நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை மட்டுமே, வேறென்ன? பாபாவும் பக்தியோடு வருகின்ற பக்தனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். சாயி சரணம்.

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post ‘நவவித பக்தி’ appeared first on Dinakaran.

Related Stories: