ஏழாமவன்

பகுதி 3

கடல் சூழ்ந்த இலங்கையின் மதில் முதலிய பாதுகாப்புப் பற்றியும், ராவணன் உள்ளிட்ட அரக்கர்களின் வலிமை பற்றியும், இலங்கையின் படையளவு பற்றியும், விபீஷணனிடம் முற்றாய்க் கேட்டு அறிந்தான் ராமன்.போர் துவங்கியது. கும்பகர்ணன், இந்திரஜித் முதலானவர்கள் மாண்டனர். எழுபத்தி ஐந்து நாட்கள் கடந்துவிட்டன. போரின் இறுதி நாள். சூரியன், இன்றைய நாள் இலங்கைக்கு மட்டுமல்ல மூவுலகத்திற்கும் மிக உன்னதமாக இருக்கப் போகிறது என்று வாழ்த்தியபடி உதித்தது. சூரிய குல திலகம் ராமன் சூரியனின் வாழ்த்தை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான். தந்தை தசரதனையும், பெரிய தந்தை ஜடாயுவையும் மனதில் நிறுத்தி வணங்கினான்.

அதே நேரத்தில் அசோகவனத்தில் இருந்த சீதைக்கு நல்ல சகுனங்கள் தோன்றின. ராமன் போருக்குப் புறப்பட்டான். இந்திரன் அனுப்பிய தேர்ப்பாகன் மாதவியிடம், தேரை ராவணன் எதிரில் செலுத்துமாறு சொன்னான். ராமன் பிரம்மாஸ்திரத்தை எடுத்தான். கண்களை மூடி மனதை ஒருமுகப்படுத்தி மந்திரங்கள் கூறினான். சிவன், பிரம்மன் முதலான தேவர்கள் வானிலே காத்துக் கொண்டிருந்தார்கள்.

தனது குலகுரு வசிஷ்டரை ராமன் பிரார்த்தித்தான். பிரம்மாஸ்திரத்தை ராவணனின் மேல் ஏவினான். அந்த பிரம்மாஸ்திரம் ராவணனின் மார்பைத் துளைத்து, அவன் உயிரை பறித்தது. வானரங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. ராவணன் பெற்ற வரம், செய்த தவம் எல்லாவற்றிற்கும் அஸ்திரம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.முப்பத்து முக்கோடி தேவர்களும் வானிலிருந்து வாழ்த்தினார்கள். இந்த திருநாளுக்காகத்தானே நாங்கள் காத்திருந்தோம் என்று நிம்மதியும் மகிழ்வும் ஒருங்கே அடைந்தார்கள். ஆரவாரச் சத்தம் அடங்குவதற்கு முன்பே விபீஷணன், மண்ணிலே விழுந்து கிடந்த ராவணனின் உடல் அருகே வந்தான். கதறி அழுதான்.

ராமன் தன் தேரோட்டிக்கு நன்றி தெரிவித்து விட்டு தேரிலிருந்து இறங்கினான். விபீஷணன் அருகில் சென்று கைகளைப் பற்றிக் கொண்டான். “ரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது என்பது புரிகிறது. உடன் பிறந்தவனின் மரணம் எந்த அளவிற்கு துயரமானது என்றும் புரிகிறது.” என ஆறுதல் கூறினான். இறந்து கிடந்த ராவணனின் அருகில் சென்று அவன் முதுகில் உள்ள காயங்களைக் கண்டு துணுக்குற்றான்.

“விபீஷணா! போரில் புறமுதுகு காட்டிய ஒருவனையா நான் வென்றிருக்கிறேன்? நான் தவறிழைத்துவிட்டேனா?” “இல்லையில்லை ராமா! தன்னை எதிர்த்து எவருமே போரிடத் துணியாத தால், யானைகளின் தந்தத்தில் தன் மார்பினைப் பொருதி காயங்களை ஏற்படுத்திக் கொள்வது இவன் வழக்கம். நீங்கள் ஒரு ஒப்பற்ற வீரனைத்தான் வென்றிருக்கிறீர்கள்”.

ராமனுக்கு மனது சமாதானமானது.இராவணன் மரணித்த செய்தியறிந்த மண்டோதரி தலைவிரி கோலமாக போர்க்களம் வந்தடைந்தாள். ராவணனின் உடலைத் தனது மடியில் கிடத்திக் கொண்டாள். அரற்றினாள். புலம்பினாள். “நல்லவர்கள் அறிவுரை உன் காதில் ஏறவே இல்லை. ஒரு மணமான பெண்ணின் மீதான காமம் உன்னை இந்த மண்ணில் இப்படி விழ வைத்து விட்டது. வீணைக் கொடியுடைய வேந்தன் வீணே மண்ணில் சரிந்து விட்டான். வேதங்கள் கற்றவன், சிவனை வணங்கி சீர்மைகள் பெற்றவன், தேவர்களை ஏவல் செய்ய வைத்தவன், களம் பல கண்டவன் இறுதியில் புழுதியில் வீழ்ந்துவிட்டான். அறத்தை வீழ்த்தியவனை ஒரு அஸ்திரம் வீழ்த்திவிட்டது.

கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகியை, உன் மனச்சிறையில் வைத்திருந்தாயே! அவள் மீது கொண்ட காதல் இன்னும் உள்ளே இருக்குமோ எனக் கருதி உடல் புகுந்து அந்த அஸ்திரம் உன்னை தடவியதோ! குற்றங்கள் செய்தாலும் என் கொற்றவன் நீ! உயிரான நீயே போனபின் நான் உயிர் வாழ்வதில் அர்த்தம் இல்லை. இறையே! என் உயிரையும் எடுத்துக்கொள்.” உத்தமியின் வாக்கு உடனே பலித்தது.

மண்டோதரியும் மாண்டு போனாள்.இருவரின் உடல்களின் அருகிலும் சென்று விபீஷணன் துயரத்தில் கண்கலங்கி செய்வதறியாது நின்றான்.“விபீஷணா! இந்த இலங்கை அரசில் எஞ்சியுள்ள ஒருவன் நீதான். இறந்து கிடப்பது உன் அண்ணன் மட்டும் அல்ல, இந்த நாட்டின் பேரரசன். உனது கடமை ராவணனுக்கும் மண்டோதரிக்கும் ஈமக் கிரியைகள் செய்வது. அது, உன்னை, உன் குடும்பத்தை, உன் சந்ததியை, உன் நாட்டை வளப்படுத்தும், நெறிப்படுத்தும்.”ராமனின் உத்தரவுக்கிணங்க அந்திமக்கிரியைகள் அனைத்தையும் கிரமமாக விபீஷணன் செய்து முடித்தான்.

மறுநாள் காலைப் பொழுதில் ராமன், கடற்கரையில் இலக்குவன், அனுமன், அங்கதன் மற்றும் வானரப் படைகள் சகிதமாக விபீஷணனை சந்தித்தான். விபீஷணன் ராமனின் பாதங்களைப் பற்றி நமஸ்கரித்தான். அவனை ராமன் ஆரத்தழுவினான்.“நடந்து முடிந்த போரின் வெற்றிக்கு முழுமுதற் காரணம் விபீஷணன் மட்டும்தான். கும்பகர்ணனை வெல்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இந்திரஜித்தின் போர் மற்றும் மாயாஜால தந்திரங்களை நமக்கு எடுத்துரைத்து, நம்மை வெற்றியடைய செய்தவன் விபீஷணன். மாய சீதாவை உருவாக்கி நம்மைக் கலங்கச் செய்தபோது அதிலிருந்து காத்தவன் விபீஷணன்தான். ராவணன் மரணிக்கும் வரையில் அவனுடைய பங்கு அளப்பரியது.

கும்பகர்ணன் அறத்தை விரும்பினான். ஆனால் அறத்தின் பக்கம் நிற்காமல் அண்ணனின் பக்கம் செஞ்சோற்றுக் கடனுக்காக நின்றான். விபீஷணன் அறத்தை உயரியதாக நினைத்தான் நம் பக்கம் நின்றான். அறத்தின் பொருட்டு அவன் துன்பங்களைத் தாங்கிக்கொண்டான். இலக்குவன் மூர்ச்சையாகி விழுந்து கிடந்தபோது, நான் உணர்ச்சி மேலிட விபீஷணனை ‘உன்னை நம்பியதால்தான் இந்தத் தீமை நிகழ்ந்திருக்கிறது’ என்று கடிந்து கொண்டேன். அப்பொழுதும் அவன் அமைதியாக இருந்தது என்னை நெகிழ வைத்தது.”விபீஷணன் இடைமறித்தான்.” ராமா! ஒரு தலைவன் என்ன செய்தாலும், சொன்னாலும் அவனை விட்டு நீங்காமல் இருப்பதுதானே ஒரு உண்மையான சரண் அடைந்தவனுக்கு அழகு. இன்னும் சொல்லப்போனால், என்னை ஏழாவது தம்பியாக நீங்கள் ஏற்றுக் கொண்டதன் அடையாளமே நீங்கள் என்னை உரிமையுடன் கடிந்து கொண்டதுதான்.

எனக்கு அது மகிழ்ச்சியே. என் தலைவன் நீ! உன்னைச் சரணடைந்தபின், நானும் நீயும் வேறல்லவே. உங்களின் அறம் காக்கும் செயலில் நானும் ஒரு அங்கம் வகித்தேன். இது என் பூர்வ ஜென்ம புண்ணியம்.”“மகிழ்ச்சி. நீ இலங்கையின் அரசனாக முடி சூட்டிக் கொள்ள வேண்டும். இலக்குவன் இப்பொழுது அதை நிகழ்த்துவான்.”“எனக்கு அரசாள்வதில் விருப்பமில்லை. உங்களுக்குச் சேவை செய்வதே எனது விருப்பம்.”ராமன் மீண்டும் மீண்டும் விபீஷணனை வற்புறுத்தினான்.

“ராமா, உங்களின் ஆணையின்படி நான் நடக்கிறேன். நீங்கள்தான் சகோதரர்களாகிய எங்கள் ஆறுபேருக்கும் முதன்மையானவர். ராம ராஜ்ஜியம்தான் எங்கும் நிகழ வேண்டும். நீங்கள் ஒரு சகோதரன் பரதனுக்காக உங்களின் பிரதிநிதியாக உங்களின் பாதுகையை அளித்து அயோத்தியை ஆளச் செய்தீர்கள். இன்னொரு சகோதரன் நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பாதுகையைத் தாருங்கள். உங்கள் பாதுகை எனக்குத் துணை நிற்கும். இலங்கை அரசை ஆளும்.”ராமன் பாதுகையை அளித்தான். விபீஷணன் அதைத் தலைமேல் சுமந்தான். நன்றியில் அவன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

“விபீஷண பட்டாபிஷேகம் எளிய முறையில் நடைபெறட்டும். திருமண நிகழ்வு என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்தால் போதும். திருமண வாழ்க்கைதான் உலகிற்குத் தெரிய வேண்டும். உன் பட்டாபிஷேகம் அது போல நமக்கு மட்டும் தெரிந்தால் போதும். நீ ஆள்வது இந்த உலகத்திற்கே தெரிய வேண்டும். நல்லறமும், மெய்மையும், நல் அருளும், எல்லையில்லா ஞானமும், எல்லா வளங்களும் பெற்று, நாளும் வளர்க நீ! சிரஞ்சீவியாக வாழ்ந்து அறம் காக்க ஆசிகள்.”ராமனின் ஆசிகளின் படி எங்கோ விபீஷணன் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான்.

தொகுப்பு: கோதண்டராமன்

The post ஏழாமவன் appeared first on Dinakaran.

Related Stories: