புதிய தம்பதியை அருளும் மலையாமரங்க சுவாமி

பெருங்களூர் – தஞ்சாவூர் – புதுக்கோட்டைப் பாதையில் தஞ்சாவூரிலிருந்து 28வது மைலில் உள்ளது, ‘மலையாமரங்க சுவாமி கோயில்’ அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சிலருக்கு மட்டுமே குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. இத்திருக்கோயிலின் வரலாறு விசித்திரமானது.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நாட்டில் ஓரிடத்தில் ஐயனார் கோயில் இருந்தது. அக்கோயிலின் அர்ச்சகர் ஓர் நம்பூதிரி. வழக்கம் போல் அவர் சுவாமிக்குச் செய்ய வேண்டிய பூஜை… புனஸ்காரங்களைச் செய்து முடித்து விட்டு வீடு திரும்பினார். வீடு திரும்பிய கொஞ்ச நேரம் கழித்துத்தான் அவர் செய்த பெருந்தவறு ஞாபகத்திற்கு வந்தது. அன்று கோயிலுக்குப்போகும் போது தன்னுடன் அழைத்துச் சென்ற மூன்று வயது பாலகனை ஞாபகமறதியால் கருவறையிலேயே விட்டுவிட்டு கோயிலைப் பூட்டி விட்டுத் திரும்பியிருக்கிறார்.

உடலும் உள்ளமும் பதை பதைக்க அலறியடித்த படியே குழந்தையைக் காண உடனே கோயிலுக்கு விரைந்தார் நம்பூதிரி. அங்கு சென்று கருவறையின் பூட்டைத் திறந்து, வெளியிலிருந்து கதவைத் தள்ளினார் நம்பூதிரி. ஆனால் கதவைத் திறக்க முடியவில்லை. உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. அவருக்கு ஆச்சர்யமும் திகிலும் மேலிட்டது. அழுது கண்ணீர் சிந்திய வண்ணம் சுவாமியைப் பிரார்த்தித்தார். அதிசயமாக கருவறையின் உட்புறத்திலிருந்து பகவானின் குரல் அசரீரியாக கேட்டது.

‘‘பக்தா! கவலைப்படாதே! உன் குழந்தையை இரவு முழுவதும் நானே பத்திரமாக வைத்திருக்கிறேன். காலையில் அவனை ஒப்படைக்கிறேன்’’ என்றார் ஐயனார். நம்பூதிரி கேட்கவில்லை. மிகுந்த அச்சத்தோடு குழந்தையைத் தரும்படி மிகவும் கட்டாயப்படுத்தினான். ஐயனார் பேச்சைக் கேட்கவில்லை. திரும்பத் திரும்பக் குழந்தையைக் கேட்டபடி கதறினான். இதனால் கடுங்கோபங் கொண்ட ஐயனார். குழந்தையை தூக்கி எறிந்தார். திடுக்கிட்ட நம்பூதிரி ஐயனாரின் இக்கொடுஞ்செயலைப் பொறுக்க முடியாமல், கோபம் மேலிட்டவராய், ‘‘என் பச்சிளங் குழந்தையை இப்படிக் கொன்றுவிட்டீர்களே! நீங்கள் இனி மேலும், இருந்தால் உங்கள் சக்தி எல்லாம் அழிந்து போகக் கடவது! என்று சாபமிட்டார்.

நம்பூதிரியின் சாபத்தைப் பெற்ற ஐயனார், கலக்க மடைந்து, தான் வேறிடத்தில் இருக்க அங்கிருந்த யானையின் மேல் ஏறி நல்ல இடமாகத் தேட ஆரம்பித்தார். அண்டை நாடான தமிழ்நாட்டை அடைந்து சுற்றிக் கொண்டிருக்கையில் ஓர் இடத்தில் மணிமுக்தா நதிக்கரையை அடுத்த காடு ஏற்ற இடமாக அமையவே அங்கேயே தங்கிவிட்டார். அங்கு அவருக்குக் கோயிலும் எழும்பியது. அங்கு அவர் மலையாமரங்க சுவாமி என்ற நாமம் பெற்றார்.நம்பூதிரியின் சாபம் தீரத்தவமிருந்தார் ஐயனார்.

இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் பூமியைப் பெயர்த்து ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தான். நம்பூதிரி சாபம் பெற்ற தினத்திலிருந்து இன்று வரை ஐயனாருக்கு படிமாத்தானத்தால் பூஜை நடைபெற்று வருகிறது. ஐயனார் தங்கிய இடமே பெருங்களூர் என்ற திருத்தலமாகவும், இந்திரன், ஏற்படுத்திக் கொடுத்த தீர்த்தம் வஜ்ஜிர தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது.

சுவாமிக்கு நைவேத்தியமாக பச்சரிசியும் வெல்லமும் படைக்கிறார்கள். வைணவ பக்தர் ஒருவர் எப்போதும் நாமம் தரிப்பவர். தப்பித்தவறியும் விபூதியைக் கையாலும் தொடமாட்டார். அவர் ஒரு சமயம் நோய்வாய்ப் பட்டிருந்தபோது, மலையாமரங்க சுவாமியை வேண்டிக் கொண்ட அவரது உறவினர்கள், அவரை சுவாமிக்கு அடிமையாக மாற்றுவதாகவும், அவரது பிணி தீர்க்குமாறும் சுவாமியிடம் வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டார்கள். அவர்கள் பிரார்த்தனை பலித்தது. அன்றிலிருந்து அந்த பக்தர் சுவாமிக்கு அடிமையானார். அத்தோடு விபூதியையும் நெற்றியில் இட்டுக் கொள்ள ஆரம்பித்தார்.

திருமணமானவுடன் புதுமணத் தம்பதிகள் முதன்முதலாக இக்கோயிலுக்குப் போகிறார்கள். பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் முதன் முதலில் இங்குதான் முடியிறக்குவது வழக்கம். இவ்விரு பிரார்த்தனைகளும் மிகவும் முக்கியமாகும். அந்த ஸ்தலத்தை அடைந்தவுடன், அங்குள்ள வம்சோதாரர், என்ற பெயர் கொண்ட சிவபெருமானை வழிபட்ட பின்னர், கோயிலை அடுத்துள்ள மணிமுத்தாநதி என்று அழைக்கப்படும் குளத்தில் நீராட வேண்டும்.

இதன் பின் குளத்தங்கரை பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி செய்த பிறகு, ஈர உடைகளோடு மலையாமரங்க சுவாமி கோயிலுக்குப் போய் படிமாத்தானிடம் குடத்தைப் பெற வேண்டும். படிமாத்தான அந்தக் குடத்தில் விபூதியைப் போட்டுக் கொடுப்பார். அக்குடம் புனிதகுடமாகக் கருதப்படுகிறது.

இக்குடத்தை எடுத்துக் கொண்டு, இந்திரன் தன் ஆயுதத்தால் உருவாக்கிய வஜ்ஜிர தீர்த்தத்திற்குப் போக வேண்டும். அங்கு குளக்கரையில் நின்று கற்பூரதீப ஆரத்தி காட்டிவிட்டு குளத்தை வணங்கிய பின்னர், குளத்திலிருந்து, கையில் எடுத்துச்சென்ற குடத்தால் நீரை மொண்டு, கரை ஏறி வந்து, கரையில் கட்டப்பட்டிருக்கும் தொட்டியில் உட்கார்ந்து, பிறர் நீரைக் கொட்ட ஸ்நானம் செய்ய வேண்டும். திருக்குளம் புனிதமானதாகக் கருதப்படுகிறது. எனவே இக்குளத்தின் நீரில் கால்கள் படக்கூடாது. குளத்தில் இறங்கி நீராடவோ, மூழ்கிஸ்நானமும் செய்யக் கூடாது.

இவைகளை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். படி மாத்தான் விபூதி போட்டுக் கொடுத்த குடத்தால் மூன்று முறையோ. ஐந்து முறையோ, அல்லது ஏழு முறையோ தான் குளத்துநீரை மொண்டு வந்து ஊற்றி நீராட வேண்டும். குளத்து நீரைத் தானாகவே மொண்டு தலையில் ஊற்றிக் கொள்ளக்கூடாது. மலையாள தேசத்தை விட்டு இங்கு வந்து குடியேறிய ஐயனார், இத்திருக்கோயிலில் யானை வாகனத்தில் காட்சியளிக்கிறார். திருக்கோயிலின் இருபுறமும் இரண்டு பெரிய யானைகள் பூரண அலங்காரத்துடன் கதை வடிவில் காட்சியளிக்கின்றன. ஐயனாருக்கு இருபுறமும் பூர்ண கலை, புஷ்கலை ஆகிய இருவரும் எழிலுடன் காட்சி தருகிறார்கள்.

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இவர்களுக்கு முதலில் பூஜை, அர்ச்சனை ஆராதனை செய்து வழிபட்ட பின்னர் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவம்சோதாரருக்கும் அர்ச்சனை ஆராதனை செய்ய வேண்டும். இன்றும் பெருங்களூரில் தம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கருணைக் கடலாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். மலையாமரங்க சுவாமி! மலையாளத்திலிருந்து வந்ததால் இப்பெயர்.

தஞ்சாவூர் – புதுக்கோட்டை நெடுஞ் சாலையில் தஞ்சாவூரிலிருந்து சுமார் 28கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது பெருங்களூர். அடிக்கடி செல்லும் பேருந்து வழித்தடம், மரங்கள் சூழ்ந்த அழகிய சூழலில் திருக்கோயில் அமைந்துள்ளது.

தொகுப்பு: முத்து.ரத்தினம்

The post புதிய தம்பதியை அருளும் மலையாமரங்க சுவாமி appeared first on Dinakaran.

Related Stories: