?வெற்றிலை பாக்கு ஆகியவற்றை பூஜை போன்ற சுபநிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதன் காரணம் என்ன?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
“பூகீபல ஸமாயுக்தம் நாகவல்யைர் தளைர்யுதம்,
கர்ப்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்’’
என்று மந்திரம் சொல்லி பூஜையின்போது வெற்றிலை பாக்கு தாம்பூலத்தை சமர்ப்பிப்பார்கள். பூகீபலம் என்றால் பாக்கு, நாகவல்லி தளை என்றால் வெற்றிலை. வெற்றிலை பாக்குடன் பச்சைக்கற்பூர சூர்ணத்தையும் சேர்த்து இறைவனுக்கு தாம்பூலமாக சமர்ப்பணம் செய்கிறேன் என்பது இதற்குப் பொருள். வெற்றிலையில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறார். இன்னும் சிலர், வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்வதாக சொல்வார்கள். பூஜையின் நடுவில் ஏதேனும் சிறு குறை ஏற்பட்டிருந்தாலும், அவற்றை நீக்கி பூஜையின் பூரணமான பலனைப் பெற்றுத் தருவது இந்த வெற்றிலையும் பாக்குமே ஆகும். நாம் செய்யும் பூஜையின் பலனை முழுமையாக்குவதன் மூலம் வெற்றியைப் பெற்றுத் தருவதால்தான் இதற்கு வெற்றி இலை என்று அதாவது வெற்றிலை என்று அழைக்கப்படுகிறது என்று சொல்வோரும் உண்டு.
?ஜாதகம் எழுதாவிட்டால் அவர்களின் பலனை எப்படி தெரிந்துகொள்வது?
– வண்ணை கணேசன், சென்னை.
ஜாதகம் எழுதி வைக்காவிட்டாலும் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் ஆகிய விவரங்களைக் கொண்டு எப்பொழுது வேண்டுமானாலும் ஜாதகத்தை கணித்து பலனை அறிந்துகொள்ள இயலும். அந்த விவரங்கள் ஏதும் இல்லையெனில், பெயர், ராசியைக் கொண்டு பலன் தெரிந்துகொள்ளலாம். இந்த பெயர் ராசியைக் கொண்டு பலன் அறிதல் என்பது கோச்சார ரீதியான பலன்களாக மட்டுமே இருக்கும். இன்னும் சற்று நுட்பமாக தெரிந்துகொள்ள வேண்டும் எனில், ஜாதகம் இல்லாவிட்டாலும்கூட கே.பி.சிஸ்டம் என்று அழைக்கப்படும் முறையில் பிரசன்ன ஜோதிடக் கணக்கீட்டின்படி ஏதேனும் ஒரு கேள்விக்கு மட்டும் ஒரு நேரத்தில் பலனைத் தெரிந்து கொள்ள இயலும்.
?சினிமா, அரசியல், பத்திரிகை மூன்றிலும் வெற்றி பெற எந்த தெய்வத்தை வணங்கலாம்?
– பொன்விழி, அன்னூர்.
இந்த மூன்று துறைகளிலும் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர் மட்டுமே. இதுபோன்று வெற்றி பெற்றவர்களுடைய ஜாதகங்களில் சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரஹங்களின் வலிமை ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டிருக்கும். சினிமாவில் வெற்றி பெறுவதற்கு சுக்கிரன் என்கின்ற கிரஹமும், அரசியலில் வெற்றி பெற சூரியன் என்கிற கிரஹமும், பத்திரிகை துறையில் வெற்றி பெற புதன் என்கிற கிரஹமும் துணைபுரிய வேண்டும். இந்த மூன்று துறைகளிலும் ஒரு மனிதர் வெற்றி பெற வேண்டும் என்றால், கடுமையாக உழைத்து முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி, பகவத்கீதையை பொருளுணர்ந்து படித்து, அதன்படி நடந்தால் இறைவனின் திருவருளோடு இந்த மூன்று துறைகளிலும் உங்களால் வெற்றி பெற இயலும்.
?இயற்கை அழிவுகளுக்கு காரணம் கோள்களின் இயக்கமா?
– சு.பாலசுப்ரமணியன், ராேமஸ்வரம்.
நிச்சயமாக. அதிலென்ன சந்தேகம்? சமீபத்தில் நடந்த நிலநடுக்கம், காட்டுத்தீயால் ஏற்பட்ட பேரழிவு போன்ற நிகழ்வுகள் எல்லாமே கிரஹங்களின் சஞ்சாரத்தால் உண்டாகும் நிகழ்வுகள்தான். புதுவருடம் பிறக்கும்போது பஞ்சாங்க படனம் என்ற பெயரில் ஆலயங்களில் பஞ்சாங்கம் படிப்பார்கள். அப்போது அந்த வருடத்தின் கிரஹ நிலையைக் கொண்டு அந்த வருடத்தில் நிகழ உள்ள இயற்கை சீற்றங்கள் குறித்தும், மழையின் அளவு குறித்தும் சூசகமாகச் சொல்வார்கள். இதுபோக பஞ்சாங்கத்திலேயே இந்த பகுதிகளில் காட்டுத்தீ, நிலநடுக்கம், புயல் மழை உண்டாகும் போன்ற விவரங்களைக் கொடுத்திருப்பார்கள். இந்த விவரங்கள் அனைத்தும் கிரஹங்களின் சஞ்சார நிலையினை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகின்றன.
?உடலில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டமா?
– கே.எம்.ஸ்வீட்முருகன், கிருஷ்ணகிரி.
“மச்சக்குறி சாஸ்திரம்’’ என்ற நூல் இது குறித்த விவரத்தினைத் தெரிவிக்கிறது. இதன் மூலம் அதிர்ஷ்டம் என்று நீங்கள் கருதும் நேர்மறைப் பலன்கள் மட்டுமல்ல, ஒரு சில மச்சங்கள் எதிர்மறையான பலனைத் தருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே போல, ஆண்களுக்கு ஒரு விதமாகவும் பெண்களுக்கு ஒரு விதமாகவும் மச்சக்குறி சாஸ்திரம் பலன் சொல்கிறது. ஆனால், அறிவியல் ஜோதிடம் என்பது இதனை ஏற்கவில்லை.
?ஒவ்வொரு ஊர்களிலும் வழிபடும் முறைகளில் வேறுபாடு உள்ளதே?
– டி.நரசிம்மராஜ், மதுரை.
வழிபாட்டு முறைகளில் மட்டுமல்ல, மனிதர்கள் கடைபிடிக்கும் அனைத்துவிதமான பழக்கங்களிலும் மாறுபாடு என்பது உள்ளது. உதாரணத்திற்கு, உணவு என்பதையே எடுத்துக் கொள்வோம். பசித்தால் உணவு சாப்பிட வேண்டும் என்பது எல்லா மனிதர்களுக்குமான பொதுவான விதி. ஆனால் அந்த உணவினை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக தயாரிக்கிறார்கள். எப்படித் தயாரித்து இருந்தாலும் அந்த உணவின் நோக்கம் என்பது பசியைப் போக்குவதுதான். அதுவும் அந்தப் பணியைச் செவ்வனே செய்து முடித்துவிடுகிறது. அதுபோலத்தான் பக்தி என்பதும். இங்கே இறைவனை வணங்கி அருளைப் பெறவேண்டும் என்பதுதான் நோக்கம். அங்கே வழிபடுகின்ற முறைகள் வெவ்வேறானதாக இருக்கலாம். நோக்கம் என்ன, இறைவனை வணங்க வேண்டும் என்பதுதானே. சிரத்தையுடன் கூடிய பக்தி என்பது இருந்தாலே போதுமானது. முறை எதுவாக இருந்தாலும் நோக்கம் என்பது கண்டிப்பாக நிறைவேறி விடும். வழிபடும் முறைகளில் இருக்கின்ற வேறுபாடு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
?தாயத்துகள் அணிவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
மனதில் நம்பிக்கை பிறக்கும். நம்பிக்கை இருந்தால் வாழ்வின் லட்சியத்தை அடைந்துவிடலாம் அல்லவா.?
The post வெற்றிலை பாக்கு ஆகியவற்றை பூஜை போன்ற சுபநிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதன் காரணம் appeared first on Dinakaran.