பள்ளிக்கூடம் படிக்கும் போது, அந்தக் காலத்தில், நம்மில் பெரும்பாலோர் அப்படி அடி வாங்கியவர்கள் தானே. ஆசிரியர், வரிசையாக அடிக்கும்போது சிலரால் தாங்க முடியாது அழுவார்கள். சில பேர் உஸ் உஸ் என்று ஊதித் துடைத்துவிட்டு எளிதாகக் கடந்து விடுவார்கள். அடி என்னவோ எல்லோருக்கும் பொதுவான ஒரே வேகத்தில் விழுந்த அடிதான்.
சிலருக்குத் தாங்க முடிகிறது, எளிதில் கடந்துவிட முடிகிறது. சிலருக்குத் தாங்க முடியவில்லை, அதற்கு காரணம் பலம் பலவீனம். பலவீனத்தால் தாங்க முடியவில்லை.
பலத்தால் தாங்க முடிகிறது. இந்த பலத்தைக் கொடுப்பதுதான் ஆன்மிகம். அடி விழுந்தாலும் உஸ் என்று துடைத்துவிட்டு அடுத்த காரியம் பார்க்கத் தொடங்குவதை போல, இன்ப நிகழ்வானாலும் துன்ப நிகழ்வானாலும், அதிகம் பாதிப்படையாமல் கடந்து விடுபவர்கள் உண்டு. இதை “ஸம துக்க ஸுக” என்கிறது கீதை. இதற்கு வைராக்கியமும் பக்குவமும் வேண்டும். இந்த பக்குவமும் வைராக்கியமும் வராவிட்டால், வெறும் வழிபாட்டினாலும் பக்தி எனும் அனுஷ்டானத்தினாலும் பெரிய பலன் எதுவும் கிடைத்துவிடாது. அது தேர்வாமல் ஒரே வகுப்பில் தொடர்ந்து வருடா வருடம் பரீட்சை எழுதுவது போல. நிஜத்தில் அப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா என்று நீங்கள் நினைக்கலாம். எனக்கு மிகவும் வேண்டிய ஒரு மகப்பேறு மருத்துவர், 40 ஆண்டு காலம் மிகச் சிறந்த சேவை செய்தவர்.
அவருடைய கணவரும் ஒரு பேராசிரியர். இருவருக்கும் பக்தி என்றால் அப்பேர்ப்பட்ட பக்தி. ஒரு கட்டம் வரை உழைத்துவிட்டு, இனி நமக்கு பெருமாள்தான் என்று தாங்கள் இருந்த இடத்தை விற்றுவிட்டு, திருவரங்கத்திற்கு வந்துவிட்டார்கள். அவர்களுக்கு ஒரே பையன். அவரும் புகழ்பெற்ற மருத்துவர். வெளிநாட்டில் இருந்தார். ஆனால் கொரோனா சமயத்தில் திடீரென்று அவர் காலமாகிவிட்டார். இது எப்பேர்பட்ட கொடுமை? நான் மனக்கஷ்டத்துடன் விசாரித்தேன். ஆனால் அந்த மருத்துவர்,
“என்னமோ பகவானுக்கு அவன் தேவைப்பட்டு இருக்கிறான். அழைத்துக் கொண்டு போய்விட்டான். அவன் கேட்டால் நம்மால் கொடுக்காமல் இருக்க முடியுமா?’’ என்று எளிதாகக் கடந்து விட்டார்கள். அதற்குப் பிறகும் அரங்கனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு செய்து அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பக்குவமும் வைராக்கியமும், நிஜமான ஆன்மிக உணர்வு அவர்களுக்குத் தந்த பக்குவம். இதைப்போல இன்னும் சில நண்பர்களையும் நான் பார்த்திருக்கின்றேன். காலம் ஒவ்வொன்றையும் விழுங்கி கடந்து விடுவதை போல, இவர்கள் நன்மை தீமைகளை விழுங்கிக் கடந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். நல்லதும் கெட்டதும் என நிகழ்வுகள் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் அபிப்பிராயமும் விமர்சனமும் இல்லாமல், நிகழ்வுகளை நிகழ்வுகளாகவேப் பார்த்து கடந்து விடுவது என்பது ஆன்மிகத்தின் ஒரு படிநிலை.
இந்த நிலையை அடைந்தவர்கள் என்றைக்கும் துன்பப் படுவதில்லை. துன்பப் பட்டு தங்கள் உடல்நிலையை கெடுத்துக் கொள்வதில்லை. அதுமட்டுமல்ல, சிலருடைய துன்பமானது மற்றவர்களுக்கும் நிம்மதி இல்லாமல் செய்துவிடும்.
“ஆனது ஆகிவிட்டது அடுத்தது என்ன?’’ என்று போய்க் கொண்டே இருப்பவர்களைப் பாருங்கள். அது ஒரு வரம். ஆன்மிகம் தந்த வரம். இன்னொரு நண்பர். அந்தக் காலத்தில் (1975-80 வாக்கில்) பெரிய பணக்காரர். பண்ணையார். அவருக்கு இன்றைக்கும் பெரிய பள்ளிக்கூடம் இருக்கிறது. ஒருமுறை அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, 40 வருடங்களுக்கு முந்தைய கதையைச் சொல்லிக் கொண்டு வந்தார். அப்போது தனியார்கள் ஆங்காங்கே தொழில்நுட்ப கல்லூரிகளையும் பொறியியல் கல்லூரிகளையும், மிக எளிதாக அனுமதி பெற்று ஆரம்பித்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கத்திலிருந்து இவருக்கு சிறப்பு அழைப்பு வந்து முதலமைச்சரே சொல்லியிருக்கிறார்.
“நீங்கள் ஒரு கல்லூரி ஆரம்பிக்கலாமே’’ அவர் அந்த வாய்ப்பை ஏனோ ஏற்காமல் வேறொருவருக்குக் கொடுத்து விட்டார். நான் சொன்னேன்.
“என்ன சார், அப்படிச் செய்து விட்டீர்கள்? வந்த வாய்ப்பை கோட்டை விட்டு விட்டீர்களே.. நீங்கள் மட்டும் அன்று ஆரம்பித்திருந்தால், இன்றைக்கு உங்களுக்கு ஒரு பொறியியல் கல்லூரி, ஒரு தொழில்நுட்பக் கல்லூரி, தொடர்ந்து இன்னும் பல கல்லூரிகளும் இருந்திருக்குமே. மிகப் பெரிய அளவில் முன்னேறி இருக்கலாமே’’ சட்டென்று அவர் முகம் மாறியது.
“சார் அதை விடுங்கள் அது எப்பொழுதோ நடந்து முடிந்துவிட்டது. இப்பொழுது அதைப் பற்றிப் பேசி என்ன பயன்? மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம்’’ என்று அதோடு அந்த பேச்சை விட்டுவிட்டு வேறு பேச்சைப் பேச ஆரம்பித்துவிட்டார். கடந்தகால தவறுகள் திரும்பத் திரும்ப எண்ணி எண்ணிப் பார்ப்பதன் மூலம் நிகழ்காலத்தின் சந்தோஷங்களை நாம் ஏன் பலி கொடுக்க வேண்டும்? அந்தத் தவறுகள் திருத்திக் கொண்டு வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம். அல்லது அந்தத் தவறுகள் தந்த படிப்பினை நமக்கு வேறு ஒரு விஷயத்தில் உதவும் என்றால் பயன்படுத்தலாம். இது இரண்டையும் விட்டுவிட்டு, ஒரு கதை போல திரும்பத் திரும்ப, அந்த பழைய விஷயங்களையே பேசிப் பேசி ஆகப் போவது என்ன? அதற்காக இப்பொழுது நாம் செய்து கொண்டிருக்கும் மகிழ்ச்சியான உரையாடலையும், அதனால் ஏற்படும் ஆரோக்கியமான மனநிலையையும் இழக்க வேண்டுமா என்ன?
நம் ஒவ்வொருவருக்கும் நம் அளவில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவைக் கொண்டு விஷயங்களை முடிவெடுத்துச் செயல்படுவது என்பது சரியான வழி. அது தவறில்லை.
ஆனால் முடிவு இறைவன் திருவுள்ளப்படி அமையும் என்று நினைப்பது, நாம் செய்யும் செயல்களின் விளைவுகளால் பாதிப்படையாமல் அடுத்தடுத்து உற்சாகமாக இயங்கும் மனநிலையைத் தரும். அந்த மனநிலைக்கு ஆன்மிக
புரிதலும் உணர்வும் அவசியம். கர்மயோகம் இதுதானே… “நீ செய். நான் தருகிறேன்.’’
The post துன்பத்தை எப்படிக் கடப்பது? appeared first on Dinakaran.