வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.
‘தீக்குறளை சென்று ஓதோம்’ -வெளிப்படையாக பேசும்போது தீய சொற்கள் பேசுவது, கடுஞ்சொற்கள் பேசுவது, புறம் பேசுவது, தேவையற்ற விஷயங்கள் பேசுவது, மற்றவர்களை புண்படுத்துவது போல் பேசுவது, நம்மை நாமே புண்படுத்திக் கொள்ளுதல் என்று எல்லாமுமே வந்து விடும்.
இந்த தீக்குறள் என்ற வார்த்தையில் குறள் என்பதற்கு அளவில் சிறியது என்பது பொருளாகும். ஆனால் அதனுடைய விளைவு பெரியதாக இருக்கும்.
வியாக்கியானம் செய்பவர்கள் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். தோழிகள் எல்லாரும் எழுந்து வருகிறார்கள். நாராயணனே நமக்கு பறை தருவான் என்று வந்து பார்க்கிறார்கள். அப்போது ஒரு தோழி சொல்கிறாள், ‘‘மற்றவர்கள் எல்லாரையும் மரியாதையோடு கூப்பிட்டாள். ஆனால், என்னை மட்டும் மரியாதை இல்லாமல் கூப்பிட்டிருக்கிறாள்’’
இதுபோன்று இந்த தோழிகளுக்குள்ளேயே இதுபோன்ற பேச்சு வரும். அப்படிப்பட்ட அந்த கோள் சொல்லுதல் கூட வேண்டாம். அதனால் தீக்குறளை சென்றோதோம்.
பொதுவாக நமக்குள் பேசுவதிலிருந்து தொடங்கி பகவான் வரையிலும் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்கிற வரையிலும் இந்த ஒரு வார்த்தையில் வந்து விடுகின்றது. இந்த வார்த்தை நமக்கு காண்பித்து கொடுப்பது என்ன? வாக்கு தர்மம். வாக்கினால் தர்மத்திற்கு உட்பட்ட விஷயங்களை பேசுவது.
ஆண்டாள் நறுக்கு தெறித்தாற் போன்று ஒரு வார்த்தையில் மொத்தமாக முடித்து விடுகிறாள்.
செய்யாதன செய்யோம்… என்று முடித்து விட்டாள். நீங்கள் இதைச் செய்யுங்கள். அதைச் செய்யுங்கள் என்று ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தால், அதற்கு முடிவே கிடையாது. பெரிய குழப்பமாகிவிடும். செய்யாதன செய்யோம் என்றால் பகவான் அந்தர்யாமியாக இருந்து அந்த தர்மத்தை உணர்த்துவான். ஒரு விஷயத்தை செய்யும்போது அந்தர்யாமியினுடைய தர்மம் எப்படியாவது அந்த இடத்தில் வந்து விடும். அதேபோல, பேசும்போது அந்தர்யாமியான பகவானுடைய தர்மம் அந்த இடத்தில் சாதாரணமாக வந்து விடும். அந்தர்யாமியாக இருக்கக்கூடிய பகவான் இது தர்மமா… அதர்மமா… என்று காண்பித்துக் கொடுப்பார். அதை மட்டும் கவனித்து விட்டு, அதர்மமாக இருந்தால் விட்டுவிடு. தர்மமாக இருந்தால் எடுத்துக் கொள் அவ்வளவுதான்.
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் என்று இரண்டே வார்த்தையில் வாக்கு தர்மத்தையும், சரீர தர்மத்தையும் முடித்து விட்டாள்.
இங்கும் யார் மையமாக இருக்கிறார் எனில், அந்தர்யாமியாக இருக்கும் பகவான்தான் இருக்கிறார். அதனால், தன்னுடைய அகங்காரத்தை மையமாக வைக்கும் நிலை போய்விடுகின்றது.
இதற்கு அடுத்ததாக…
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.
இங்கு ஐயம் என்றால் நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் ஏதாவது சமர்ப்பிக்கிறோம் எனில் அதற்கு ஐயம் என்று பெயர். நம்மிடம் உதவி என்று கேட்பவர்களுக்கு நாம் செய்வது பிச்சை என்பதாகும்.
முதலில் வருவது உதவி கிடையாது. நம்முடைய மரியாதையை பக்தியை காண்பிக்க வேண்டி செய்யக் கூடிய சமர்ப்பணம். இரண்டாவது செய்யக் கூடியது உதவி. இந்த இரண்டிற்குமான வித்தியாசத்தையும் விஷயத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குப் பிறகு, ஆந்தனையும் கை காட்டி என்கிறாள். நம்மால் முடிந்த அளவிற்கு அதைச் செய்து கொண்டிருக்க வேண்டும். ஒரு விரதத்தை எடுத்துக் கொண்டால் அதில் சில தானங்களெல்லாம் செய்ய வேண்டும் என்று வருகிறது. இங்கு ஆண்டாள் அதைத்தான் செய்து கொடுக்கிறாள். அந்த தானத்தையும் எப்படி காண்பித்துக் கொடுக்கிறாள் எனில், இரண்டு விதமாக காண்பித்துக் கொடுக்கிறாள்.
ஒன்று வந்து, நம்மைவிட உயர்ந்தவர்களாக இருக்கக் கூடிய ஆச்சார்யார்கள், ஆழ்வார்கள், மகான்கள் போன்றோர்களுக்கு செய்யக் கூடிய சமர்ப்பணம். ஒரு கோயிலில் செய்கின்ற கைங்கரியம். இதுவும் சமர்ப்பணம்தான். அதனால், மரியாதை நிமித்தமாக, பக்தி நிமித்தமாக அந்த சமர்ப்பணத்தைச் செய்கிறோம். அதற்கடுத்து பிச்சை என்பது தானமாக செய்யக் கூடியது. நம்மிடம் உதவி என்று கேட்பவர்களாக இருக்கலாம் அல்லது கேட்க முடியாதவர்களாகவும் இருக்கலாம். இருவருக்குமே செய்யலாம்.
இந்த இரண்டையும்தான் ஆந்தனையும் கை காட்டி… என்று ஆண்டாள் சொல்கிறாள். இன்னொரு விஷயம் என்னவெனில், எப்போதுமே செய்ய வேண்டும். அதிலும் விசேஷ நாட்களில் நிச்சயம் செய்ய வேண்டும். சமர்ப்பணம் என்பது தர்மம். உதவி செய்வது என்பது தானம். அதனால், இந்த தானத்தையும் தர்மத்தையும் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
இப்படி இந்த விஷயங்களையெல்லாம் கடைபிடிப்பதனால், உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.
இவற்றையெல்லாம் சரியாக நாம் கடைப்பிடிப்பதால் நாங்கள் கேட்கக் கூடிய அந்த நாராயணனையே எங்களுக்கு பலனாக கொடுங்கள். அந்தப் பலனைப் பெற்று உய்யுமாறு எண்ணி, எங்களை ஆசீர்வதித்து அருள்புரிய வேண்டும் என்கிறாள்.
இந்தப் பாடலின் ஒட்டுமொத்தமாக நாம் பார்ப்பது என்பது மனதினுடைய தேவையற்ற அனைத்து அசைவுகளையும் தடுத்து நிறுத்துகிறாள். அனைத்து சலனங்களையும் நிறுத்துகிறாள்.
வாக்கு தர்மம், சரீர தர்மம், மனம், மொழி, சரீரம் என்று எல்லாவித தர்மங்களையும் காட்டிக்கொடுக்கிறாள். இதற்கெல்லாம் காரணமாக இருக்கின்ற பஞ்சேந்திரியங்களை சரியாக வைத்து அதற்குரிய தர்மத்தில் செலுத்த வேண்டும். அந்தர்யாமி இருந்து அவன் எதை தர்மம் என்று வைத்திருக்கிறானோ அதையே இந்திரியங்களால் செயல்படுத்த வேண்டும் என்று ஆழமாகவும் அழகாகவும் சொல்கிறாள். நமக்கு உபதேசமாகவும் சொல்லித் தருகிறாள்.
The post திருப்பாவை எனும் தேனமுதம் appeared first on Dinakaran.