இரட்டைக் கோயில்கள் கீழையூர்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: இரட்டைக் கோயில்கள், கீழையூர், அரியலூர் மாவட்டம்.

காலம்: 9ஆம் நூற்றாண்டின் இறுதி – 10ஆம் நூற்றாண்டின் தொடக்கம்.

கீழையூர் சோழ மன்னர்களின் சிற்றரசர்களாகிய பழுவேட்டரையர்களின் தலைநகர் பழுவூரின் ஒரு பகுதியாகும். ஊரின் பெயர் ‘மன்னு பெரும் பழுவூர்’ என்றும் ‘அவனி கந்தர்வபுரம்’ என்றும் குறிக்கப்படுகிறது. இங்குள்ள ‘அவனி கந்தர்வ ஈஸ்வர கிருக’ வளாகத்தில் இரண்டு சிவன் கோயில்கள் உள்ளன.வடபுறத்தில் உள்ள கோயில் ‘வட வாயில் ஸ்ரீகோயில்’ (சோழீச்சரம்) என்றும், தென்புறத்தில் உள்ள கோயில் ‘தென் வாயில் ஸ்ரீகோயில்’ (அகத்தீஸ்வரம்) என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ஒரு கோயிலின் இறைவன் அகஸ்தீஸ்வரர் – இறைவி அபிதகுஜாம்பிகை.மற்றொரு கோயிலின் இறைவன் சோழீஸ்வரர் – இறைவி மனோன்மணிபழுவேட்டரையர் சிற்றரசர்கள் குமரன் கண்டன் மற்றும் குமரன் மறவன் காலத்தில் (பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டின் இறுதி – 10ஆம் நூற்றாண்டின் தொடக்கம்) கோயில்கள் கட்டப்பட்டன. இவை முற்கால சோழர் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

கருவறையைச் சுற்றியுள்ள தேவகோஷ்டங்களில் கிழக்கு: நின்ற நிலை முருகன், வடக்கு: நின்ற நிலை பிரம்மா, தெற்கு: நின்ற நிலை சிவன் ஆகிய சிற்பங்களின் பேரழகு பிரமிப்பூட்டுகின்றன. விமான கோஷ்டங்களில் அரிய சிற்பமான ‘பாரசிவன்’ (சிவலிங்கத்தைச் சிவ பரம்பொருள் சுமக்கும் சிற்ப வடிவம்), தட்சிணாமூர்த்தி குறிப்பிடத்தகுந்தவை.மகரத் தோரணங்களில் உள்ள குறுஞ் சிற்பங்கள் கஜசம்ஹாரமூர்த்தி, ‘ஊர்த்வஜானு’ ஆடற்கோலம் (தூக்கிய முழங்கால்) ஆகியவற்றின் சிற்ப நுட்பம் காண்போரைக்கவர்கின்றன.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post இரட்டைக் கோயில்கள் கீழையூர் appeared first on Dinakaran.

Related Stories: