நல்லன எல்லாம் தரும் அபிராமி
சென்ற இதழில், பித்தர் என்னும் வரிக்கு விளக்கத்தை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக…
“ஆவரென்றால்’’
என்ற பதத்தால் சமயச் சடங்கு மற்றும் பயிற்சி இவை களினால் தேவதைகளின் அருளை பெற்றதனால் அவர்களின் நடை உடை பாவனைகள் உலகியல் வாழ்விலிருந்து விலகி மாறுபட்டு இருக்கும். உலகியல் நோக்கில் இத்தகைய மெய் ஞானிகள் பார்ப்பதற்கு “பித்தர்” போன்று தோன்றுவார்கள். இந்த நிலை இயல்பாக தோன்றுவது அல்ல பார்ப்பவர்க்கு அப்படித் தோன்றுகிறது.
இதை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம். வீடுகளில் காணப்படும் ஜன்னல்களில் வழியாக வெளியிலே உள்ளவர்களைக் காணும் போது வீட்டில் உள்ளவர்க்கு இவர் ஜன்னலுக்குள் இருப்பது போன்று தோன்றும், வெளியில் இருப்பவர்கள் ஜன்னலுக்குள்ளே இருப்பது போலத் தோன்றும் அதுபோல் உபாசகர்கள் கண்களுக்கு உலகம் “பித்து” போல் தோன்றும். உலகில் உள்ளோர் கண்களுக்கு உபாசகன் “பித்து” போல் தோன்றுவார். இதையே “பித்தர்” என்பர். இது பைத்திய வகையைச் சாராது. மாறாக முழு விழிப்புணர்வோடு இருப்பார்கள். இதை சூட்டவே “பித்தர் ஆவரென்றால்” என்கிறார்.
“அபிராமி சமயம்’’
ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கடவுளை முதன்மையாகக் கொண்டு வழிபடுகிறது. அந்த வகையில் சைவ சமயம் சிவத்தையும், வைணவ சமயம் விஷ்ணுவையும் வணங்குவது போல அபிராமி பட்டர் தன் சமயத்திற்கு அபிராமியே முழுமுதற் கடவுளாகச் சொல்கிறார். ஒரு சமயம் என்றால் பத்து அடிப்படைகள் இருக்கவேண்டும் என்கிறது சாத்திரங்கள். அவற்றைப் புரிந்து கொண்டால் மட்டுமே சமயம் என்ற சொல்லை நாம் புரிந்து கொள்ளலாம். முதலில் இந்தப் பத்தையும் அபிராமிபட்டர் தாம் இதற்கு முன் சொன்ன பாடல்களின் வழி தெளிவுறக் குறிப்பிடு கிறார். அதனால்தான் ‘`அபிராமி சமயம்’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
கருத்தாக்கக் கொள்கை: ‘சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்’ (2)
செயலாக்கக் கொள்கை: ‘பரமாகம பத்ததியே’ (6)
கருத்தாக்கக் கொள்கைக்கான நூல்: அபிராமி அந்தாதி (காப்பு) கருத்தாக்கம் மற்றும் செயலாக்கக் கொள்கைக் கான நூல்: சிற்பம், மந்திரம், யந்திரம், தந்திரம் போன்றவற்றில் உள்ள உமையம்மையைப் பற்றிய குறிப்பு ‘கண்ணியது உன் புகழ்’, ‘சேர் திருநாமங்கள்’(77)
அந்தக் கொள்கையின் வழி சொல்லப்படும் சாதனம்: ‘மன்னியது உன் திருமந்திரம்’ (6)
கடவுள் பண்பு: `கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்’ (44)
சமயத்தைப் பின்பற்ற வேண்டிய ஒழுக்க முறைகள்: ‘குறித்தேன் மனத்தினில் நின் கோலம்’ (76)
தவிர்க்க வேண்டியவைகள்: ‘கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது’ (23) ‘யாவரொடும் பிணங்கேன்’ (81)
கொள்கைக்கு முரணானவை: ‘வீணே பலி கவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு பூணேன்’ (64) ‘பரசமயம் விரும்பேன்’ (23)
கொள்கைக்கு உடன்பாடானவை: ‘பரம் என்றுனை அடைந்தேன்’ (88) என்று பத்துப் பண்புகளையும் தன் பாடல்களின் வழி சூட்டி அபிராமியை வணங்கினால் அனைத்து நலனும் பெறலாம் என்பதை அவருடைய வாழ்க்கையாலேயே போதிக்கிறார். இதையே “அபிராமி சமயம்” என்கிறார்.
“நன்றே” முன் சொன்ன அனைத்துப் பண்புகளையும் தன் இயல்புகளாய்ப் பெற்றிருந்தால் அபிராமி சமயத்தின் மூலமாக அனைத்து நலன்களையும் பெறலாம் என்பதனை `நல்லன எல்லாம் தரும்’ (69) என்ற அவர் பாட்டாலே உணர்த்துகிறார். அதையே “நன்றே” என்கிறார்.
‘`அந்தமாக’’“விரும்பித் தொழும் அடியார், விழிநீர் மல்கி, மெய்புளகம் அரும்பித், ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து, சுரும்பிற் களித்து, மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவரென்றால்” என்பதனால் அபிராமியை முழுமுதற்பொருளாகக்கொண்டு அபிராமி சமயத்தின் வழிகளை பின்பற்றி அபிராமியை மட்டும் வழிபட்டால் அவர்களுக்கு உள்ளத்தில் தோன்றும் அனுபவத்தை உணர்வுகளின் வழி சில அகப்புற அடையாளங்களை இங்கே பதிவு செய்கிறார்.
“அபிராமி சமயம் நன்றே” என்ற வார்த்தையால் வேதாகமங்களை பிரமாணமாகக் கொண்டு ஒவ்வொரு கோயிலுக்கும் வழிபாட்டு முறைகள் (பூஜை) சிற்சில வேறுபாடுகளுடன் தனித்தனியே உள்ள நூல்களாக விளக்கப்பட்டுள்ளது. இதை `கல்பம்’ என்பர். அந்தக் `கல்பம்’ என்ற வார்த்தையையே “அபிராமி சமயம்’’ என்று குறிப்பிடுகிறார். அதன் பயனையே
“நன்றே’’ என்கிறார். அதை அறிவோம்…அருள் பெறுவோம்…
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்
The post அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் appeared first on Dinakaran.