அமைதியின்மை எங்கிருந்து வருகிறது?

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 94 (பகவத்கீதை உரை)

ஹோமியோபதி மருத்துவரான சாமுவேல் ஹனிமன், வெளியிலிருந்து நோய்களை விரும்பிப் பெற்றுக்கொண்டார் – தன் ஆன்மாவின் சுகத்துக்காக! அவர் எழுதி வைத்திருக்கும் நோய் அறிகுறிகள் மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் நோய் தீர்க்கும் குணாதிசயங்களைப் படிக்கும்போது மிகவும் வியப்பாக இருக்கும். சொன்னதையே திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தை
களால் வலியுறுத்தப்படும் கிருஷ்ணனின் உபதேசம் போலவே அவை அமைந்திருக்கும்.

ஆனால், மெய்ப்பொருள் காணக்கூடிய ஹோமியோபதி மருத்துவர்களால் (ஞானிகளால்) நோய் நாடி, நோய் மூலமும் நாடமுடியும்! அதாவது ஆன்மாவை அமைதிப்படுத்தினால் இது சாத்தியம்! அதாவது ‘இது சரியான மருந்தாக இருக்குமோ அல்லது அதுவா?’ என்ற குழப்பத்திலிருந்து விடுபட வேண்டும். இதற்கு பல நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த அனுபவம் உதவும். அதைத்தான் சாமுவேல் செய்தார்.

பொதுவாகவே, அமைதி உள்ளிருந்துதான் மலர்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அமைதியால்தான் சாதனைகள் நிகழும். ‘அமைதியை உள்ளே தேடு’ என்ற கிருஷ்ணனின் உபதேசமும் இதைத்தான் உறுதிசெய்கிறது. அதாவது துக்கமும், துயரமும் உள்ளிருந்து உற்பத்தியாவதில்லை; அவை வெளியிலிருந்து நமக்குள் செலுத்தப்படுபவைதான். நமக்கு ஏற்படும் வேதனை எதனால், யாரால் உண்டானது என்பதை நம்மால் சொல்ல முடியும்; நினைவிருக்கும். ஆனால் அமைதி, ஆன்ம சந்தோஷம் எங்கிருந்து வருகிறது என்று அறிவதற்கு நாம் மெனக்கெட்டதே இல்லை. ‘என்னவோ தெரியவில்லை, இன்று நான் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன்,’ என்று சிலர் சொல்வார்கள். அதற்கு முக்கிய காரணம் மனம் கலங்காததுதான். இந்த கலக்கமின்மை, நிர்ச்சலனம், அமைதி எங்கிருந்து வந்தது?

அது தூக்கம் மாதிரி. தூக்கம் எங்கிருந்து வருகிறது? அல்லது எங்கிருந்து நீங்கள் கொண்டு வருகிறீர்கள்? உடலால் மட்டுமே உணரமுடிந்த அந்தத் தூக்கத்தை என்ன விலை கொடுத்து வாங்குகிறீர்கள்? சொல்ல முடியாது. அதுவாக உடலின் தேவையைப் பொறுத்து வந்து சேர்கிறது, உடலுக்கும், மனசுக்கும் உற்சாகம் தருகிறது!ஆக, உள்சுத்தம்தான் முக்கியம். அதுவே உள்ளொளி. அந்த ஒளி வெளியிலிருந்து வரக்கூடிய எந்தக் கருமையையும் உள்ளே படரவிடாது. இந்த ஒளி, நம்பிக்கையைச் சார்ந்தது. அவநம்பிக்கை என்ற நிழல் விழுமானால் ஒளிக்கு இடமில்லாமல் போகும். நம்பிக்கை என்பது என்ன? எது உண்மையோ அதைப் பற்றிக்கொள்வதுதான்.

ஒரு காட்டில், இருட்டுவேளையில் போய்க் கொண்டிருந்தான் ஒருவன். பூமிக்கு மேலே வளர்ந்திருந்த ஒரு மரத்தின் தடிமனான வேர் தடுக்கி விழுந்தான். அவன் விழுந்ததோ ஒரு பள்ளத்தில். நல்ல வேளையாக கைவீசி ஒரு கொடியைப் பற்றி விட்டதால், மொத்தமாக விழாமல் தொங்கிக் கொண்டிருந்தான். அது சிறு பள்ளம்தானா அல்லது அதல பாதாளமா என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், அவனை பயம் இயக்கியது. ‘அது ஆழமானதுதான், மலை முகட்டின் சரிவு போல. கால் தொட்டு விடும் தூரத்தில் தரை இல்லை,’ என்று கற்பனை செய்துகொண்டான். தன்னைக் காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்ற ஏக்கம், அவனைக் கூப்பாடு போட வைத்தது.

யார் காதிலாவது இந்தச் சத்தம் விழாதா? பதிலில்லை. அவன் கணக்குப்படி வெகு நேரத்துக்கு பதிலில்லை. (பயத்திலும், அவநம்பிக்கையிலும் சொற்ப நேரமும் வெகுநேரம் போலவே தோன்றும்!) திடீரென்று ஒரு குரல் கேட்டது. ‘நீ கைப்பிடித்திருப்பதை விடு. தரையில் குதித்து விடலாம்’ என்றது. அவனுக்கு நம்பிக்கை இல்லை. பிடியை விட்டால், விழுமிடம் பெரிய பள்ளத்தாக்காக இருந்தால், தன் உயிர் போவது நிச்சயம், என்று ‘நம்பினான்’ அவன். கூடவே சந்தேகம். ‘‘யார் அது பேசு வது?’’ என்று கேட்டான். பதிலில்லை. அவநம்பிக்கை அதிகரித்தது. விரைவில் பொழுது விடியாதா, வெளிச்சத்தில் தொங்கு தூரத்தை அளவிட முடியாதா, தப்பித்து விடலாமே என்றெல்லாம் யோசித்தான்.

ஆனால், வெகுநேரம் அப்படியே தொங்கியவன், காலை புலர்ந்ததும் பிடியை விடாமல் இறந்து போயிருந்தான்! பயமும், அவநம்பிக்கையும் காலனைக் கூட்டி வந்திருந்தன. ஆனால் வேதனையான வேடிக்கை என்னவென்றால் அவனுடைய காலிலிருந்து தரை நான்கடி கீழேதான் இருந்தது! யாருமே இல்லாத காட்டில் தன்னை எச்சரித்தது இறைக் குரலாக, அல்லது மனதின் பாசிடிவ் குரலாக இருக்கலாம் என்று அவனுக்கு ஏன் தோன்றாமல் போயிற்று? அப்படியே குதித்திருந்தால், அது மிகவும் ஆழமான பள்ளமாகவே இருந்தால், வேறொரு பற்றுக்கோல் கிடைக்காதா என்ன? அதைப் பற்றிக் கொண்டு, தப்பிக்கும் வழியை ஆராய்ந் திருக்கலாமே? பயம், அவநம்பிக்கை!

லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்ருஷய க்ஷீணகல்மஷா
சின்னத்வைதா யதாத்மான ஸர்வபூதரஹிதே ரதா (5.25)

‘‘ஞானிகள் பரமாத்ம தரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள். இத்தகையவர்களால்தான் உலக நன்மையைப்பற்றிச் சிந்திக்க முடியும். ஞானி முற்றிலும் பாபங்களைத் தொலைத்தவனாக இருக்கிறான். எங்கும், எதிலும் அந்தப் பரம்பொருளையே அவன் காண்கிறான். இவனால் எளிதாக பரப்பிரம்மத்தை அடையமுடியும்.அர்ஜுனன் ஏன் தயங்குகிறான்? வில்வித்தையில் தனக்குச் சமமானவன் என்று கர்ணன் நிரூபித்தானே, அது முதல் துரியோதனனுக்குத் தோழனும் ஆனானே, அந்த சம பலத்தவனைத் தன்னால் எதிர்க்க முடியுமா என்று அஞ்சுகிறானா? தன் குருநாதர்களான பீஷ்மர், துரோணர் போன்றோர் ‘குரு விதியாக’ ஓரிரு வித்தைகளை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் இருப்பார்கள், அதுபோன்ற அவர்களுடைய ஏதாவது ஒரு ரகசிய வித்தையால் தான் வீழ்த்தப்பட்டு விடுவோமோ என்று தயங்குகிறானா?

‘விட்டால் போதும்,’ என்று ஓடத் தயாராகும் கோழைத்தனம் இவன் மனதுக்குள் எப்படிப் புகுந்துகொண்டது? போகிற போக்கைப் பார்த்தால், ‘கிருஷ்ணா, எனக்காக என் சார்பில் நீயே போரிடு,’ என்று கேட்டுவிடுவானோ என்றும் தோன்றியது. அந்தப் பரமாத்மா இதையும் எதிர்பார்த்துதான், ‘நான் போரில் ஈடுபடமாட்டேன், ஆயுதம் எடுக்க மாட்டேன்; ஆனால் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்,’ என்று சொன்னாரோ? அர்ஜுனனின் பராக்கிரமம் உலகுக்குத் தெரிய வேண்டும் என்பதோடு, அதர்மம் அழியத்தான் வேண்டும் என்ற சங்கல்பமும், கிருஷ்ணனை, அவனுடன் தொடர்ந்து பேசவைத்தது.

ஆனால், கிருஷ்ணனின் கூற்றின்படி எது பாபம் என்பதை அர்ஜுனன் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறான்? தன்னுடைய எண்ணத்தாலோ, செயலாலோ இன்னொருவரை வேதனைப்பட வைப்பது பாபம், சரியா? இப்படி வருத்தப்பட வைப்பவன் பாபியாகிறான். அதனால்தான் இந்தப் போரில் ஈடுபட அவன் விரும்பவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? ஆனால், போர்க்களத்தில் பாபம் எங்கிருந்து வந்தது? தற்காத்துக் கொள்வதாலும், தாக்குவதாலும் எதிரி வேதனைப்படுகிறான் என்றால் அதுதானே போரின் நியதி? அப்படியிருக்க, யுத்தகளத்தில் பிறரை வதைப்பது பாபம் என்று நொண்டிச் சாக்கு சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

அதனால்தான் கிருஷ்ணன் மீண்டும், மீண்டும் அர்ஜுனனை வற்புறுத்துகிறார். போர்க் களத்தில் பாப-புண்ணிய கணக்குப் பார்க்காத ‘ஞானி’யாக மாறுமாறு அவனை நிர்ப்பந்திக்கிறார்!
எந்த உணர்வுக்கும் ஆட்படாமல் இருப்பதென்பது எப்போதுமே இயலாத காரியம்தான். ஆனால், சார்ந்திருத்தல், ஆதரவு பெறுதல் என்ற நிலையின் அடிப்படையில் உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியாது என்பதுதான் மனித இயற்கை. உதாரணமாக செய்தித் தாள்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

நம் கொள்கை, நம் அபிமானம், நம் ஆதரவு இவற்றுக்குத் தோதுப்படும் செய்தித்தாளைத்தான் நாம் வாங்குகிறோம். அந்தத் தாளில் நம் மனப்பாங்கை ஆதரிக்கும் செய்திகள் வந்தால் சந்தோஷப்படுகிறோம்; எதிரான செய்திகளைப் படித்து கோபப்படுகிறோம். தூங்கி எழுந்த பின்னரும், சிறிது நேரம் கழித்து செய்தித்தாள் படித்த பின்னரும் இருவேளையும் நம் ரத்தக் கொதிப்பை சோதித்தால், இரண்டாவது அதிகமானதாக இருக்கும். காரணம், செய்திகள்! நம் மனசுக்கு உடன்படாத செய்திகள்! அதற்குப் பிறகு சமாதானமடைந்துவிடுகிறோம் என்றாலும், மறுநாள் காலையிலும் இதே கதைதானே!

அதாவது நம் எண்ணம், செயல் எல்லாமே நம்முள்ளேயே தோன்றினாலும், நம்மை அவை பாதிக்காமல் விடுவதில்லை. நம் உடலை, நம் ஆரோக்கியத்தை, ஏன் நம் ஆன்மாவையும்கூட அவை பாதிக்கின்றன. இதற்கு நம் அமைதியின்மையே முக்கிய காரணம். இந்த அமைதியின்மை அதிகரிக்க, அதிகரிக்க, இயல்பான, வழக்கமான தினசரி செயல்களில்கூட நம்மால் முழுமையாக, ஈடுபட முடிவதில்லை என்பதுதான் யதார்த்தம். ‘செய்திகள், வெறும் செய்திகள் அவ்வளவுதான். அவை சொல்லும் சம்பவங்கள் நடந்து போனவை. அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மீது மனிதாபிமான நோக்கத்தில் பரிதாபப்படுவதோ, அவர் நலனைக் கருதி கடவுளிடம் வேண்டிக் கொள்வதோ செய்யலாமே தவிர, வேறு என்ன செய்துவிட முடியும்? ஆகவே அந்தக் கணத்தோடு நம் மனதை விட்டு அந்தச் செய்தியை நீக்கிவிட்டோமானால், அமைதி அகத்துக்குள் திரும்பும்.

திருமணமாகி, தொலைதூரத்தில் வசிக்கும் தன் மகளுக்கு ஏதோ காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பதை அறிந்த ஒரு தந்தை, பதைபதைப்புடன் அவளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ‘‘என்னம்மா ஆச்சு?‘‘ என்ற அவருடைய கேள்வியே அழுகையாக இருந்தது. அவரால் மகளுக்குத் துன்பம் என்பதை ஏற்க முடியவில்லை.

மகள் அமைதியாக பதில் சொன்னாள்: ‘‘சரி, எனக்கு பாதிப்புதான். அதற்காக உங்களால் இப்போது என்ன செய்ய முடியும்? உங்களால் இங்கே வரவும் முடியாது, வந்தாலும், வருத்தப்பட்டுக்கொண்டுதான் உட்கார்ந்திருப்பீர்களே தவிர, பெரிதாக ஏதும் உதவிடவும் உங்களால் இயலாது. ஏன் வீணாக மனசைப் போட்டு அலட்டிக் கொள்கிறீர்கள்? என்னால் சமாளித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை முதலில் உங்களுக்குள் வளர்த்துக்கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு அனுபவம். இதனை ஏற்றுக்கொள்வதும், உபாதையை நிவர்த்தி செய்து கொள்வதும், படிப்பினை. ஆகவே நான் இன்னும் ஒரு விஷயம் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இது என்று சந்தோஷப்படுங்கள்.

இங்கே எனக்கு உதவ கணவர், குழந்தைகள் என்று இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் ரெலாக்ஸ்ட் ஆக இருங்கள். என்னைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதால், உங்கள் உடல்நலம்தான் பாதிக்கும். ஆனால், என்னால் சமாளித்துக் கொள்ள முடியும், இந்த உபாதையிலிருந்து மீண்டுவர முடியும் என்று நம்பிக்கை வைத்தீர்களென்றால், நீங்கள் உற்சாகமாக விளங்குவீர்கள். அதை அறிந்து நானும் விரைவில் குணமடைவேன். ஆகவே, உங்களுடைய வழக்கமாக செயல்களில் சந்தோஷமாக ஈடுபடுங்கள். நிம்மதியாக இருங்கள்,” என்று பதிலளித்தாள். உண்மைதானே? சொந்த மகளிடமே ‘அவளுடைய அனுபவம் அவளுக்கு; அதனாலான படிப்பினையும் அவளுக்கே’ என்று தீர்மானித்துக் கொண்டு விட்டோமானால், சம்பந்தமேயில்லாத மூன்றாம் மனிதரைப் பற்றி அனாவசிய உணர்ச்சி வசப்படுதல் இருக்காதல்லவா?மனித வாழ்க்கையில் இதுபோன்ற ‘பற்றற்ற’ தன்மையால், நன்மைகள் விளைகின்றன என்பதைப் பற்றி நாம் யோசித்திருக்கிறோமா? இதைத்தான் பயில வேண்டும் என்று அறிவுறுத்துகிறார், கிருஷ்ணன்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

The post அமைதியின்மை எங்கிருந்து வருகிறது? appeared first on Dinakaran.

Related Stories: