சென்ற இதழின் தொடர்ச்சி…
இந்த சரீரமாகிய ஸ்ரீ சக்ர ராஜ ரதத்தை கொடுத்துவிட்டு, பரமாத்மா என்ன செய்கிறதெனில், நமக்குத் தேவையான எல்லா கருவி கரணங்களையெல்லாம் கொடுக்கிறது. கருவி கரணங்களான இந்திரியங்கள் முதல் அந்தக்கரணங்கள் வரை அளித்திருக்கிறது. சாஸ்திரம் என்ன சொல்கிறதெனில் இந்தக் கருவி கரணங்களுக்கெல்லாம் தத்துவங்கள் என்று பெயர். மொத்தம் 96 தத்துவங்கள் கொடுக்கப்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. நாம் இந்த சரீரத்தோடேயும் ஆத்மாவோடேயும் இயங்க வேண்டுமெனில், 96 தத்துவங்களும் செயல்பட வேண்டும். இப்படி கொடுக்கப்பட்ட தத்துவார்த்தமான கரணங்கள் அனைத்துமே அம்பாளுடைய ஆயுதங்களாகும். அதனால்தான் மனோ ரூபேக்ஷு கோதண்டா. நம்முடைய மனமே அவளுக்கு கரும்பு வில்லாக இருக்கிறது. நம்முடைய தன் மாத்திரைகளே அம்புகளாக இருக்கிறது. நம்முடைய ஆசையே அவளுக்கு பாசமாக இருக்கிறது. நம்முடைய கோபமே அவளுக்கு அங்குசமாக இருக்கிறது. நமக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு தத்துவமும் அம்பாளுடைய ஒவ்வொரு ஆயுதமாக இருக்கிறது. அதனால்தான் சர்வாயுத பரிஷ்க்ருதா… சர்வாயுதங்களை கொண்டவள்.எனவே, ஒரு சாதகன் தனக்கு கொடுக்கப்பட்ட எல்லாவித கருவி கரணாதிகளையும் அம்பாளினுடைய ஆயுதங்களாகவும், தன்னுடைய சரீரத்தை அம்பாள் இருக்கக்கூடிய சக்ர ராஜ ரதமாகவும் ஒரு சாதகன் எப்போது உணருகிறானோ அப்போதே, அந்த சக்ர ராஜ ரதத்திற்கு மத்தியில் ஆத்ம சொரூபமாக லலிதாம்பிகை எழுந்தருளுகிறாள்.
அப்படி எழுந்தருளும்போது பண்டாசுரனால் எப்படி வர முடியும்.இந்த நாமத்தில் கடைசியாக சர்வாயுத பரிஷ்கிருதா என்று இருப்பதை மட்டும் கொஞ்சம் பார்க்கலாம். இந்த பரிஷ்கிருதம் என்றால், எல்லாவித ஆயுதங்களாலும் சூழப்பட்டவள். ஆயுதங்களுக்கும் காரணமாக இருத்தல். ஆயுதங்களை தாங்குதல், சூழப்படுதல் என்றெல்லாமும் அர்த்தம் வரும். இப்போது இந்த சாதகன் இந்த விஷயமெல்லாம் தெரியாமல் இருக்கும்போது, அநாதி கர்ம வாசனையினால், அஞ்ஞானம் மூடி இருக்கும்போது இந்த சாதகனுக்கு இந்த சரீரம், கருவி கரணாதிகள், இந்த தத்துவங்களெல்லாம் இருக்கிறதல்லவா இவை எல்லாம் எப்படி இருக்கிறதெனில், பகிஷ்கிருதமாக இருக்கிறது. பகிஷ்காரமாக இருக்கிறது. அதாவது நம்முடைய சொரூபத்தை மறைத்திருத்தல். எதை நாம் பகிஷ்காரம் என்கிற மறைத்தலாக நினைத்தோமோ அது உண்மையில் பகிஷ்காரமாக இல்லை. பரிஷ்காரமாக அதாவது உதவி பண்ணத்தான் இருக்கிறது. அதனால்தான் பரிஷ்க்ருதா என்று இந்த நாமத்தில் வந்திருக்கிறது. அவளே இவை அனைத்தையும் தாங்குகிறாள் என்றும் அர்த்தம். நமக்கு கொடுக்கப்பட்ட இந்த சரீரத்தையும், கருவி கரணாதிகளையும், தத்துவங்களையும் அம்பாளுடைய ஆயுதமாக எப்போது இவன் உணருகின்றானோ அந்தக் கணமே ஆத்ம சொரூபமாக ஸ்வ சொரூபமாக இருப்பது சாட்சாத் அம்பிகையேதான் என்று தெரிய வருகிறது. அதைக் காண்பிக்கக் கூடியதுதான் இந்த நாமா. இதற்கான கோயிலாக பண்ருட்டிக்கு அருகேயுள்ள திருவதிகையைச் சொல்லலாம். ஏனெனில், இந்த நாமம் ரதம் சம்மந்தமாக இருப்பதால் திருவதிகையில் இருக்கக்கூடிய திரிபுராந்தகர் திரிபுரசம்ஹாரத்திற்காக தேரை எடுத்துச் சென்றார்.
கமலாட்சன், தாரகாட்சன், வித்யுன்மாலி என்று மூன்று அரக்கர் களையும் வதம் செய்ய தேரை எடுத்துச் சென்றார். அதனால் திருவதிகை வீரட்டானேஸ்வரர் என்று அவருக்குப் பெயர். இந்த நாமாவில் அம்பாள் பண்டாசுரனை சம்ஹாரம் செய்கிறாள். இங்கேயும் ஈஸ்வரனும் அம்பாளும் சமஸ்த தேவதைகளையும் ஆயுதங்களாக்கி, இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையுமே தட்டுகளாக்கி சக்ரராஜமாக்கினார்கள். இப்போது நமக்கு மட்டும் இருக்கக் கூடியதாக இல்லாமல் பிரபஞ்ச முழுவதும் இருக்கக்கூடிய விராட் சொரூபம் முழுக்க சக்ர ராஜ சரீரம்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால், பிரபஞ்சத்தையே சக்ரராஜ ரதமாக வைத்துக்கொண்டு அம்பிகை வருவதால் இந்தக் கோயிலிலுள்ள அம்பாளுக்கு திரிபுரசுந்தரி என்று பெயர். வீரட்டானேஸ்வரர், திரிபுராந்தகராகவும், அம்பாள் திரிபுரசுந்தரியாகவும் தமிழில் பெரிய நாயகி என்றும் அருள்கின்றனர். இந்தக் கோயிலில் உள்ள அம்பாளுக்கு சக்ர பிரதிஷ்டையும் உண்டு. இன்றைக்கும் நவராத்திரி காலங்களில் சஹஸ்ரநாமம், த்ரிசதீ அர்ச்சனைகளெல்லாம் நடக்கின்றன. இங்குதான் அப்பர் சுவாமிகளின் வயிற்று வலி நீங்கி சமணத்திலிருந்து சைவத்திற்கு வந்தார். இந்தத் தலமானது சைவத்தில் பாடல் பெற்ற க்ஷேத்ரமாக இருந்தாலும், அம்பாள் உபாசனையிலும் பிரசித்தி பெற்ற இடமாகும். இன்றும் இந்தக் கோயிலின் அமைப்பே தேர் அமைப்பில் உள்ளதுதான் ஆச்சரியமாகும். கேய சக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதாஇதற்கு முன்பு சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதா என்கிற நாமத்தைப் பார்த்தோம். ஸ்ரீ சக்ர ரூபமான ரதத்தில் அம்பாள் எப்படியிருக்கிறாள். மேலும், அம்பாளை சுற்றியுள்ள ஆயுதங்களை குறித்து இதற்கு முந்தைய நாமத்தில் பார்த்தோம். அம்பிகைக்கு அடுத்த நிலையில் ரதத்தைப்பற்றிச் சொல்லும்போது பிரதானமாக மூன்று ரதங்கள் இருக்குமென்று சொன்னோம். ஒன்று அம்பிகையினுடைய பிரதான ரதம். அதற்கடுத்து மந்த்ரிணீ என்று சொல்லக்கூடிய ராஜமாதங்கி ராஜ ஷியாமளா ரதம்.
இதற்கு அடுத்து சேனாதிபதியாக இருக்கக் கூடிய, தண்டநாதா என்று சொல்லக்கூடிய வாராஹியினுடைய ரதம். இந்த மூன்று ரதங்கள் மிகவும் பிரதானமானது. இப்போது நாம் பார்ப்பது மந்த்ரிணீ என்று சொல்லக்கூடிய ராஜ ஷியாமளா, ராஜமாதங்கியினுடைய ரதமாகும். அம்பிகையானவள் தானே, மகாராணியாக லலிதா திரிபுரசுந்தரியாகவும், மந்த்ரிணீயாகவும் இருக்கிறாள். அதே அம்பாள்தான் சேனாதிபதியாக தண்டநாதாவாக இருக்கிறபோது மஹாவாராஹியாக இருக்கிறாள். இப்போது இந்த நாமத்தில் மஹாஷியாமளா ராஜமாதங்கியின் ரதம்தான் கேய சக்ரம். மந்த்ரிணீ என்று சொல்லக்கூடிய மாதங்கியின் சக்ரத்திற்கு பெயர் கேய சக்ரம் என்று பெயர். எப்படி ஸ்ரீ சக்ரமே அம்பாளுக்கு ரதமாக இருக்கிறது என்று பார்த்தோமோ, அதுபோல மாதங்கிக்குரிய சக்ரமே மாதங்கிக்கு ரதமாக இருக்கிறது. கேய சக்ர ரதம் என்று பெயர். அந்த கேய சக்ர ரதத்திற்குள்தான் மாதங்கி இருக்கிறாள். அப்படி மந்த்ரிணீ ஸ்தானத்தில் இருக்கக்கூடிய ஷியாமளாம்பாள் லலிதா திரிபுரசுந்தரியை சதா காலமும் சேவித்துக் கொண்டிருக்கிறாள். பண்டாசுர யுத்தத்தில் மந்த்ரிணீயினுடைய ஸ்தானம் எங்கு இருக்கிறது. ரதம் எது? அந்த ரதத்தில் மந்த்ரிணீ எப்படி இருக்கிறாள். அம்பிகையினுடைய ஆணைக்காக, அடுத்து அம்பாள் என்ன சொல்லுவாள் என்று அம்பிகையினுடைய ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கிறாள். மேலே சொன்னதுதான் இந்த நாமாவினுடைய பொதுவாக அர்த்தம். ஆனால், இந்த நாமாவிற்கு சில உள்ளர்த்தங்கள் பார்க்க வேண்டும். இதற்கு முந்தைய நாமாவான சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதா என்று சொல்லும்போது, சக்ர ராஜம் என்கிற ஸ்ரீ சக்ரத்தைப்பற்றி பேசியதால், இதற்கு முந்தைய நாமத்தில் யந்த்ரத்தைப்பற்றி பார்த்தோம். அம்பிகையினுடைய உபாசனையில் மிகவும் முக்கியமானது ஸ்ரீ சக்ரம். அந்த ஸ்ரீ சக்ரம்தான் மகாமேரு என்று சொல்கிறோம்.
அந்த ஸ்ரீ சக்ரம், மகாமேரு எல்லாமே அம்பாளின் யந்த்ர சொரூபம். அந்த யந்த்ர சொரூபம்தான் அம்பாளின் ரதமாக இருக்கிறது என்பதை சென்ற நாமாவில் நாம் பார்த்தோம். அப்படிப் பார்க்கும்போது அந்த நாமாவானது நமக்கு யந்த்ரத்தை காண்பித்துக் கொடுத்தது. இப்போது உபாசனை என்று எடுத்துக் கொண்டால், அந்த உபாசனையில் மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியம். யந்த்ரம், மந்த்ரம், தந்த்ரம். இங்கு யந்த்ரம் என்பது நாம் உபாசனை செய்யக்கூடிய தேவதையினுடைய ஒரு ரூபம். இந்த ரூபமானது எதாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதாவது ஸ்ரீ சக்ரமாக இருக்கலாம். மஹாமேருவாக இருக்கலாம். அம்பிகையினுடைய ரூபமாக இருக்கலாம். அல்லது நம்முடைய குருநாதருடைய ரூபமாக இருக்கலாம். குருநாதருடைய பாதுகையாக இருக்கலாம். குருநாதருடைய பாதுகை கூட யந்த்ரம்தான். ஸ்ரீ சக்ரம் என்றால் ஸ்ரீ சக்ரத்தை மட்டுமே நினைக்க வேண்டியதில்லை. ஸ்ரீ சக்ரம் என்பதே அருவுருவம். அதாவது உருவமுமில்லை. அருவமும் இல்லை. இப்படி பல வழிகளில் ஸ்ரீ சக்ரத்தை வைத்து வழிபடலாம். அப்போது எதை நாம் பூஜிக்கிறோமோ, எதை வழிபடுகிறோமோ அதுவே யந்த்ரம். இப்படி வெளிப்புறமாக நாம் பூஜை செய்வது என்பது யந்த்ரம். இப்படி படிப்படியாக மேலே போகும்போது என்ன ஆகிறதெனில், எந்த யந்த்ரத்தை வெளிப்புறமாக நாம் பார்த்து பூஜித்தோமோ, வழிபட்டோமோ அது மெல்ல மெல்ல நமக்குள் வியாபிக்க ஆரம்பிக்கின்றது. நம்முடைய சரீரம், மனசு எல்லாமே அம்பிகையினுடைய ஸ்தானமாக மாறி, நாமே ஒரு கட்டத்தில் யந்த்ரமயமாக மாறி விடுகின்றோம்.
அதற்கடுத்து அது இன்னும் படிப்படியாக மேலே போகப் போக என்ன ஆகிறதெனில், நாம் யந்த்ரமாவது மட்டுமல்லாமல் நாம் பார்க்கக் கூடிய இந்த மொத்தப் பிரபஞ்சமே யந்த்ரமாக தெரிய ஆரம்பிக்கும். இந்த விஷயத்தை நாம் இதற்கு முன்பேயே பார்த்திருக்கிறோம். பாவனோபநிஷதத்தின் படி அந்த உபாசகன் இந்த சரீரத்தையே ஸ்ரீ சக்ரமாக பார்ப்பான். அதற்குப் பிறகு இந்தப் பிரபஞ்சத்தையே ஸ்ரீ சக்ரமாக பார்ப்பான். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அம்பிகையின் ஒரு வார்த்தை சொல்லுவார், ‘‘அமி யந்த்ர்… துமி யந்த்ரீ.. என்று சொல்லுவார்.’’ என்று வங்காள மொழி (Bengali) சொல்லுவார். அம்மா, நான் யந்திரம். நீ அந்த யந்திரத்தை இயக்கக்கூடிய யந்த்ரீ என்று சொல்லுவார். யந்த்ரத்தை எவள் இயக்குகிறாளோ அவளூக்கு யந்த்ரீ என்று பெயர். நாம் பார்க்கக்கூடிய இந்த சரீரம், இந்த மனசு, இந்த பிரபஞ்சம் எல்லாமே யந்த்ரமாக இருக்கிறது. இந்த யந்த்ரத்தை இயக்கக்கூடிய யந்த்ரீயாக இருக்கக் கூடியவள் அம்பாள். இதைத்தான் நாம் ஸ்ரீ சக்ரத்திலோ, அம்பிகையிடத்திலோ, குருநாதரிடத்திலோ அல்லது அவரின் பாதுகையிலோ பார்த்து உபாசிக்கிறோம். இப்போது இந்த உபாசனை என்பது வெறும் வெளிப்புறமாக (external) உபாசனையாக இல்லாமல், நாமே யந்த்ரமாக மாறுவது மட்டுமல்லாமல் இந்தப் பிரபஞ்சமே யந்த்ரமாக தெரிய வேண்டுமெனில், உடனே இது நடந்து விடுமா? இது நடக்க வேண்டுமெனில், அதற்கு சூட்சுமமாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டுமல்லவா… அப்போது இந்த process – இதை எது சாதித்துக் கொடுக்குமெனில், யந்த்ரத்திற்கும் நமக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பிறகுதான் நாம் யந்த்ரமாக மாற முடியும். அப்போது இந்த இணைப்பை யார் ஏற்படுத்துவார்கள். எது ஏற்படுத்துமெனில் மந்த்ரம் ஏற்படுத்தும்.(சுழலும்)
ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா
The post சக்ர நாயகியே எழுந்தருள்க! appeared first on Dinakaran.