?பௌர்ணமி நிலவில் ஆண்கள் மொட்டை மாடியில் படுத்து உறங்கக்கூடாது என்று கூறுவது எதனால்?

– வண்ணை கணேசன், சென்னை.

இதுபோன்ற கருத்துக்கள் சாஸ்திரத்தில் கூறப்படவில்லை. அந்த நாளில் மாடிவீடு என்பதே அபூர்வம். எல்லோரும் வெட்ட வெளியில்தான் படுத்து உறங்கினார்கள். மழை வந்தால் சத்திரம் மற்றும் சாவடிகளில் தங்கினார்கள். மற்ற நாட்களில் குடும்பத்தினர் அனைவருமே வெட்ட வெளியில்தானே படுத்து உறங்கினார்கள். இந்நிலையில் பௌர்ணமி நிலவில் ஆண்கள் மொட்டை மாடியில் படுத்து உறங்கக் கூடாது என்று சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் எப்படி சொல்லியிருப்பார்கள். இதுபோன்ற கருத்துக்கள் முற்றிலும் மூடநம்பிக்கையே ஆகும்.

?மனையடி சாஸ்திரம் என்றால் என்ன?

– மருதுபாண்டி, புதுச்சேரி.
மனையின் நீள அகல அளவுகள் தரும் பலன்களைப் பற்றி அறிவதே மனையடி சாஸ்திரம் ஆகும். ஆலயங்களை அமைப்பதற்கான சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் தோன்றிய இந்த கலை நாளடைவில் வீடு கட்டுவதற்கு உரிய அளவுகளைச் சொல்லும் வகையில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. தினசரி காலண்டர் அட்டையின் பின்புறம் மனையடி சாஸ்திரத்தின் படி அளவுகளையும் அதற்கான பலன்களையும் அச்சிட்டிருப்பார்கள். இது பொதுவான பலன் ஆகும். மனை அமைந்திருக்கும் திசை மற்றும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றவாறு வீடு கட்டும்போது மனை மற்றும் அறைகளின் அளவுகளை அமைத்துக் கொள்வது நல்லது.

?மாடிக்குச் செல்ல மாடிப்படிகள் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டுமா?

– கிருஷ்ணபிரசாத், சென்னை.
மாடியில் உள்ள பகுதியை நாம்தான் உபயோகப்படுத்துகிறோம் என்றால் வீட்டிற்குள்ளேயே இருக்கலாம். மாறாக மாடியில் மற்றொரு போர்ஷன் கட்டி அதனை வாடகைக்கு விடும் பட்சத்தில் வீட்டிற்கு வெளியே இருப்பதுதான் நல்லது. நம் வீட்டாரைத் தவிர மற்றவர்கள் மாடிப்பகுதியை உபயோகப்படுத்தும் பட்சத்தில் படிகள் என்பது வெளியில்தான் இருக்கவேண்டும். நம்மைத்தவிர வேறு யாரையும் அனுமதிக்கப் போவதில்லை எனும் பட்சத்தில் வீட்டிற்குள்ளேயே படிகளை அமைக்கலாம்.

?நிர்மால்யம் என்பது என்ன?

– சுதர்சன், ரங்கம்.
பூஜை அறையில் சுவாமி படத்துக்குப் பூக்களைப் போடுகிறோம். அடுத்த நாள் அந்த பூக்களை எடுத்து விடுகின்றோம். ஏற்கனவே போட்டு எடுத்த பூக்களை நிர்மால்யம் என்பார்கள். கோயிலிலும் சுவாமிக்கு போட்டிருந்த மாலைகளைக் களைந்தால் அந்த மாலைகளை நிர்மால்யம் என்பார்கள். இந்த நிர்மால்யங்களை நாம் ஒரு கூடையில் சேகரித்து, குப்பையில் சேர்க்காமல், ஓடுகின்ற நீரில் சேர்க்க வேண்டும்; அல்லது கால்படாத இடத்தில் சேர்க்க வேண்டும். நிர்மால்யத்தை கண்களில் ஒற்றிக் கொண்டு சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். கண்ட இடத்தில் வைப்பதோ, அசுத்தமான இடத்தில் வைப்பதோ கூடாது. அது தெய்வ குற்றம் போன்றதுதான்.

?பெரும்பாலான பிரச்னைகள் எதனால் தோன்றுகின்றன?

– பார்கவி ரெங்கராஜன், சேலம்.
வாயால்தான். வாயால் இரண்டு வேலைகளைச் செய்கிறோம். ஒன்று சாப்பிடுகிறோம். இன்னொன்று பேசுகிறோம். தவறான உணவை சாப்பிட்டால் உடல் கெடுகிறது. தவறான வார்த்தை பேசிவிட்டால் விவகாரமாகி எல்லாம் கெடுகிறது. இரண்டிலும் கவனம் தேவை. முக்கியமாக பேசும் போது கவனம் தேவை. உங்கள் வார்த்தைகளில் ஜாக்கிரதையாக இருங்கள். தவறாக பேசிவிட்டால். நீங்கள் மன்னிக்கப்படலாம் ஆனால், உங்கள் வார்த்தைகள் மறக்கப்படாது.

?நவகிரகங்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?

– கா.சுரேஷ் வைத்தியநாதன், சென்னை.
நவகிரகங்களைப் பற்றி நாம் சரியாக இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதைவிட, தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். நவக்கிரகங்கள் என்பது நம்முடைய வினைகளை தீர்மானிக்கின்ற கிரக நிலைகள். நவகிரகங்களுக்கு நவகிரக பதவி கொடுத்து, அந்தந்த வினைகளுக்கு தகுந்தவாறு நியாயம் செய்ய நியமித்திருப்பவன் இறைவன். எனவே தனியாக நவகிரகங்களை பூஜை அறையில் வைத்து வழிபடும் பழக்கம் இல்லை அதை யாரும் சொல்லவும் இல்லை.

?வாழ்க்கைக்கு மிக முக்கிய தேவை என்ன?

– கார்மேகம், திருப்பூர்.
பொறுமையும் மன வலிமையும்தான் முக்கியத் தேவை. எதுவும் முதலில் தாங்க முடியாது என்றுதான் தோன்றும். பிறகு பரவாயில்லை சமாளித்து விடலாம் என்று தோன்றும். பிறகு இந்த விஷயம் கடந்துவிடலாம் என்று தோன்றும். பிறகு இதற்காகவோ இத்தனை வருந்தினோம் என்று தோன்றும். இந்த உணர்வு வரும் வரை வலியை தாங்கும் வலிமையும் பொறுமையும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் வென்றுவிடலாம். இந்த வலிமையையும் பொறுமையையும் தருவதுதான் ஆன்மிகம். அதனால்தான் அருளாளர்களால், நமன் தமர் தலைகள் மீதே நாவலிட முடிந்தது (தொண்டரடிப் பொடியாழ்வார்). ‘‘காலா, உன்னை நான் சிறு புல் என மதிக்கிறேன், என் காலருகே வாடா, உன்னை சற்றே மிதிக்கின்றேன் (பாரதி) என்று பாட முடிந்தது.

?திருவாழியாழ்வான் என்றால் யாரை குறிக்கும்?

– சக்திவேல், வேலூர்
சக்கரத்தாழ்வாரைதான் குறிக்கும். பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம் பெருமாளுக்கே ஏற்படும் இடையூறு போல் எண்ணி விரைந்து வந்து காப்பவர் சக்கரத்தாழ்வார். பெரும்பாலான திவ்யதேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில் தான் பெருமாள் காட்சியளிப்பார். ‘மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை ‘திருவாழி ஆழ்வான்’ என்றும் ‘சக்கரத்தாழ்வான்’ என்றும் வைணவ சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர, சுதர்சனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் எட்டு (சுதர்சனர்), பதினாறு (சுதர்சன மூர்த்தி) மற்றும் முப்பத்திரண்டு (மகாசுதர்சன மூர்த்தி) கரங்களைக் கொண்டவராகவும் காட்சி தருகிறார்.

?களத்திர தோஷம் என்றால் என்ன? அதற்கு என்ன பரிகாரம்?

– அபிலாஷ், விருகம்பாக்கம்.
ஜாதகத்தில் லக்ன பாவகத்திற்கு ஏழாம் இடம் என்பதை களத்ர ஸ்தானம் என்று சொல்வார்கள். இது வாழ்க்கைத்துணையைப் பற்றி அறிய உதவும் பாவகம் ஆகும். ஏழாம் பாவக அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தால் களத்ர தோஷம் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாம் பாவகம் என்பது விருச்சிகம் ஆகும். இந்த விருச்சிக ராசிக்கு அதிபதி ஆகிய செவ்வாய் ரிஷப லக்னத்திற்கு மூன்றாம் வீடாகிய கடகத்தில் அமர்ந்தால் அது களத்ர தோஷம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இப்படி களத்ர தோஷம் இருப்பவர்களுக்கு மறுவிவாகம் செய்து கொள்ளும் அதிகாரம் உண்டு என்று சொல்லப்படுகிறது. இதுபோக ஒரு சிலருக்கு அதிக காமமோ, இச்சையோ இருக்காது என்றும் பலன் சொல்வார்கள். பெரும்பாலும் வாழ்க்கைத்துணையால் சந்தோஷம் என்பது அறவே கிடைக்காமல் அவதிப்படுபவர்களின் ஜாதகங்களில் இதுபோன்ற அம்சத்தினைக் காண இயலும். இதற்குரிய பரிகாரம் என்றால் தாமதமாக திருமணம் செய்வது மட்டுமே. விதியை யாராலும் வெல்ல இயலாது. நமது ஜாதக பலனை அறிந்துகொண்டு வாழ்க்கைத் துணையோடு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் மட்டுமே வெற்றி காண இயலும்.

அருள்ஜோதி

The post ?பௌர்ணமி நிலவில் ஆண்கள் மொட்டை மாடியில் படுத்து உறங்கக்கூடாது என்று கூறுவது எதனால்? appeared first on Dinakaran.

Related Stories: